புதன், 16 ஜூன், 2021

என்னை நோய்வராமல் காப்பாற்று

( ஒரு பற்றன் அம்மனிடம் வேண்டுவது.  இங்குக்

கடைக்கணித்தல் என்ற பதம் பயன்பாடு காண்கிறது). 


அம்மா-க  டைக்கணிப்பாய் அணைத்துக்கொள் என்னை;

ஆண்டருளே நோயினின்றே அகலவெனை வைப்பாய்!

இம்மா-நி லத்தவர்கள் தும்முதல்செய்    கின்றார்

இருமுகிறார் ஈயென்ன சளியைவழிக் கின்றார்

சும்மாவே  வீட்டினிலே வைகுதலைச் செய்யார்

சுற்றிவரு கின்றவரைச் சுருட்டியிருத் திட்டால்

எம்மாநோய் என்றிடிலும் எனையணுகல் மேவா(து)

இதைஎனக்கு  நயந்திடுவாய் இடறலறச் செய்யே.


அரும்பொருள்:

அம்மா கடைக்கணிப்பாய் -  அம்மா கடைக்கண் பார்ப்பாய்

அகலவெனை -  அகல என்னை

இம்மா நிலத்தவர் -  நாட்டினர்

ஈ என்ன -  ஈ என்ற ஒலியுடன்,

வைகுதல் - தங்குதல் ஓரிடத்து;

சுருட்டி இருத்திட்டால் -- சுருட்டி இருத்து,   இட்டால்

எம்மா நோய் -  எவ்வளவு பெரிய நோய்

நயப்பதிலே -  தருவதிலே.

இடறலற -  நான்  இடறுதல் இல்லாமல்.

எழுத்து மொழியும் பேச்சு மொழியும்

 சமஸ்கிருதம் போலும் மொழிகளில்  பேச்சுமொழி என்று ஒன்று தனியாக இல்லை.  பேசுவதாய் இருந்தால் எழுத்தில் எப்படி இருக்கின்றதோ, அதேபடிதான் பேசவேண்டும்.  சிதைத்துப்பேசினால் அது வழுவென்று ஒதுக்கப்படும்.  ஆனால் தமிழிலே  பேச்சுமொழி  தனியாக இலங்குகின்றது.  சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன் வாழ்ந்தவர்களும் இதைக் கொச்சை என்றனர்.  

 ஆட்டின்மேல் அடிக்கும் நாற்றத்தைக் கொச்சைநாற்றம் என்பதிலிருந்து கொச்சை என்பதன் உண்மைப் பொருளைக் கண்டுகொள்ளலாம்.   கொச்சு என்பது குழந்தை என்னும் பொருளதும்  ஆகும். ( குழந்தையை நல்லபடியாக குளிப்பாட்டி உரிய நறுமாவு பூசி உடுப்பிட்டுத் தொட்டிலில் கிடத்தினாலே ஏற்க இயலும் என்பதும் கருத்தாகலாம்).  கொச்சை என்பது இடக்கர் அன்று. (கெட்ட வார்த்தைகள் அல்ல ).

கொச்சை என்றால் திருத்தமற்ற பேச்சு என்று பொருள். திருத்தமின்மை என்று நினைத்ததால்  அது இழிதக்கது என்று முடிவு செய்தனர். இதற்கு மொழிநுல் அடிப்படை ஒன்றுமில்லை.  கோடிக்கணக்கான மக்கள் பேசும் ஒரு மொழியை எப்படி இழிதக்கது என்று இவர்கள் மிகு துணிகரமாகச் சொன்னார்கள் என்பது ஒரு புதிராக உள்ளது.  இதற்கு ஒரு காரணம் சொல்லவேண்டுமென்றால்  தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த சொல்வடிவங்கட்கு இப்பேச்சுச் சொல் வடிவங்கள் வேறாக இருந்தன என்பதுதான்.   ஆனால் வேறாக இருந்ததும் எழுத்துமுறைக்குள் அடங்காமையும் ஒன்று இழிதக்கது என்று முடிவுசெய்யப் போதுமான காரணங்கள் ஆகமாட்டா.

உலகில் வரிவடிவம் இல்லாத மொழிகளும் இருக்கின்றன.  அதாவது அவை ஒலிவடிவில் மட்டுமே உள்ளன.  ஒரு மொழி ஒலிவடிவில் மட்டும் இருப்பதில் இருக்கும் இழிவுதான் என்ன?  மலாய் ஒலிவடிவில் அருமையாக இயங்கும் மொழி. பின்னர் எழுதிவைக்க நேர்ந்ததால்,   உரோமன் எழுத்துக்களையும்  அரபி எழுத்துக்களையும் (ஜாவி)  பயன்படுத்தி வரிவடிவாக்கினர்.  மலேசியாவில் அது அரசு மொழியாக உயர்ந்த தகுதியில் கோலோச்சுகிறது.. உயர்வு இழிவு என்பதெல்லாம் ஒரு மனிதனின்  எண்ணத்தளவிலானது;  வேர்ப்படையற்ற வெறுமை  உடையதுதான்.  " தூர் இற்று இன்று அன்ன தகைத்து  ( நாலடியார்  138)"  என்று அதை வருணிக்கவேண்டும்.   இற்று - துருப்பிடித்தது ஆகி;   இன்று -   இல்லையான ;  அன்ன - அதுபோல்;  தகைத்து - தன்மையை உடையது .  

சில சிறந்த தமிழாசான்களும் இத்தகு கருத்தினை உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் காலத்தில்  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால் இன்று அக்கருத்து ஏற்புக்குரித்தன்று  என்பது தெளிவு. 

மக்கள்மொழி என்பது மக்களாட்சியின் ஓரமைப்பு  ஆகும்.  அம்மொழியில் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுதான்  மக்கள் எதையும் தீர்மானிக்கின்றனர் என்பதால் அதை இழிவென்று சொல்வது மக்களாட்சிமைக்கு ( ஜனநாயகத்துக்கு) ஒத்துவராத கருத்தாகும்.  அத்தகு கருத்துகள் கொண்டிருத்தல் ஒரு காலவழுவாகும்.

மலையாளமொழி முழுமையாக அப்போதிருந்த   அவ்விடத்துப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.   பேச்சுமொழியின் அழகில் மனத்தைப் பறிகொடுத்த எழுத்தச்சன் என்னும் புலவனால் வெற்றிப்பின்னணியுடன் முன் கொணர்ந்து அது  நிறுவப்பட்டது என்பதை மறுத்தற்கில்லை.  எழுத்துமொழியை  அடிப்படையாகக் கொண்டு பேச்சுமொழியில் அது தவறு, இது தவறு என்று சொல்லிக்கொண்டிருந்த புலவர்களை அவன் அப்பால் கடத்திவிட்டான்.  பையவே காணின், இது ஒரு பசும் புரட்சியே  ஆனது.

தமிழின் இனமொழிகள் தனிநாயகிகளாக மலர்ந்ததும் இவ்வாறுதான்.

எனவே அறிவுடைப் புலவன் என்போன்,  எழுத்துமொழியை அதிலுள்ள எழிலுக்கும் இயைபுக்கும் போற்றுவான்.  பேச்சுமொழியை  அதிலுள்ள எழிலுக்கும் பயன்பாட்டுக்கும் தலைமேற்கொள்வான்.  பயன் தெரிவோன் இரண்டனுக்கும் உள்ள தொடர்பினையும்  அறிவான். ஒன்று மற்றொன்றுக்கு உதவியதும் காண்பான்.  ஒலிகள் இயற்கையில் உள்ளன.  தெளிந்த அறிவினோன்  நாய் குரைப்பதும் பறவையின் பாட்டும் ஒன்றென்றே தரம் காண்பான்.  இவையனைத்தும் இறைவன் ஏற்றுக்கொண்ட அல்லது தந்துதவிய ஒலிகள்  அல்லது இயற்கை ஒலிகள். இவற்றுக்கு இழிவில்லை.  அழிவுமில்லையென்னலாம் -  உலகு அழிகாலம் உண்டேல் அது நிகழும்வரை. உம்மையும் கடந்து காலம் வருமட்டும் அழிவின்றி நிற்கும் எதையும் இழிவென்று உரைக்க எமக்கும் உமக்கும் நிற்புணர்வும்1 இல்லை. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


குறிப்பு:

1    நிற்புணர்வு >  நிற்புணர் >  நிபுணர் > [ நிபுணத்துவம். ]  (நிலையை உணர்கின்ற தன்மை.)

திங்கள், 14 ஜூன், 2021

காண்தருவம் காந்தருவம் (மணம்)

தொடங்குரை:

 தமிழ்மொழியானது  மிக்க நெடுங்காலம் பேச்சுமொழியாக இருந்துள்ளது. இன்றும் இலக்கிய வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு மொழியிலிருந்து தொடர்பும் பொருளும் கிட்டுகின்றன.  இது தமிழின் சிறப்புகளில் ஒன்றாகும். தமிழ்ச்சொல்லின் பொருளைத் தீர அறிந்துகொள்ள அதன் உலக வழக்கினை ஆராய்தல் பேருதவியாக உள்ளது.  

உலக வழக்கின் திறம்:

இதற்கு ஓர் எடுத்துக்காட்டினைக் கூறலாம்.  தமிழ் என்று ழகரத்தை நாவினால் உளைப்பதற்கு இயலாத படிப்பறிவில்லாதவன் ஒருவன்,  தமில் என்று சொல்கிறான்.  அவனுக்கு ழ் என்ற எழுத்தை  நாவேற்றுதற்கு இயலவில்லை.  இந்தச் சொல்லை மூலமாக எடுத்துக்கொண்டு, அறிஞர் கமில் சுவலபெல்,  தம் + இல்  மொழி என்று மேற்கொண்டு,  இல்லத்து வழங்கிய மொழி என்பதே அப்பெயரின் அர்த்தம் என்று முடிவு செய்கிறார்.   

தமிழர்கள்  றகரம் இரட்டித்து  வருதலைத்  முறையாகப் பலுக்கினார்களில்லை. சிற்றம்பலத்தைச் சித்தம்பரம் என்று உச்சரித்தே, இடைக்குறைத்துச் சிதம்பரம் என்று ஊர்ப்பெயர் ஆக்கினர் என்று சொல்லின் செல்வர்  ரா. பி. சேதுப்பிள்ளை முடிக்கிறார்.   சிதம்பரம் என்னும் சொல் வழக்கிலிருந்தே நாம் அறிந்துகொள்ளுமாறு வரலாறு அமைந்துள்ளது காணலாம்.

தொல்காப்பியர் வழக்கு செய்யுள் இரண்டையும் ஆய்ந்தார்.  வழக்கு இரண்டு வகைப்படும். உலக வழக்கு, செய்யுள் வழக்கு என.  எனவே பேச்சு மொழியை உள்ளடக்கியதே உலக வழக்கு. அதை முற்றிலும் விலக்கிவிட்டு ஆய்வு செய்கிறோம் என்று சொல்லுதல் அறியாமையிற் பெரிதென்பதை  நுட்பமாக அறிந்துகொள்ளலாம்.

தமிழுலகின் விரிவு

தொல்காப்பியர் காலத்தில் கவிஞர்கள் பாவலர்கள் பலர் இருந்திருப்பர். தன் சிற்றூரில் வாழும் ஒரு கவிஞன் ஒரு பாடலை இயற்றி,  உழுதுகொண்டிருக்கும் போதோ வண்டி ஓட்டும்போதோ பாடலாம்.  அதை வெளிப்படுத்தி உலகினர் சுவைக்கும்படி செய்வதற்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவு.  அவன்றன் ஊராட்சியாளன் பாப்பற்றனாய் இருந்தால்  அவன் சமைத்துண்ணக் கொஞ்சம் நெல் ஈந்து புரப்பான் (ஆதரிப்பான்). அவனைவிடப் பெரிய நிலக்கிழானைத் தேடிப் போகவேண்டும்.  அப்போது ஒருவேளை ஒரு வாரத்துக்கு உள்ள உணவு கிடைக்கும்.  "உலக வழக்கு என்பதை பாவலர்களையே குறித்தது, மக்களைக் குறிக்கவில்லை"  எனின், ஊருக்கு ஒருவனாக இருந்த பாடலர்களின் மொத்தத் தொகை 50 அல்லது 100 என்றால்,  தமிழுலகு என்பது அவ்வளவுதானா? பரங்குன்றில் ஒரு பாடலன் இருந்தானாம்.    (தேவாரம் 876.1).  அவன் முருகனாக இருந்திருப்பான். அவன் மனிதனானால் பரங்குன்றம் அனைத்துக்கும் பாடலன் ஒருவன் தான் என்று பொருள்படும். அல்லது பா இயற்றுவோர் ஓரிருவர்  அங்குச் சென்று பாடிவிட்டு இறையுணவு (பிரசாதம் ) உண்டு திரும்பி இருப்பர். ( பாடல் பெற்றவன் முருகப் பெருமான் என்று வைத்துக்கொள்ளுங்கள். மறுப்பொன்றும் இல்லை ).  எனவே உலக வழக்கு  என்று சொன்னது மக்கள் மொழியைக் குறித்ததென்பதில் ஐயமொன்றும் இல்லை. ( கருத்தை மறுத்துப் பின்னூட்டம் செய்க. ) அது பரவலாக எழுத்திலாயினும் பேச்சிலாயினும் பயன்பட்ட மொழி.

காந்தருவம் என்ற சொல்.

காந்தருவம் என்ற சொல்லை இன்று ஆராய்வோம்.  காந்தருவ மணத்தில் ஆடவனும் பெண்ணும் பெற்றோர் ஏற்பாடும்  அறிதலும் யாதுமின்றி, காதல் வயப்படுகின்றனர்.  பின்னர் யாரிடமும் அறிவிக்காமலே மணந்துகொண்டு சகுந்தலை போல் வாழ்க்கையைத் தொடங்கிவிடுகின்றனர்.  இத்தகைய மணத்தைப் பழைய இலக்கியங்கள் காந்தருவம் என்று குறிக்கின்றன.

காந்தருவம் என்பதைச் சில வகைகளில் ஆராய்ந்து வெவ்வேறு முடிவுகளை எட்டலாம்.  சில நூல்களிலும் பிறராலும் சொல்லப்படுவன  அவை.  இவற்றுள், யாம் கண்டு விதந்து முன்வைப்பது இதுவாகும்:  வருமாறு.

காண்  தருதல்  -  கண்டவுடன் தன்னைத் தந்துவிடுதல். மணந்தோர் இருவரும் அவ்வாறு ஒருவரை ஒருவர் தந்து இணைகின்றனர்.

காண்தரு + அம் >  காண்தருவம் > காந்தருவம்.

அதாவது கண்டதும் காதலும் மணமும்.

அடங்குரை

இச்சொல் தமிழ் மூலங்களை உடையதாகவே முன் நிற்கின்றதென்பதை அறியலாம்.

இதை முன்னும் சொல்லியுள்ளோம். அவ்விடுகை இங்குக் கிட்டவில்லை.

காந்தம் என்ற சொல்லுடன் தொடர்புறுத்துதல் கூடுமெனினும் அது அணிவகையாய் முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்..