சனி, 1 ஆகஸ்ட், 2020

மது உண்பவர் உண்ணட்டும்.

நச்சுநீர் உட்கொண்டு நம்மனோர் மாய்வரென்றால்
இச்சை   மதுவுண்ணல் ஏன்தடுப்பீர்----  சொச்சமின்றி
உண்ணட்டும் தீயமது  உள்ளவரை வாழ்கஏதும்
பண்ணின் பயனர் அவர்.

நச்சுநீர் -  நோய் நுண்மிகளை ஒழிக்கும் நீர்க்கலவை
நம்மனோர் - நம் மக்கள்.
மாய்வரென்றால்  - (சிலர் மாண்டுவிட்டனர் என்பது
தகவல்  ).

இச்சை - விருப்பம்.
ஏன் தடுப்பீர் - தடுக்கத் தேவை இல்லை என்பது.

சொச்சம் இன்றி  --  கோப்பையில் உள்ள மது
எல்லாவற்றையும்.

தீயமது - கெடுதல் என்று அறிஞர் சொல்லும் மது.

உள்ளவரை வாழ்க  -  மது உண்டலால் ஆயுள்
குறையுமென்றால், குறைந்த வரை வாழட்டும்;

ஏதும் பண்ணின் ( பண்ணட்டும்) - அது மது உண்போருக்கு
உரிமை ஆகட்டும் என்றபடி.

பயனர் அவர் -  அதைப் பயன்படுத்துவோர் அவர்களே.
அதனால் வரும் உடற்கேட்டையும் விளைவுகள்
பிறவற்றையும் அவர்களே அடையட்டும் என்றவாறு.

பிறர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்களேதாம்
தீர்மானிக்க வேண்டும்.  நாம் தீர்மானித்து வெற்றி
காணுதல் இயலாதது.

மது அருந்துவதால் குடும்பச்சண்டைகள் வரலாம்.
மதுவைத்  தடைசெய்தால் கள்ளச்சாராயம் அதன்
இடத்தை மேற்கொள்கிறது. பிறகு அதைத் தடுக்க
இயலாது. சில நிகழ்வுகளையே பிடிக்கமுடியும்.
பல நல்லபடி நடந்தேறி, கள்ளத்தனம் உடையார்
காசு ஈட்டுவர்.

உலகத்தைக் கட்டுப்படுத்தி வெற்றிகாண்பவன்
 எவனும் இன்னும் பிறக்கவில்லை.  மதுவுண்ணல்
என்பது ஒரு நாய்வால்.

மெய்ப்பு பின்

News references:


You may have better or different views. Pl feel free to comment.

யாம் கூறுவது ஏற்புடையதன்று எனின் தங்களின்
கருத்துகளைப் பதிவு செய்யலாம். பின்னூட்டம் இடுங்கள்.
எம் கருத்தே சிறந்தது என்று யாம் கூறவில்லை.

வெள்ளி, 31 ஜூலை, 2020

கஷாயம். கசாயம்

இவண்  இனிமை தெரிவிக்காத ஒரு சொல்லைப் பற்றி
ஆய்ந்தறிவோம்.

அது கஷாயம் என்ற சொல்தான். பாயசம் குடிக்கப்
பலர் விரும்பும் இந்நாளில் யார் கஷாயம் குடிக்க
விரும்புவார்?

கஷாயம் எத்துணை கசப்பாய் இருக்கும் என்பது 
உண்மையில் யார் அதைத் தயாரிக்கிறார்கள் 
என்பதைப் பொறுத்ததே ஆகும். சித்தவைத்தியரே
அதைத் தயாரித்தால் மிகக் கசப்பு உடையாதாய் 
இருக்குமென்று நாம் எண்ணலாம்.

கஷாயம் என்பது உண்மையில் கச ஆயம் தான். 
கசப்பாய் ஆயது கசாயம்.

இச்சொல்லில் முன் நிற்பது கசத்தல் என்ற 
வினைச்சொல்.

கச என்பது கஷ என்று திரிந்துவிட்டதால் பலருக்குத்
தடுமாற்றமாய் உள்ளது. வடவெழுத்து என்ற அயல் ஒலி
நீக்கி, உரிய ஒலியோடு (எழுத்தொடு) புணரின் அது சரியான
சொல்லாகிவிடும். தொல்காப்பியம் சொல்வது இது,

ஆயம் என்பதையும் இவ்வாறு அறியலாம்:

ஆதல் - வினைச்சொல்.
ஆ வினைப்பகுதி.

ஆ + அம் =  ஆயம்,  யகர உடம்படுமெய் தோன்றியது..

ஆய என்ற எச்சவினையினின்று இதை அறிய:

ஆய + அம் =  ஆயம்,  இங்கு ஆய என்பதன் ஈற்று அகரம் 
கெட்டது.
ஆய் என்ற வினை எச்சத்திலிருந்து அறிவதானால், 
இன்னும் எளிதாகிவிடும். ஆய்+அம் = ஆயம்.

எச்சங்களிலிருந்து பிற பாலி, சங்கதம் போலும் 
மொழிகளில் சொற்கள் பல பிறந்தனவென்று சொல்வர்
ஆய்வாளர்.

சொற்களில் ஒவ்வொன்றும் வினைப்பகுதி, விகுதி
என்று இணைந்து தோன்றியிருக்கும் என்பது 
இலக்கண ஆசிரியர்கள் கருத்து. இலக்கணம் 
காணப்படுமுன்னரே சொற்களும் மொழியும் 
தோன்றிவிட்டமையால், இப்படிக் கருதுவது
மொழிவரலாற்றுக்கு முரண்பட்ட தவறான 
கருத்து அல்லது கொள்கை. இலக்கியம் அல்லது
மொழியில் காணப்பட்டதற்கே உண்மை கண்டு
இலக்கணம் உரைக்கவேண்டும். விடப்பட்டதை
சொந்தபுத்தியில் அறிக.

பெய்ப்பு பின். 



வியாழன், 30 ஜூலை, 2020

இனி யாம் செய்யவிருப்பது

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே
பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே
இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே
நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 


இதன் பொருள்:

முன்னெழுதி இட்டவோலை மூன்றுதினம் முன்னே:
மூன்று நாட்களுக்கு முன்பு யாம் இடுகை ஒன்று
உங்களுக்காக இட்டிருந்தோம்;

பின்னெழுதி இட்டவெல்லாம் பிறர்படித்தற் கில்லே--
அதன்பின் யாம் எழுதியவை எல்லாம் எம் சொந்த
வேலைகளை முன்னிட்டு; அதனால் அவை 
மக்கள் படிக்கத் தக்கவை அல்ல;

இன்றெழுதிக் கிட்டுவதோ  இனிமை இலாச் சொல்லே-
இன்று ஒன்று எழுதப்போகிறோம்;  அது உங்களுக்குக்
கிட்டும்;  ஆனால் அந்தச் சொல்லில் இனிமை எதுவும்
தேடாதீர்கள், இனிமை என்பது இராது.

நன்றெழுதி விட்டிடயாம் நனிஉறங்கும்  பின்னே. 
நல்லபடியாக எழுதியபின்புதான் அயர்ந்து
உறக்கம் கொள்ளுவோம் என்றபடி.

அதைப் படிக்கத் தயாராய் இருங்கள். நன்றி

மெய்ப்பு - பின்...