சனி, 8 ஆகஸ்ட், 2020

சிங்கப்பூருக்குத் தேசிய தின வாழ்த்துக்கள்

எந்தநாள் என்றாலும் இதற்கீடாய் நில்லாதே

இனிமை  எலாம்தரும் தேசிய தினமே---நாம்

இருக்கின்ற இந்நாடு நம்பூ வனமே. 


சொந்தநாள் என்றினிச் சொல்வதற்   குண்டென்றால்

சோர்வகல் சுனைநீர் சுரந்தஇந் நாளே----- வளம்

சுருங்காப் பெருங்கலி சூழ்வதிந்   நாளே.


சார்பின்மை வீடுண்டு சோர்வின்மை உண்டதனால்

மார்புண்டு வீறுண்டே மாண்பும்  உள்ளிலே----நல்ல

மதியுண்டு நிதியுண்டு மகிழ்வும் இல்லிலே.


தொழிலுண்டு எழிலுண்டு தொட்டதில் பொன்னுண்டு

தோன்றிடும் எண்ணமெலாம் ஊன்று திண்ணமே---- இனங்கள்

துவண்டிடாத் தூண்கள் நாலு  நிற்கும் வண்ணமே


சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே

சீருடன் வாழ்கவென்று பாடி  யாடுவொம்

கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி  யாடுவோம்.


சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.


பொருள்:

சுனை -  நீர் சுரக்குமிடம்.

பெருங்கலி - பெரு மகிழ்ச்சி.

கலி - துள்ளுதல்.

சார்பின்மை - யாரையும் நத்தி வாழாமல்

தானே பொருள்தேடி வாழ்தல்.

சார்பின்மை வீடு - சொந்த வீடு.

மார்பு உள்ளிலே - நெஞ்சில்.

இல்லிலே - வீட்டிலே

ஊன்று - நிலை(த்தல்)

நாலு - நான்கு இனங்கள்




மனம் தேறச் சில நாட்கள்

 வெள்ளத்தால் தம்முயிர் போயினோர் வானூர்தி

பள்ளத்தில் வீழ்ந்துடைய மாண்டோராம்  ----  விள்ளரிய

நோய்நுண்மி தன்னால் மடிந்தோர் எனக்கரைந்து

வாய்விட்டு வாரிபோல் கண்ணீரில் ----  தோய்வுறினும்

வாரார்  அவர்நல்லோர் வாழ்கவே  இவ்வுலகம்

தேறும்சின் னாளில் உளம்.

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

பெய்ரூட் வெடிவிபத்து

பெயிருட்டில் பல்லோரைக் கொன்றுவிட்ட வெடிவிபத்து
பெருந்துயரம் நிகழ்ந்துளது உறுந்துயரே சொலத்தரமோ?
மைஇருட்டில் செவிகிழியும் ஒலியுடனே கிலிபரவி
வையகமோர் துயர்க்கடலென் றையமற உணர்த்தியதே
நையுறவே சிதைந்தவுடல் நாற்புறமும் பறந்துவிழ
நாசமிதோ நயமொழிந்த இடர்நடப்போ  இனியறிவோம்.
செய்யஒன்றும் அறிகிலராய் பெய்விழிநீர் பெருகுமக்கள்
கையறவின் மீட்சியுற ஐயனடி பணிகுவமே.

பொருள்

சொல – சொல்ல

மை இருட்டு - காரிருள்

கிலி - அச்சம்

ஐயமற – சந்தேகமில்லாமல்

நையுற – உருவழிய

சிதைந்த – அடையாளமின்றி மாறிவிட்ட

நாசமிதோ - சதி வேலையோ

இடர் நடப்போ - வெறும் விபத்தோ

பெய்விழி நீர் - கண்ணீர் விட்ட

( விழி நீர் பெய் என்று மாற்றுக)

பெய் - கண்ணீர் மழை எனல்பொருட்டு.

பெருகு மக்கள் - உதவுவோர் தேடிக்

கண்டுபிடிக்கக் கண்டுபிடிக்கத் தொகை மிகுதல்

ஆகும் மக்கள்

கையறவு - மரண சோகம்

ஐயன் - இறைவன்.



மெய்ப்பு பின்