சனி, 19 டிசம்பர், 2020

சொத்து உடைமை, செல்லுபடி, சோலி (ஜோலி) உடைமை

 இதனை பற்றி நன்கு அறிந்து கொள்ள இவ்விடுகைகளையும் படித்தறியவும்.

சொந்தம் சுதந்திரம் :  https://sivamaalaa.blogspot.com/2015/12/blog-post_22.html

சொம் - சொந்தம் - சொத்து. https://sivamaalaa.blogspot.com/2016/05/blog-post_29.html

ஒருவனுக்கு எந்தப் பொருளும் சொந்தமில்லையானால் அவன் வெறும் அற்றைக் கூலியாளாக இருக்கவேண்டும்.  ஒரு விவசாயியிடம் போய் கூலிவேலைக்கு அன்றன்றைக்கு உழைத்து விவசாயி தரும் உணவினை உண்டுவிட்டு, அங்கு வேலை இல்லையென்றால் இன்னொருவனிடம் அதேபோல் வேலை செய்துவிட்டு, மனைவி பிள்ளைகள் இருந்தால் கிடைக்கும் உணவினை அவர்களுக்கும் கொடுத்து உயிர்வாழ்பவன் அவன்.

ஒரு செம்மையான மனிதன் எனில் நிலமும் வருமானமும் இருக்கவேண்டும். அதனால் கிட்டிய அதிகாரமும் இருக்கவேண்டும்.  ஆடு மாடுகள் இருக்கவேண்டும். மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்ற பொருளும் உள்ளது.

செம்மை என்ற சொல்லின் ஒரு பகுதியாகிய செம் என்பதே  சொம் என்று திரிந்தது.   செம்பொருள் என்பது சொம்பொருள் என்றும் திரிந்து வழங்குவது காண்க. செம்பாதி என்பது சொம்பாதி ஆகும்.

செம் என்பதோ ஓர் இருபிறப்பிக் கிளவி ( கிளவி என்றால் வார்த்தை )..  அதன் முந்து வடிவம் செ அல்லது செல். நிலம்,  வீடு, மாடு கன்று ஆடு நாய் என்பன உடையவன் செல்லுபடியாகத் தக்கவன்.  அவன் எதுவும் சொன்னால் அது செல்லும்.   செ,  செல், செம் என்பன தொடர்புடையவை.  நிலத்தாலும் விளைச்சலாலும் வாழ்ந்த பண்டை மன்பதையில் செம்மையானவன்,  செம் என்ற நிலையை எய்தியவன் சொம் உள்ளவன்.

சொம் >  சொம் + து  >  சொ + து > சொத்து.

நிலம் முதலியவை,  தம் சொம்  ( இதை முறைமாற்றி )  சொம்+ தம் > சொந்தம் ஆகும்.  அவன்பொருட்கள் அவன் சொந்தம். அவன் குடும்பத்திலிருந்து கிளைத்துத் தனிக்குடும்பமானோர்,  அவன் " சொம்+ தம்" ( சொந்தம்).

விளைச்சலின் பகுதி,  சொம்பாதி என்று குறிக்கப்பட்டது.  உடைய ஆள்  சொம்மாளி எனப்பட்டான். 

இன்னும் சொல்லப்போனால்,  சொத்து இருந்தவன் பேச்சுரிமை உடையவன் ஆனான்.  செல்லும் வாய் ஒலியேதான் சொல்.   செல் > சொல்.  செம்> சொம்.

செம்பாதி -  சொம்பாதி.

பதிதல் வினைச்சொல்.  பதி  என்பது முதனிலை நீண்டு பாதி ஆகும். ஒருவன்பால் பதிவுற்ற  பொருட்களே செம்பாதி/ சொம்பாதி  ஆகும்.  பகுதி என்ற சொல்லும் பாதி எனவரும். என்றாலும் அது வேறுசொல்.  பதி > பாதி என்பது இங்கு உரிமையாய்ப் பதிவுற்றது என்பதே இது.  இடு > ஈடு என முதனிலை திரிதல் காண்க.

சொத்து என்று சொல்லிக்கொள்ளப் பொருளுடைமை,  சொல் > சொ > சொத்து எனினுமாம்.  சொல்லிக்கொள்ளும் தகுதியுடைமை:  சொல் > சொல்+ இ = சோலி உடையவன்:  அதாவது சொத்து உடையவன். பெயர் உடையவன். அதாவது இல்லாரிடமிருந்து பெயர்த்தறியத் தக்கவன்  பேறு உடையவன். பேரும் உடையவன்.

இவற்றை கூர்ந்துணர்ந்து கொள்ளுங்கள்.

மகிழ்வீர்.

நோயிலிருந்து காத்துக்கொள்க. 


குறிப்பு:

சொல் > சோல் > சோல் இ > சோலி  ( ஜோலி என்பது பின்னைத் திரிபு).

மெய்ப்பு பின்



வெள்ளி, 18 டிசம்பர், 2020

எத்தனித்தல்

 எத்துதல் என்பது தமிழ் அகரவரிசைகளின்படி  ஏய்த்தல் என்பதாம்.

"எத்தித் திருடும் அந்த காக்கை -- அதற்கு

இரக்கப் படவேண்டும் பாப்பா"

என்பதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். ஆனால் பேச்சு வழக்கில்  இன்னொரு பொருளும் இருந்தாலும், அந்தச் சொல்லை அப்பொருளில் பயன்படுத்துவோரே அதைத் தங்கள் நினைவுகளிலிருந்து மீட்க முடியவில்லை போலும். " அவன் காலால் எத்தியதில் ஒரு பல விழுந்துவிட்டது" என்ற பேச்சு வாக்கியத்திலிருந்து இதை உணர்ந்துகொள்ளலாம்.

"இந்த வண்டி இன்னும் ஒருமணிக்கூறுகொண்டு திருவனந்தபுறத்து எத்தும் " என்ற மலையாள வாக்கியத்தில், எத்தும் என்பது சென்றடைதலைக் குறிக்கிறது.

அகரவரிசைக்காரர்களும் நிகண்டுகளும் ஒரு சொல்லின் எல்லாப் பொருள்களையும் கூறிவிடுவதில்லை.  அடிசறுக்குவது மனித வலிமைக்குன்றுதலையே காட்டுகிறது.

எத்துவது என்பது உதைத்தல் என்ற பொருளில் இன்னும் வாழ்கிறது. இப்போது இச்சொல்லைப் பயன்படுத்துவோர் குறைவுபோலும்.  "கிக் பண்ணிவிட்டான்" என்பர்.

எத்துதல் என்பது உண்மையில் ஒத்துதலே. கால் சென்று ஒத்தித் திரும்புகிறது. எகரம் ஒகரமாகும் என்பதை முன்னர்க் கூறியுள்ளோம்.  எ-ஒ திரிபு.

எத்துதல் -  அடைதல், சேர்தல். ஒத்துதலும் அதுவன்றி வேறில்லை.

ணகரம் னகரமாகும் என்ற எம் இடுகைகாண்க. இவ்விதிப்படி, அணித்தாகுதல் என்பது அனித்தல் என்று திரியும்.

எத்த -  சென்றடைய,

அனித்தல் -  அணிமையாகுதல்.

எத்தனித்தல் என்பதன் பொருளறிந்தீர்.

இதை யத்தனித்தல் என்றும் எழுதுவர். அகர வருக்கம் யகர வருக்கமாய் நிகழ்வதுண்டு.   ஆனை -  யானை ;  ஆக்குதல்  -  யாத்தல் என்பதும் அறிக. (ஆ- யா.)  ஆங்கு  - யாங்கு.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 



புதன், 16 டிசம்பர், 2020

னகரம் ணகரமாகத் திரியுமா?

 திரிபுகள் பற்றி அறிந்துகொள்வதற்குப் பல்கலைக்கழகத்துக்குப் போகலாம். அங்கு வாத்தியார் அவர் அறிந்தவற்றை அறிவித்து மகிழ்வார். தேர்வில் அவர் அறிவித்தவற்றில் பாதியைச் சொல்லமுடிந்தாலும் நீர் தேர்ந்தீரென்று ஒரு தாளில் எழுதிக்கொடுக்க அதுவே உம் சான்றிதழாக உம்வாழ்வில் மலரும். இருநூறு ஆண்டுகளின் முன்பானால் அவரே எழுதிக்கொடுத்தால் கதை அத்துடன் முடியும்.  இப்போது காலக்கடப்பினால் அதை அவர் செய்வதற்கும் பதிலாண்மை நடைமுறைகள் (Proxy procedures) உள்ளன. அதன்படி உம் தேர்ச்சி அறிவிக்கப்படும். இக்காலத்தில் இன்னொரு வகையிலும் அறிந்துகொள்ளலாம்.  அதைக் காப்பி ( குளம்பிநீர்)க்  கடையிலோ  ,  கடைத்தெருவிலோ அறிந்துகொள்ளலாம். முயற்சி திருவினை ஆக்கும். எந்த வகையானாலும் முயற்சிதான் தேவை. அதுவே உயர்வை  ( திருவினை)த் தரும்.

இன்று தமிழென்பது பேச்சில்தான் வாழ்கிறது.  அதுவும் பெரிதும் இல்லத்தினுள் வாழ்கின்றது. எழுத்துத் தமிழுக்கு வலு குறைந்து வந்துகொண்டே உள்ளது. அதற்குப் பலவிதமான ஊக்குவிப்புகள் தேவைப்படுகின்றன. இலக்கண நூலொன்று பத்துப் படிகள் (பிரதிகள் ) வெளியிட்டால் விற்றுமுடிக்க ஐம்பது ஆண்டுகள் ஆகலாம்.

மூன்று என்ற சொல்லில் னகர ஒற்று வருகிறது.   ஆனால் பேச்சுமொழியில் (னகரம்)   மூணு என்று பலுக்கப்பட்டு,  ( னகரம்)   ணகரமாகிவிடுகிறது. ஒன்று என்பது அதுபோலவே  ஒண்ணு ஆகி,  மற்றொன்றாய் வருகிறது

அணுக்கம் என்ற சொல்லின் அடிவினைச்சொல்  அணுகு(தல்) என்பது.   அனுபந்தம் என்ற சொல்லில் 

அணுகு >  அணு :> அனு. ஆகும்.

பந்தம் என்பதைப் பார்ப்போம்.

பன் + து + அம் =  பந்தம்.  இந்த எழுத்துப்புணர்ச்சி,  பின்+தி > பிந்தி என்ற சொல்லில்வருவது போன்றது.  முன்+தி > முந்தி என்பதும் அது.

லகரம் னகரம் ஆகும்.  பல் + து > பன்+து >  பந்து + அம் =  பந்தம்.

பல் என்ற அடி,  பல்+ து > பற்று > பற்றுதல் என்பதில் உள்ளது.

பந்தம் என்ற சொல்லுக்கும் அதுவே அடியாதலின்,  பந்தம் என்றால் பற்றி நிற்பது ஆகும்.

அனுபந்தம் என்றால்  அணுகிப் பற்றிநிற்பது,  ஆகவே  பின்னால் இணைந்து நிற்பது என்ற பொருள் கிட்டுகிறது. பற்றுதல் - இணைதல் ஒன்றுதான். சிலவேளைகளில் " இணைந்து, பற்றி" என்று மீமிசையாகச் சொன்னாலும் காதில் ஏற்றுவிப்பதில் சொல்வோன் வெல்லவேண்டுமே!

ஈங்கு  அணுகு என்பதில் உள்ள அணு,  அனு என்றாயது காண்க.

அனுமன் என்றால் மனிதனை அணுக்கமாக உடைய பிறவி என்று பொருள். இவ்வணுக்கம் உருவில் அணுக்கமென்கிறது  இராமகாதை. கதையைச் சுவைப்படுத்த அப்படிச் சொல்லியிருந்தாலும்,  மனிதத் தன்மையை அணுகி நின்ற பிறவி என்று அறிந்துகொள்ள நுழைபுலம் இன்றியமையாதது ஆகும்.

இங்கு நாம் கூறவிழைந்தது யாதெனில்  ணு -  னு  ஆனதுதான்.( ன வருக்கமெல்லாம் ண வருக்கமாய் ஏற்ப மாறும்.

இப்படித் திரிந்த வேறு சில சொற்களை நீங்கள் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின். 

பிழைகளை நீக்கி வாசித்துக்கொண்டிருங்கள்.

வருவோம், பிழைநீக்கம் தருவோம்.


நோய்க்கு இடம் கொடேல். (ஓளவை)



.