திங்கள், 7 ஜூன், 2021

கோவிட் நோய் - ஏனெடுத்தோம் இப்பிறவி.

வெண்பா 


பொதுமுடக்கம்  போனநாட்  சொப்பனம் என்றால்

இதுபிறவி  யாகஏற்  பேனோ  ----- மதுவறவும்

 வண்டுபூ  நாடிடுமோ வாழ்நாளிற் கூடாநாள்

என்றுபோம் கோவீ    திடர்..


பொருள்:

போனநாட் சொப்பனம்  -  முன்பிறவியில் கண்ட கனவில்,

பொதுமுடக்கம்  -  ஊரடங்குபோல நாடு முடங்கிக் கிடக்கும் நிலை, 

என்றால் ---  (வந்து நாம் துன்புறுவோம்)  என்றால்,

இது பிறவி  ஆக  -   இது   அடுத்த பிறவியாய் நான் பூமிக்கு வர, 

ஏற்பேனா  -  கடவுளிடம் ஒப்புக்கொள்வேனோ, மாட்டேன்;

மதுவறவும் -- மது அறவும் ---  தேன் இல்லாவிட்டால்,

வண்டு பூ நாடிடுமோ  -   வண்டு மலரை நாடுவதில்லை;

வாழ்நாளில் கூடா நாள் -  வாழும் காலத்தில் இது கெட்ட காலம்;

கோவீ திடர் -   கோவீது  இடர் -  கோவிட் என்னும் இந்த நோய்(த் தொற்றுப் பரவல்,)

என்று போம்  -   என்று தொலைந்து பழைய நிலை வரும் 

என்றவாறு.

கட்டற்ற காலமே தேனுக்கு உவமை.  தடைகள் இல்லாமையே தக்கது,  ஆனால் இப்போது இயலாது.

வாசித்தறிய:

Pl click HTML address to reach the materials.  Happy reading.

சொப்பனம்:  சொல்லாய்வு:  https://sivamaalaa.blogspot.com/2017/06/blog-post_27.html

மது : https://sivamaalaa.blogspot.com/2021/04/blog-post_21.html

வதனம் :  https://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_21.html

மது உண்போர்  https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post.html

தேன் மது:   https://sivamaalaa.blogspot.com/2016/10/blog-post_27.html

மன்மதன்  https://sivamaalaa.blogspot.com/2018/06/blog-post_12.html

Your comments :  We value them.

மெய்ப்பு பின்.

-----------------------------------------------------------------------------------------


Pl feel free to point out errors such as typos etc. If not, we will correct 

them when we next visit / spot them.  Thank you. 

--  Admin


புதன், 2 ஜூன், 2021

மருங்குல், மத்தி என்ற பதங்கள்.

முன்னுரை 

மருங்குல்,  மத்தி என்ற பதங்களையும் அதனுடன் தொடர்புடைய ஒரு சிலவற்றையும் இன்று ஆய்ந்தறிவோம்.  இவ்வாறு ஆய்வு செய்யச்செய்ய சொல்லமைப்பு நெறிமுறைகள் சிலவற்றைக் கைவரப்பெறுவோம் என்பது உறுதியான பயன் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.  மட்டுமின்றி, தமிழ்மொழியின் தனித்தன்மையையும் நாம் உணரும் வாய்ப்பு உண்டாகும். மொழிநூலார் இருவரின்1 கருத்துப்படி,  தமிழ் என்ற சொல்லே தம்+இல் என்ற இரு சொற்களின் கூட்டு என்று கூறப்பட்டாலும்,  இவர்கள் இவ்வாறு கூறுமுன் தமிழ்ப் புலவர்கள் கருதிய " தமி+ இழ் = தனித்தன்மை உடையது" என்ற சொல்லமைப்பு விளக்கமும் பொருந்துவதாகவே நாம் ஒப்புக்கொள்ளவேண்டி உள்ளது. தமிழ் என்பது பல்வேறு வகைகளில் விளக்குதற்கு இடந்தரும் சொல்லாகும். சொல்லமைந்த இடத்திலும் காலத்திலும் நாம் அருகில் நின்று கேட்டுக்கொண் டிருந்திருந்தா லன்றி, எதுதான் அமைப்புவிளக்கம் என்று அறிந்துவிடமுடியாது.  தமில் என்பது தம் இல்லமொழி என்று விளக்குதற்கு வசதியான சொல்தரவு. மற்றதை மேல் கண்டோம்.  கீழ் வரும் விளக்கத்தில் ஆயப்படும் சொற்களில் தனித்தன்மை காணப்படுகிறதா என்பதை நீங்கள் கண்டறிந்து கொள்வீராக.

மருங்குல்  என்பது:

மருங்குல் என்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு " இடை " என்று பொருள்.  இங்கு யாம் சொல்லும் இடை,  முதலும் அல்லாமல் கடையும் அல்லாமல் இடையில் அல்லது நடுவில் இருத்தல் ஆகும்.

மருங்குல் என்பதோ மருவுதல் குறிக்கும் மரு என்னும் அடிச்சொல்லிலிருந்து வருகிறது.  மருவுதலாவது தழுவுதல்,  இருபுறமும் பொருந்துதல் என்னும் பொருளினைத் தரவல்ல சொல்.

ஒரு குச்சியில் ஒரு கடைசியையும் இன்னொரு கடைசியையும் அதன் நடுப்பகுதி மருவிநிற்கின்றது.  அல்லது பொருந்தி நிற்கின்றது.  இது புரிகிறதன்றோ?  அது அவ்வாறு மருவி நிற்பதனால்தான் அது நடுவில் இருக்க முடிகிறது. குச்சி இரண்டாக ஒடிந்துவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அந்த மருவல் முடிவுக்கு வந்துவிட்டது.     

இச்சொல்லில் வரும் குல்  என்ற அடிச்சொல்,  குலை (வாழைக்குலை) என்பதில் வரும் சொல்தான்.  குல் என்பது இணைந்திருத்தலைக் குறிக்கும்.  இரண்டு தலைகளும் ( தலைகள் என்றால் இறுதிகள் என்று இங்கு பொருள்)  இணைப்புற்று உள்ளன என்று பொருள். 

ஆக மருங்குல் என்ற சொல்லினை இப்போது புரிந்துகொண்டீர்கள்.

மருங்கு  -  பக்கம்:

மருங்கு என்பது இன்னொரு சொல்.  இதுவும் மரு என்ற அடிச்சொல்லிலிருந்து புறப்படுகிறது.

மருங்கு என்பது இறுதி,  ஓரம் என்று பொருள்படும். இந்த ஓரங்களும் நடுவுடன் இணைந்துள்ளன.  மருவியே நிற்கின்றது.  இல்லாவிட்டால் அவை ஓரங்களாக இருக்கமுடியாது.

மருத்து,  மத்து, மத்தி:

இரு ஓரங்களையும் மருவி  நிற்பது மருத்து.  து என்பது இங்கு உடையது, உடைத்து என்று பொருள்.  இந்த மருத்து இடைக்குறைந்து,  மத்து, மத்தி என்றாயின.  மத்தி  என்பது கடைசிகளை மருவி நிற்பதே.  மருத்து -  மருவுதலை உடைய நடுப்பகுதி.   இதில் வரும் இகரம் விகுதி.( மருத்து + இ ).

வெகு நீண்ட காலம் வழக்கில் அல்லது பயன்பாட்டில் இருந்த மொழி தமிழ். இதன் காரணமாக பல இடைக்காலப் பயன்பாட்டுச் சொற்கள் அழிந்தன. சாமிநாத ஐயரும் அவர்போன்ற பிற உழைப்பாளர்களும் செய்த மீட்புப்பணியினால் இலக்கியங்கள் இன்று உள்ளன.  அவை முழுமையன்று. பழையன கழிந்தவை  கழிந்து தொலைந்தவைதாம்.  மருத்து2 என்பது போலும் சொற்களை மீட்டெடுக்க இன்றும் இயல்கின்றது.

அறிக மகிழ்க.

அடிக்குறிப்புகள்:

1.   இரு மொழிநூலார்: கமில் சுவலபெல், மற்றும் தேவநேயப்பாவாணர்.

2.   மருத்து -  காற்று என்பது இன்னொரு சொல்.  காற்றும் பொருள்கள் மனிதர்கள் என்று எங்கு இடைவெளியிருந்தாலும் புகுந்து செல்லும் ஆற்றல் உள்ளது. இதன் மையக் கருத்தும் இடை என்பதுதான்.


மெய்ப்பு பின்னர்


விரட்டாமல் ஓடிப்போன விருந்தாளி

 எறும்பே எதனைத் தேடுகிறாய்

எனதே கணினித் தொடுபரப்பில்

கரும்போ வைத்து மறந்தனைநீ

கடுகி ஓடினை அங்குமிங்கும்.


கரப்பான் பூச்சிகள் வருவதினும்

கருப்பர் எறும்பே நீவருவாய்

திறப்பேன் மிட்டாய் முடியினையே

தின்பாய் தொல்லை செய்யாமலே,


இனிப்பை வேண்டி அண்டினைநீ

இருக்கா தெங்கே மறைந்தனையோ?

தினற்கே இங்கு விரைந்தனைபின்

தேடித் தின்னா தோடிவிட்டாய்!