வெள்ளி, 23 அக்டோபர், 2020

விமல - சிறந்த மலர்.

 இப்போது தமிழ்மொழியானது பொருளுரை பகர்வதில் எவ்வாறு சிறப்புடைக் கருவியாகிறது என்பதைச் சிந்தித்து உணர்வோம். இதனைச் சில எடுத்துக்காட்டுகளின் மூலமே விளக்கமுடியும். 

மனிதன் இப்புவியில் வாழுங்காலம் வரை எதனாலும் மாசுபட்டுவிடாமல் எதுவந்து தன்னைப் புடைத்து இறுக்கியபோதும் அதிற்பட்டுத் திறமிழந்து மாய்ந்து விடாமல் தப்பிப் பிழைக்கும் தந்திரம் அறிந்து வாழவேண்டும். அவனை நோக்கி வருவன வெல்லாம் வெள்ளித் தட்டில் கவருமாறு வைக்கப்பட்டு வருவதில்லை. நடந்து போகும்போது வழியில் உள்ள மேடுபள்ளங்களுக்கு ஓர் அளவில்லை. தப்பவேண்டும் இடறாமல் தாண்டவேண்டும்.  எதிர்வரும் தடையானது தூண்போலும் இருக்கலாம். நெளிந்தோடும் நதிபோலும் இருக்கலாம். தப்புதல் தந்திரம் (தம்/தன்) திறம்).1  தப்புவதற்கு மனிதர் அறிந்த வழிகளிலொன்று தவம் மேற்கொள்வது.  அதாவது மனவலிமையால், உள்வலிமையையும் வெளிவலிமையையும் கொண்டு தப்புவதே தவம்.2  தப்பு> ( இதை இடைக்குறைத்து ) தபு >  ( இதை வினைச்சொல் ஆக்கினால்) > தபு(தல்) > ( இந்த தபு(வுடன் அம் என்ற தொழிற்பெயர் விகுதி இணைத்தால்)   தபு+ அம் > தபம்,  (பகரம் வகரமாகும் திரிபை அச்சொல்லினுள் உய்த்தால் அது ) > தவம் ஆகிறது.

இதற்கு அறிஞர் ஓர் எடுத்துக்காட்டு உரைப்பதுண்டு.  அவ்வுதாரணம்,  தாமரை மலர்.  தண்ணீருக்கு மேலிருந்துகொள்ளும்,  அதில் மூழ்குவதில்லை. தண்ணீர் அதன்மேல் துளிகளாய்க் குதித்தேறி விழுந்தாலும் தானே வழிந்தோடிவிடும். " தாமரை மேல்,  தண்ணீர்த்துளி போல், தாரணி வாழ்வினில் மேன்மை கொள்" என்று கூறுவர்.

தாமரை தண்ணீரில் அதன்  மட்டத்திற்குத் தாழ்ந்திருக்கிறது.    (தா).   

தண்ணீரை மருவிக்கொண்டும் நிற்கிறது.    ( மரு  ).

மருவுதல் என்றால் மிகுந்த நெருக்கமுடன் இருத்தல்.   (  மரு > மருவு > மருவுதல்).

இந்த இலக்கிலிருந்து தாமரை என்ற சொல் எழுந்தது.

தா+ மரு + ஐ.

அ என்பது அங்கு என்று பொருள்படும் சுட்டுச்சொல்.

அங்கு அதற்குமேல் செல்லாமையைக் குறிக்க ஏற்பட்ட நிறுத்தமே யகர ஒற்று.

அ + ய் = ஐ ஆனது.  இவ்வாறு ஒரு எழுத்துமுற்று வைக்கப்பட்டு, ஐ விகுதியாய் நின்றது.   மிகுந்து நிற்பதே விகுதி.  மிகுதி > விகுதி.  மி-வி திரிபு. இன்னோர் எடுத்துக்காட்டு:  மிஞ்சு > விஞ்சு.  ஐ விகுதியின் திறத்தை இவ்வாறு உணர்ந்துகொள்ளலாம்.

தாமரை என்ற சொல்லும் மேற்சொன்ன கருத்தையே உள்ளடக்கி அணிபெறுகிறது.

தாமரைக்கு இன்னொரு சொல் கண்டனர். அதன் கருத்தும் மேற்சொன்னவாறே சென்றது. அச்சொல்தான் கழுமலர் என்பது.  தண்ணீரால் அடிக்கடி கழுவப்படும் மலர்தான் கழுமலர்.  இதனை அழகுறுத்த, சில எழுத்துக்களைக் குறைத்தனர்.   கழுமலர் >  கமல ஆனது.   ழுகரமும் ரகர ஒற்றும் வெட்டுண்டு,  இடைக்குறையும் கடைக்குறையும் ஒருசேர நின்றமை காண்க.  இதை விகுதியேற்றி அழகுசெய்து  " கமல + அம்"  >  கமலம் என்றனர். இச்சொல்லைப் பலரும் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு எழுத்துக்களைச் சிரைத்துத் தள்ளுவது சிலருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். அவர்களை மனநிறைவுறுத்த வேறுவழிகளைக் கையாண்டனர்.

விழுமிய மலரே விழுமலர்.  விழுமிய என்றால் சிறந்த என்று பொருள்.  இது:

விழு+ மலர் >  வி + மல >  விமலம் ஆயிற்று. இச்சொல்லும் நன்கு உலாக்கொண்டது.  மலர்  அழகியது.  விமலம் என்பது  சிறந்த அழகு என்ற பொருட்பெறுமானம் உற்றது. இறைவன் விமலன் என்று சுட்டப்பெற்றான். 

தாமே புழக்கத்தால் திரிந்த சொற்களும் புலவர்களால் விரைவுறுத்தித் திரிக்கப்பட்ட சொற்களும் என இத்தகு சொற்கள் இருவகையான திரிசொற்களாயின. கழுமலர் என்பது இயற்சொல்.  கமலம் என்பது திரிசொல்.

இவ்வாறே அறிக மகிழ்க.


குறிப்புகள்

1 தன்+திறம் >  தந்திரம். சொல்லாக்கப் புணர்வில் தன்றிறம் என்னாமல் தந்திரம் என்றே வரும்.   எ-டு:  முன்+தி >  முந்தி.  தம் திறம் > தந்திரம் எனினும் ஆகும். இது அறிஞர் பிறர் சுட்டியதே.

2 மனவலிமை, உள்வலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது. வெளிவலிமையை இயக்கவும் தேவைப்படுகிறது.  உள்வலிமை என்பதில் உடல்வலிமை ஒரு பகுதி; மனவலிமையே  இன்னொரு பகுதியாகவும் உள்ளது. மற்றவெல்லாம் வெளிவலிமை. அதைத் துணைக்கழைக்கவும் தன் மனவலிமை தேவைப்படுகிறது.


மெய்ப்பு - பின்னர்




செவ்வாய், 20 அக்டோபர், 2020

சாம்பவர், சாம்பவ மூர்த்தி

பவம் - சொல் தோற்றம்.

தலைப்புச் சொற்களை ஆய்வு செய்யுமுன், பவம் என்ற சொல்லைப் பொருளறிந்து கொள்வோம். இது பரவு என்னும் வினையில் திரிந்தமைந்த சொல்லே என்று கொள்ளவேண்டும்.

இதிலுள்ள ரகரம் இடைக்குறைந்தால் பவு என்றும் அதில் அம் இணைந்தால் பவம் என்றுமாகும். பரவுதல் என்ற செயலின் பல்வேறு வகைகளுள் ஒன்றான பிறப்பினாலும் உயிர்கள் எங்கும் பரவும் என்பது தெளிவு. ஆகவே பிறப்பு என்று  கூறப்படும் பொருளதான பவம் என்பது,  "பரவம்" என்றே முன் னிருந்திருக்கிறது என்பதை இஃது உறுதி செய்கிறது

பிறவிப் பவம்

பவத்திறம் (பவத்திரம்) என்று மணிமேகலைக் காப்பியம் கூறும்  ---"வீணே பிறந்து உலகிற் பரவிப் பல்வகைத் துன்புறுதலுக்கும் ஆளாதலை" க் குறிக்க எழுந்த --- பொருத்தமான பதமாகவே இஃது உள்ளதென்பதும் மறு உறுதி ஆகிறது . பிறவிப் பவம் என்பதும் நோக்குக. பவநோய் தணிக, மாயை அகல்க என்ற கூவுதலும் இதை நல்லபடி விளக்கும்.

உலகப் பவம்

இவ்வாறு பிறப்பினால் வீணாக மனிதர்கள் பரவியது உலகம் ஆகிறது. இதனால் பவமென்பதற்கு உலகம் என்ற பொருளும் உண்டாகி நம்மைத் தெளிவிக்கிறது. உலகில் மக்களிருத்தல் அவர்கள் இதை விட்டு நீங்கி ( இறந்து ) பேரின்ப வாழ்வெனும் மேலுலக வாழ்வினை அடைதற்கு என்பதனால், மேலும் அவர்களின் பவம் (பரவம், பரவுதல் ) அதே உண்மையையே வெளிப்படுத்துகிறது என்பதனால், பவம் என்பதற்கு உண்மை, பேரின்பவாழ்வு என்ற பொருளடைவுகளும் உண்டாகின்றன

பவம் -  உண்மை

நிகழ்வு என்பது நோக்கினையும் அஃதை அடைதலையும் உணர்த்தும் ஒரு வித ஆகுபெயர்போல் ஆகிவிடுகிறது. இதைச் சொல்லாகுபெயரினுள் அடக்கிவிடலாம். "ஒன்றின் பெயரால் அதற்கியை பிறிது " (நன்னூல்). பிறப்பும் பின் இறப்பும் பேரின்பத்திற்கு ஆகிவருதல்பிறப்பு பல என்பதனால் இடையில் இறப்பு குறிப்பிடவேண்டாமை காண்க

காலப் பரவல் -  பவம்

கரணங்கள் கணியநூலில் ( சோதிடத்தில்) பதினொன்று , இதுவும் காலப் பரவலும் அதனின் உட்பகுப்பும் ஆகும். எனவே இது பரவம் > பவம் என்பதை மீண்டும் திறப்படுத்தும்.


பவம், பரை என்பவற்றில் பரவுதல் கருத்து

பர என்ற வினைச்சொல்லினின்று தோன்றிய வேறு சொற்கள், பரவை, பரமன், பரையன் (பறையன் அதன் பின்வடிவம்) என்பன. பரையன் என்பது பர+ஐயன், பரை+அன் என்றும் இருவழிகளில் பிரியும். பறை(தல்) என்ற வினைச்சொல் பரவுதல் என்ற சொல்லினின்றும் கருத்தினின்றும் தோன்றியதே. பறைதலாவது, சொல் வழியாக கருத்தைப் பரவச் செய்தல். இதுவும் பரவுதற் கருத்தே. உண்மையறிய, பவம் என்பது pavam என்றே பலுக்கப்படுதல் வேண்டும். Bhavam அன்று.

அடிப்படைக் கருத்து: பரவுதல் என்பதே. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பரையர் என்ற சொல், நால்வகை நிலங்களுள்ளும் அடங்காமை பற்றி எழுந்ததொரு பெயர். சாதி அல்லது தொழிலால் எழுந்த பெயரன்று.    தமிழர் வகுத்த நானிலங்களிலும் பரந்து வாழ்ந்தமையே பரையர் என்னும் சொல் எழக்காரணமாயிற்று. நால் வகை நிலமே தமிழ் இலக்கியத்திலும் " உலகம்" என்று அறியப்பட்டது. மேற்கூறிய பவம் - உலகம் என்ற விளக்கத்தினை மறக்கலாகாது.  ஒருவரை " நானிலம் போற்றும் நாவலர்" என்று சொன்னால் இலக்கிய நெறியில் அது உலகம் போற்றும் நாவலர் என்றே பொருள்படும். பாலையையும் சேர்த்துக்கொண்டால், ஐந்நிலம் ஆகினும், இதன் பொருள் மாறாது

நானிலமே உலகம். இவ்வாறு பல நிலங்களிலும் பரவி இருந்த இவர்கள் பூசாரிகளாகவும் ஐயர்களாகவும் இருந்துள்ளனர். ஆதலின் பர ஐயன்> பரையன் > பறையன் என்று எழுத்துத் திரிபுச் சொல் அமைந்துள்ளது. செய்தி அறிவிப்பதும் பரவுதல் > பரப்புதலே. அதைப்பரப்பப் பயன்படுத்திய இசைக்கருவி பரை என்றே குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அதைப் பறை என்று எழுத்துவேறுபாட்டினைப் பெரிதும் கருதாமல் எழுதினர் என்று கருதற்குரியது.

ஒரு பறவை பறப்பதும் இடம்விட்டு இடம்சென்று பரவுதலே ஆகும். இவ்வாறு பரவுதல் "பறத்தல்" என்று சொல் ஏற்பட்டு அது பறவை என்றும் அறியப்பட்டமையின் பற - பர என்றுவரும் வேறுபாடு கருதுவதற்குரிய ஒரு பெரிய வேறுபாடு அன்று. அடிப்படைக் கருத்து பரவுதலே ஆகும். இவ்வேறுபாட்டுக்கு வெவ்வேறு எழுத்துகளை வரையறுத்தது பரவை (கடல்), பறவை (பறக்கும் உயிரி) என்று அறிந்துகொள்ள உதவியதே அன்றி அடிப்படைப் பரவுதல், பரப்புதல், பரந்திருத்தல் கருத்துகளில் மாற்றம் எதையும் ஏற்படுத்திவிடவில்லை

அத்வைதப் பறையன் என்பவர்கள் இருந்தமையின் இவர்கள் கடவுட் கொள்கைகள் தொடர்பான சிந்தனைகளில் மிகுதியாய் ஈடுபட்டிருந்தமை அறிகிறோம். இவர்களில் ஒரு பிரிவினர் பிரம்ம சூத்திரம் ஒதியுள்ளனர். சாவைப் பற்றி பெரிதும் சிந்தித்துச் சாத்திறம் இவர்கள் உண்டாக்கினர். அதுவே பின் சாத்திரம் சாஸ்திரம் என்று திரிபுற்றது

இராமாயணம் பாடிய - "தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினாராகிய" வால்மீகியாரும் இக்குமுகம் சார்ந்தவரே. இவர் பெரும் சங்கதக் கவியும் முதல் அம்மொழிக் கவியுமாவார். இதை யாம் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சங்கத மொழிக்கு இலக்கணம் பாடிய பாணினியும் ஒரு பாணக் குல ஆசானே ஆவான், அதற்கு அவன் பெயர் சான்று ஆகும். பாண் > பாணினி ( பாண்+இன் +). பாரதம் பாடிய வியாசர் மீனவர் ஆகவே, பரையருள்ளும் உட்பிரிவு மீனவர்கள் இருந்துள்ளனர்

வந்தார் போனார் இருந்தார் என்பவற்றில் வரும் ஆர் விகுதியிற் றோன்றிய ஆரியன் என்ற சொல்லும் ஐரோப்பியச் சொல் அன்று. ஆர்தல் நிறைதல்  ---வினைச்சொல். எந்தமொழியில் வினைச்சொல் உள்ளதோ அதுவே அச்சொல்லுக்கு உரிய மொழி. இதை வகுத்துச் சொன்னவர்கள் மேலை ஆய்வாளர்களே. யாம் சொல்லவில்லை. இவர்களுக்கு உள்ள டி.என்.ஏ என்னும் இரத்தத் தொடர்புகளும் நோக்கத்தக்கவை.

சாகும் - சாம் இடைக்குறை அல்லது தொகுத்தல்.

சாதல் என்பது மக்களிடைப் பரவலாக நடக்கும் ஒரு துன்ப நிகழ்வே. ஆனால் சின்னாட்களில் அவர்கள் அதை மறந்துவிட்டு முன்போல் நடந்துகொள்வர். எப்போதும் சாவு முதலிய துன்பங்களில் தொடர்புகொண்டு அதனில் மனமும் செயலும் பரவி நின்றோர் " சாம் பவர்" ஆயினர் எனலும் ஒன்று. சாம் என்பது சாகும் என்பதன் இடைக்குறை. " தான் சாம் துயரம் தரும்" என்ற தொடரைக் காண்க. சாம் என்று இங்கு குறுகி நிற்பது சாகும் என்ற எச்ச வினையே எனலும் ஆகும். இவர்களே சாத்திறம் அறிந்து சாத்திரம் உண்டாக்கினர், அது சாஸ்திரம் ஆயிற்று. இதை (சாத்திறம் > சாத்திரம் என்பது) முன்னோர் இடுகையில் குறிப்பிட்டுள்ளேம். ஆயினும் சாம் என்பது சாம்பவர் என்ற கூட்டுச்சொல்லில் பொருளையைபு உடையதாய் வரவில்லை.

சாத்திரம் இடைக்குறைந்து சாம் ஆதல்

சாம்பவர் என்பதில் சாம் என்ற முன்பாகம் சாத்திரம் என்பதன் இடைக்குறையாம் தகுதி இலக்கணத்தில் உள்ளது.. சாத்திரம் என்பதே சாவினைப் பற்றிய அறிவின் தொகையேயாம். எனவே சாகும் சாம் என்று சொல்வதினும் சாத்திரம் > சாம் எனல் மேலும் பொருந்துவதாகிறது. சாம்பவர் = சாத்திரம் பரப்பியோர்.

சாம்+பவ(ம்)+அர் =  சாம்பவர்.


மூர்த்தி என்ற சொல்

சாக்காடுகளில் தோன்றி ஞானம் தரும் மூர்த்தியே சாம் பவ மூர்த்தி ஆகிறார்.

மூர்த்தி - தோன்றியவர். முகிழ்த்தல் - தோன்றுதல். முகிழ்த்தி > மூர்த்தி.

இச்சொல்லில் முதலாக முகு என்பது மூ என்று திரிந்தது.

அடுத்து இழ் என்ற இரண்டாம் சொற்பாகம் இர் என்று திரிந்தது.

முகு + இழ் = முகிழ். முகு (முன்னுக்கு). இழ் என்பது இர் ( இருத்தல்) தான். இகரச் சுட்டு விகுதி.

இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:

சூழ் > சூர். (சூழ்தல் > சூர்த்தல் ). தகரம் இரட்டிப்பது : 1 புணர்ச்சி. 2 ஒலி நயம்.

சூர் > சூறாவளி. ( சூழ்ந்துவீசும் வளி). வளி = காற்று.

முடிவுரை

(1)

இங்கு பவ என்ற பரவற்கருத்து வந்தது பெரும்பான்மை பற்றி. எல்லாச் சாக்காடுகளிலும் பரந்து நிற்பவர் எனற்பொருட்டு பவ என்று வந்தது என்றும் கருதலாம்.

பவ என்ற சொல் வந்த இன்னொரு பெயர் சரவணபவன்

சரவணபவன் என்பதில் பவன் - பரவிநிற்போன். பரமன், பரம்பொருள் கடவுள் என்பது பொருளாகிறது. சரவணப் பொய்கையில் விளையாடி நிற்போன்.  விளையாடி நிற்றல் என்பது பரவி ( வியாபித்து ) இருப்போன் எனற்பாலதே.

பவித்திரம் என்பதிலும் பரவற்கருத்து உள்ளது.  பவித்திரம் என்பது பரவி நிற்கும் திறம். பரவி - பவி. திறம் - திரம். உணரவைக்க இவ்வாறு விளக்குவது எளிது. தூய்மை என்பது அதில் பெறுபொருள் அல்லது அடைவு. கடவுள் எவ்வாறு நிற்பினும் செயல்படினும் தூய்மை என்பது மாறாப்பண்பு.

(2)

சாம்: சாத்திரம் இடைக்குறை. "த்திர" வீழ்ந்தது.

பவம் : பரவம், ரகரம் இடைக்குறை.

சாம்பவர்  குறைச்சொற்களின் ஒரு கோவைச்சொல்.

பரையர்  என்றாலும்  பறையர் என்றாலும் நான்கு நிலங்களிலும்  பரந்து வாழ்ந்த , பரந்து பல்தொழில் புரிந்த, பலசொல்லும் (அறிவிப்புகளும் ) பரவச்செய்த கூட்டத்தினரானவர்கள் என்பதே உண்மை. இச்சொல்லை ஆய்ந்த ஐரோப்பியர்களும் பறை வாசித்தலினால் இப்பெயர் வரவில்லை என்றே கூறினர். பறை என்ற வாத்தியம் எல்லா நிலங்களிலும் வாசிக்கப்படுவதாயிற்று என்றாலும் ஒரு சிறு தொகையினர் ஆங்காங்கு தொழிலாக  அதைச்செய்து பிழைத்தனர் என்பதே சரி. 

(எடுத்துக்காட்டு:  [ மாறாக ]  இடையர் என்போர் முல்லை நிலங்களில் வாழ்ந்தோர்.  )

சமஸ்கிருத முதல் கவியும் இப் (பரையர்தம்) கூட்டத்தில் வந்தவரே. பெருமுனிவர்.

தமிழர்களில் ஒரு சிலர் மிருதங்கம் /  தவில் வாசிக்கிறார்கள் என்பதால் எல்லோரும் தவில்வாசிப்போர் என்பது அறியாமையே. அதற்குப் பயிற்சி உடையோரே வாசித்தல் இயலும்.

இதற்கு வேறு விளக்கங்களும் சொல்லப்படும். ஆயினும் மெய்ப்பொருள் காண்பதறிவு.

--------------------------------------------------------

தட்டச்சுப்பிறழ்வு - பின்னர் சரிபார்க்கப்படும்.

இதில் முதற் பத்தியில் சில பதிவுக்ள்  மறைந்துவிட்டன.

அப்பத்தி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது

குறிப்புகள்:

Religion is based on or arises from fear. (Lord Russel ) Read his philosophy.

The word "Sasthiram" from சா ( சாஸ்திரம். சாத்திரம், சாத்திறம்) supports this theory. Death, Infirmity and Old Age cause this fear. The Life of Buddha proves it. 

Also consider the terminology: " God-fearing". 

God punishes the wicked. 

பவம்¹ pavam n bhava 1 Birth origin பிறப்பு பின் பவத்திறமறுகெனப் பாவை நோற்ற காதை மணி 30 2 Earthly life உலக வாழ்க்கை சரியாப் பிறவிப் பவந்தரும் திவ் இரா மாநுச 94 3 World உலகம் பேரின்ப வீட்டுப் பவம் சிவப் பிர வெங்கைக்க 75 4 Astrol A division of time one of eleven karaṇam q v கரணம் பதினொன்றனுள் ஒன்று 5 Existence உண்மை கொள்பவத்தின் வீடென் சி போ 8 2 வெண்பா 2  

Tamil Lexicon

பவம், பரவுதல், ---  தொடர்வருதலும் அடங்கும்.


-------------------------------------------------------------------------------

---என்பவை அறிந்து மகிழ்க.


பார்வையிடப்பட்டது:  17092021 1219


திங்கள், 19 அக்டோபர், 2020

இராணுவம் தமிழ்

 "இராணுவம்"  - சொல்லினாக்கம் அறிவோம்.

ராணுவம் என்பது இகரம் இயைத்து இராணுவம் என்றும் எழுதப்பெறும் என்றாலும் அது தமிழில் ரகர வரிசையில் சொல் தொடங்கலாகாது என்பதற்காகவே ஆகும். எனவே ராணுவமென்பது தமிழ் என்று காணாது முடிப்பாரும் உளர்.

பல ரகர வருக்கத்துச் சொற்கள் தமிழில் தலையிழந்தவை.  அரங்கசாமி என்பது ரங்கசாமி என வருதல் போலுமே அது.  ஆற்றிடை நிலத்து அமைந்துள்ள கோயில் ஓர் அரங்கில் அமைந்துள்ளது போல்வதே ஆதலின்,  அரங்கசாமி என அத்தெய்வம் பெயர்பெற்றது.  ராணுவம் என்ற சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளதே.  இதுபோது தாளிகைகளிலும் பயன்பாடு காண்கிறது.

ஓர் அரணினுள் தங்கவைக்கப்பட்டுப் போருக்கு அணியமாய்1 உள்ள படையைக் குறிப்பதே ராணுவமென்பது.  இப்போது அரண் அல்லது கோட்டைக்குளில்லாமல் வேறிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படைகளும் இராணுவம் என்றே சொல்லப்படுகிறது.

அரண் > அரணுவம் > ராணுவமென்பதே இச்சொல்லின் பிறப்பு ஆகும். அர் என்பதே இதன் அடிச்சொல்.   அர் > அரண்;  அர் > அரசன்;  அர்> அரசி எனக்காண்க. இதனை விளக்கும் இடுகைகளைக் கீழே தந்துள்ளேம்.

அரணில் தங்காமல் ஒரு படுதாப் பந்தலில் தங்கினாலும் இற்றை நாளில் ஒரு படையணி  -   ராணுவமே.  இச்சொல் பொதுப்பொருண்மை அடைந்துவிட்டது.

அரணம் என்ற இன்னொரு சொல்லும் காவல், கவசம் என்னும் பொருளது. கோட்டை, மதில் என்பவும் பொருள்.

அரண் உவப்பது படையணிகளையே.  ஆதலின் அரண் + உவ + அம் = அரணுவம் என்பது படையணிகளைக் குறிக்கும். ராணுவம் என்பது தலையிழந்த  திரிபு. ராணுவம் என்பது படை நிறுவாகம் என்றும் பொருதரும்.

அரண்+ உ + அம் = அரணுவம் என்று முடிப்பினும், உகரம் இடைநிலை என்று கொள்ளினும் இழுக்கில்லை.

தமிழில் நிகண்டுகள் முதலியன பல சொற்களைப் பாதுகாத்து வைத்துள்ளன. தமிழில் நூல்கள் பல போற்றுவாரற்று ஒழிந்தன.  அவற்றில் நம்மை வந்தடையாத சொற்கள் பல இருந்திருக்கக்கூடும்.  அரணுவம் என்ற சொல்லும் அத்தகைத்தாகும்.

அரணி = ராணி என்பதும் கருதுக.

அரசன் வாழ்மனை அரண்மனை எனப்படுதலும் காண்க.  அரமனை என்ற பேச்சுவழக்குச் சொல் அர் -  அர என்ற அடிச்சொல்லுடன் இணைந்துநிற்றலின் சொல்லியலில் ஒரு போற்றற்குரிய வடிவம் எனின் மிகையாகாது.. அரண் என்ற சொல்லும்  அர் + அண் என்று இணைந்து,  அரசு நடாத்துவோர் அண்மி வாழும் இடம் என்று பொருண்மை பெறுதலும் கண்டுகொள்க.

அர் >  அர > அரசு.

அர் > அரசு >  அரசன்

அர் > அரசு > அரசி

அர் > அரை > அரையர்.   ( அர் + ஐ + அர் ). அரசுத் தலைவர்.  ஐ = தலைமை.

ஐ விகுதி எனலும் இழுக்கிலது.

அரை > ராய் ( தலையிழந்த அயல்வடிவம்).

ராஜ் ( அயல்வடிவம்)  ரெக்ஸ் - இலத்தீன் திரிபு)

ரெஜினா -  அரசி. ( அயல்வடிவம்.)

அரள், அரட்டு, மூல முழுவடிவங்கள். 

சில தமிழ்ச்சொற்கள் தமிழில் வழக்கிழந்து இனமொழிகளில் வழங்கி வீடுதிரும்பி அறியப்படுதலும் உண்டு. இவ்வாறு அயல் எட்டிய சொற்கள் பெரும்பாலும் திரிந்துவிடுதல் இயல்பு.  ஆய்வின்மூலம் இவற்றை அறிந்துகொள்ளுதல் இயல்வதே என்றறிக. 

குறிப்புகள்:

நிறுவாகம் : நிறுவப்பெற்ற ஆட்சியமைப்பு.  (  நிருவாகம் என்பது சரியன்று).

அரசன் முதலிய சொற்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/09/blog-post_10.html

மற்றும் https://sivamaalaa.blogspot.com/2020/06/blog-post_11.html

1  அணியமாய் -  தயாராய்

அர் > அரமன் > ராமன்.

அர =  ஆளும்;  மன் > மன்னன் என்றலும் நுணுக்கமாய் அணுகத் தக்க வடிவமே.

இர் > இர் ஆம் மன் : இருள் நிறத்து மன்னன். ( நீல நிறத்து மன்னன் ).  ஆகும்> ஆம்.


தட்டச்சுப் பிழைகள் பின் திருத்தம் பெறும்.

சில திருத்தங்கள்  20.10.2020