திங்கள், 29 மார்ச், 2021

களைக்கொட்டும் களைக்கொத்தும்

 மேற்படி இரு சொல்வடிவங்களும் சரியானவை தாம்.

கொட்டு என்பது சற்று வன்மையையும் கொத்து என்பது குறைவான வலிமையுடன் குத்துவதையும் பண்டை குறித்திருத்தல் வேண்டும் என்று தெரிகிறது.  ஆனால் இன்று இவ்விரு பதங்களிடையே நிலவும் வேறுபாடும் மறைந்து  இரண்டும் ஒருசொல்லேபோல் மக்களிடை வழங்குகின்றன.

எனவே  "-ட்டு" என்று முடியும் சொற்கள் திரிந்து "த்து" என்று முடிவுறின்-- பொருள் வேறுபடாவிடில் -  அவற்றைப் போலி என்றே கொள்ளுதல் வேண்டும். திரிந்து வேறுபொருள் குறித்தலுற்றவை பல.  ஓர் எடுத்துக்காட்டு:

முட்டு  >  முத்து.   ( முட்டி வெளிவருவது என்பது அடிப்படைப் பொருள்).

முத்து > முத்தம் என்றும் சொல் தோன்றியிருப்பதால்,  முத்து என்பதும் முத்தம் என்பதும் மென்மைத் தொடுதல்.  முட்டு என்பது வன்மைத் தொடுதல் என்பது அறிக.  அடிப்பொருள் தொடுதலே.

நத்து நட்டு என்பவும் ஆய்வுசெய்யற்குரியவை.  நத்துதல் -  மெல்ல ஒட்டிச் செல்லுதல் குறித்தது.  நத்து > நத்தை : இது மென்மையாய் ஒட்டி நகரும் உயிரி. நட்டு என்பது எச்சமாயினும்,  நடு > நட்டு என்று வந்து,  வன்மையே குறிக்கும்.

இவ்வேறுபாடுகட்குக் காரணம் யாதெனின் வன்மை மென்மையே.  ஆயினும் இரண்டும் வல்லின எழுத்துக்கள் பயின்றன என்பதிலோர் ஒன்றுபாடு இருப்பினும் அவை தம்முள் ஒன்று வன்மையும் இன்னொன்று மென்மையும் உடையனவாகும் என்பதறிக.

டகரம் காட்டும் வன்மை, இட்டு - பட்டு என்பவற்றிலும் ( எச்ச வடிவிலும் அல்லாத வினைப்பகுதி வடிவிலும் ) அறியலாம்.  இத்து, பத்து என்பவற்றில் வல்லொலி தாழ்வடைந்தது அறிக.

ஆகவே வல்லொலிகளைக் மிகுவல்லொலி தாழ்வல்லொலி என்று பிரித்து உணரவேண்டிய நிலை ஏற்படுகிறது.

அறிந்து மகிழ்க.

மறுபார்வை பின்.

ஞாயிறு, 28 மார்ச், 2021

ஊர்மக்கள் யாவரும் அடையும் முருகப்பெருமான்.

 ஏதேனும் செய்வடி வேலவனே --- நேற்று

நீதானே என்னுளம் பாதிகொண்டாய்!

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- என்

காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.


மாதோடும் வாராமல் வேலோடும் வந்தாலும்

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ---- இதில்

சூதேதும் இல்லையே சுந்தரப் பங்குனி

ஊரோடும் அடைவது உனையன்றி யார்?




படம்:  உதவியவர் - திரு. கருணாநிதி ஜீ


பொருள்:

ஏதேனும் செய்வடி வேலவனே ---  எனக்கு எதாவது ஓர் உதவி செய்,  முருகப்பெருமானே;

நேற்று நீதானே என்னுளம் பாதிகொண்டாய் ---     முன் தினம் எனது மனத்தினில் ஒரு பகுதியை  எடுத்துச் சென்று விட்டாய்; ( இதயத்து மறுபாதி தவிப்பில் உள்ளது),

காதேனும் உன்னிசை கேட்கவேண்டும் --- எடுத்துச் சென்ற பின்னர் ஒன்றும் நிகழவில்லை;  ஆகையால் உன் இசை என் செவிகளிலாயினும் வந்து படவேண்டுமே;

என் காலே    உன்பால்கொண்டு சேர்க்கவேண்டும்.  --(  நீ இருக்கும் தொலைவில் வந்து உனைக்காண,) என் கால்கள் என்னைக் கொண்டுபோகவேண்டும்; அவற்றுக்கோ வலுவில்லை.  அதற்கு நீ அருள்புரிக ) .  இவற்றுள் எதுவும் நடைபெறவில்லை என்பது.

மாதோடும் வாராமல் -- நீ வள்ளியோடு கூடி என் இடத்தை அடையாமல்,

வேலோடும் வந்தாலும் ---  வேல்மட்டும் கொண்டு இவ்விடத்தை அடைந்தாலும்; ( வேலோடும் - உம் வருவதால் மயிலினோடும் என்று இயைக்க).

நாதேடிப் புகழ்பாடும் நாயகன் நீ ----  என் நாவினால் தினமும் துதித்துத் தேடி  நான் ஏத்தி இசைப்பது நாயகன் ஆன உன்னைத்தான்;

இதில் சூதேதும் இல்லையே --- இச்செயலில் மாறுபாடுகள் எவையும் இல்லை அல்லவோ?

சுந்தரப் பங்குனி  ---  அழகு காட்டும் இந்தப் பங்குனி மாதத்தில் , 

ஊரோடும் அடைவது உனை--- ஊர்மக்கள் யாவரும் மொத்தமாகக்  கண்டு ஆனந்திப்பதும்  உன்னைத்தான்;

அன்றி யார்?  --  இப்போது முருகனாகிய உன்னையன்றி வேறு யாரையுமில்லை .

(ஆகவே எனக்கும் அவ்வருளைத் தருவாயாக  என்றவாறு).

தலைப்பில் "ஊர் முழுதும்" என்றால்  ஊர்மக்கள் அனைவரும் என்றும் ,

"  அடையும்" -  அருளைப் பெறும் என்றும் அறிக.

இப்பாடலின் உள்ளடியான கருத்து, ஊரில் அனைவரும் பங்குனி உத்திரத்தில் பற்றுடன் நின்று அவன் அருளை  அடைந்தனர் என்பதுதான். இப்பாடல் வரிகள் யாம் சிந்திக்காமல் தாமே வழிந்தன.  அவற்றின் பொருளை யாம் எழுதியபின் உணர்ந்து கொண்டேம். உணர்ந்தவாறு பொருளைத் தந்துள்ளேம். இது அவனருளைப் பளிச்சிடுகிறது. முருகன் புகழ் வாழ்க. எல்லாப் புகழும் முருகப் பெருமானுக்கே.  





சனி, 27 மார்ச், 2021

பங்குனி உத்திரத்தில் வேலன் வருவான்

 

பங்குனி உத்திர    மென்றால் --- நம்

பாரெங்கும்  வந்திடும்  வேல்முரு கன் தனை,

தங்கிடு வீட்டிலென் போமே ---  ஒளித்

தங்க நிறத்தட்டில் உண்டிடச் சொல்வோம்.


உறவினர்  நட்பினர் வந்து  ---- உடன்

உட்கார்ந்தும் நின்றுமே சாமிகும் பிட்டுத்

திறமுடன் செய்யலங் காரம் --- கண்டு

தீராத பற்றொடும் சேர்ந்தாடி உய்வார்!  


வள்ளி   யுடன்வடி  வேலன் ---  வர

வாசலி லும்வரை ஓவியக் கோலம்

சொல்லவும் கூடுமோ சூழல் --- எல்லாம்

சுந்தர மாக்கிடும் உந்தும் மனத்தில்.


பங்குனிப் பங்கினைச் செய்வோம் ---  பால்

பொங்கிடும் மாலைகள் எங்கணும் பூக்கள்

தங்கி மணந்தரும் வாழ்வும் ----  அணி

மங்கலம் மாட்சி மனைமுழு தோங்கும்.


படம் : உதவியவர்  திரு கருணாநிதி ஜீ.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்