வியாழன், 16 ஏப்ரல், 2020

நூதனம்

நூதனம் என்ற சொல்லைப் பார்ப்போம்.

உகரச் சொற்களிற் சில நுகரத் தொடக்கமாகத் திரியும்.   இதற்கு எளிதான உதாரணம் உங்கள்  > நுங்கள் என்பதாகும். இதனைப் போலி என்னும் திரிபு வகை என்னலாம்.

உகரச் சுட்டடிச் சொல்: உங்கள் என்பது,  முன்னிலைக் கருத்தை உடையது. இதில் திரிந்த நுங்கள் என்பதும் அக்கருத்தைத் தழுவியதே ஆகும்.  இதன் முன் வடிவுகளாகிய உம் >  நும் என்பவும் அன்னவே.

ஒரு காலத்தில் நூல் என்பது புதுமைப் பொருள். பஞ்சிலிருந்து நூற்க அறிந்தகாலை அது பெரும்புதுமை.  நூதனம்.   நூல் > நூ( ல் )  > நூ +து + அன் + அம். இனி வேறொரு வழியில்:

ஊ, ஊன் என்பன முன்னிருத்தல் காட்டும் சொற்கள்.  சுட்டு.

ஊ >  உ ( உகரச்சுட்டு)  முதனிலை  குறுக்கம். பொருள் மாற்றமில்லை.

ஊ > ( ஊ + து + அன் + அம் ) > (  நூ + து + அன் + அம் )

பொருள்களை முன் வந்தவை, பின் வந்தவை,  பின் வந்து புதுமையானவை என்று பகுத்துக்கொண்டால் நூதனமானவை அல்லது புதுமையானவை முன்னிருந்து வியப்பினையும் விளைத்துக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து வியப்புக்குரிய புதுவரவே நூதனம் என்பதை அறிய ஆறறிவு போதும்.

கொம்பில் நுனியே முன்னிற்பது  அதுவே இறுதியில் வந்தது.மாற்றுச்சொலவு வேண்டின்  அடியிலிருந்து புதிதாக வெளிவந்ததே நுனி

அதிலிருந்து:

நுன் > நுனி.
நுன் >   நூ + து + அன் + அம்.
முகிழ்த்துப் புதுமையாய் முன்னிருப்பது.

நுன் > நு (கடைக்குறை)
நு > நூ  ( முதனிலைத் திரிபு, நீட்சி )

நுவலுதல் என்ற வினைச்சொல் புதுமையாய் அல்லது புதிதாய் ஒன்றை முன் வைப்பது,  வாய்வழியாக. இதுவும் தொடர்புடைய உருவாக்கமே.

ஊது என்பது உள்ளிருந்து ( தொண்டையிலிருந்து ) வாய்வழி வெளிக்கொண்ர்தல். இக்கருத்து பின் விரியும்.   ஊது > நூ(து) எனக்காண்க.

மனிதன் எள்ளை அறிந்து அதைப் பயிராக்கியது முதுபழங்காலத்தில்.  அப்போது அது ஒரு புதுமையாய் இருந்தது.  ஆபரணம் செய்ய அறிந்து அதை அணிந்தகாலம் அவன் புதுமையே கண்டான்.  யானையைக் கண்டபோதும் புதுமைதான். இந்தப் புதுமைப் பொருள்கட்கு ப் பொதுச்சொல்லாய் " நூ " என்று சொன்னான். இசைபாட அறிந்தபோதும் அதற்கு ஒருவினைச் சொல்லைப் படைத்து நூக்குதல் என்றான் என்பதும் அறிக. புதிதாக சமைக்க அறிந்தபோது ( தீயைக் கண்டுபிடித்துச் சில காலம் சென்றிருக்கவேண்டும் )  அவிப்பதை நூத்தல் என்று சொன்னான்.  நூர்த்தல் என்பதும் ஒன்றைப் புதிதாகச் செய்தல்.

முதலில் நூலெழுதியவனும் நூற்க அறிந்தவனும் இவனே.   இவை எல்லாம் மனித இனத்தால் கொண்டாடப்பட்ட கண்டுபிடிப்புகள்.  அவனிடம் பல கண்டுபிடிப்புகள். அவை எல்லாம் இன்று பழங்கதைகள் ஆய்விட்டன.

யாதென அயிர்க்காமல் வாதிடல் விட்டு நூதனம்  அறிக.


அச்சுப்பிறழ்வுகள் திருத்தம் பின்னில்.

புதன், 15 ஏப்ரல், 2020

கடிகாரம் அதன் உள்பொதிந்த காலவிரைவுக் கருத்து.

கடு என்பது ஒரு தமிழ் அடிச்சொல்.  அது அடு என்பதனுடன் மிக நெருங்கிய சொல்லென்பதை நீங்கள் சிந்தித்ததுண்டா? ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கி அடுக்கப்பட்ட எதுவும்  அந்த அடுக்கிய நிலையில் இருந்து நழுவாமல் நிற்குமானால் அது "கடு "  ஆகிவிடுகிறது. அதாவது தன் நெகிழ்தன்மை, நழுவலின்மை  அது கடு  ஆகின்றது.     இதை

அடு >  கடு

என்று குறிப்போம். அடு ( அடுத்துவரல்) என்பதிலிருந்த நெகிழ்தன்மை கடு என்பதிலில்லை.  கடு கடுமை ஆகும். கடுமையுடைய பொருள்களைத் தொகுத்துக் கூறி அவற்றின் தன்மை விளக்குவிக்க வேண்டின்,  அதனைக் "கடு+ இனம்" என்று உருவாக்கிக் "கடினம்" என்கின்றோம். கடினப்படுதல் என்றால்  கடுமை என்று வகைப்படுத்தப்படும் தன்மை உடையதாதல்  என்று விரிக்கலாம்.

இவ்வாறே  மெல்லவோ இயல்பான நிலையிலோ அடுத்தலை -  அதாவது அடுத்துச் செல்லுதலை விடுத்துச் சற்று முயன்று விரைந்து அருகிற் சென்றால் அது  கடுகுதல் ஆகின்றது.  கடுகுதல் எனற்பாலது   முயன்று விரைதலைக் குறிக்கும்.   எப்படியும் கடுகுதலில் ஒரு சிறிய கடின முயற்சியாவது இருக்கவேண்டும்.   அதுவே கடுகுதல்:   இதிலிருக்கின்ற உள்ளுறைவு கடின முயற்சியுடன் கூடிய விரைவான முற்செலவு  ஆகும்.

இப்படி வினைச்சொல்லான கடுகுதல் என்பது, பெயரானால் கடுகு என்ற தாளிக்கப்பயன்படும் விதையைக் குறிக்கும். இப்போது கிடைக்கும் கடுகுகளில் காரம் எதுவும் தென்படவில்லை. அதை எண்ணெயில் இட்டுச் சூடாகி வெடிக்கையில் ஏற்படுவதைத்தான் " கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" என்றனர்போலும்.  நீங்கள் கடுகுபற்றி அறிந்தவராய் இருக்கலாம். இந்தப் பழமொழியை விளக்குவீராக. கடுகில் வெண்கடுகும் உண்டு. மனிதருள் வெண்டோலர் இருத்தலே போல். கடுகு சிறுத்தல் பருத்தல் அறியோம். யாம் அதனைக் கொஞ்சமே வாங்கி விரைவில் முடித்தலின்! கடுகுமணி அணிதற்கு அதனைச் சென்று வாங்கி வந்தாலே இயலும்.

ஏன் இப்படிக் கூறுகிறேம் என்றால்,  காரம் என்ற சொல்லோ கரு என்பதனடிப் பிறந்தது.  கொஞ்சம் கருகலானால்தான் காரம் என்ற சொற்பொருட்குப்  பொருந்தும்.  அப்போதுதான் வாசனை மிகுதல் உண்டாகும்.

கரு + கு = கருகு > கருகுதல்.
கரு + அம் = காரம்.  கரு என்பது அகரமுன் கார் ஆனது. இது ஒரு என்பது உயிர்முன் ஓ என்று நீண்டு (ஓர்) ஆவதுபோலுமே.

காரம் என்ற சொல்லமைந்த இளநாட்களில் கருகலால் கிளம்பிய மணத்துடன் கலந்த காற்றினை எண்ணியே செயல்பட்டனர் எனினும் இந் நுண்பொருள் பின்னர் (பிறபதங்களிற் போலவே)  இழக்கப்பட்டு,   காரம் என்பது கருகலாலன்றிப் பிற முறைகளில் எழுந்த கடுமையான மணத்தையும்  குறித்துப் பொதுமை அடைந்தது என்பது உண்மையாகும்.

ஆனால் கடிகாரம் என்பதில் என்ன காரம் உள்ளது,  கூறுக. கடிகாரம்.  அது காரத்துடன் கடிப்பதுமில்லை. கடிமணம் போலுமோர் பதமோ காண்போமே!
கடி என்பது விரைவு, புதுமை ஆகியனவுமாகும்,     அம்பு கடிவிடுதல் என்றால் வேகமாக அது விடுதலென்பது.[சங்கத்துச் சொற்றொடர்]

 வேகமாகச் சென்று முடிந்து  விடுவனதம்மில் , மணிநேரம் என்பது முன்மை வாய்ந்தது ஆகும். போயின் வாராதது நேரம் என்பது.  நாழிகை என்றும் இஃது பொருள்படும்.  நாம் எதிலேனும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற காலை, அது போவது தெரிவதில்லை. நாம் அறியாமல் அது சென்று மறைவதனால், அதன் விரைவு வியத்தற்குரியது ஆகும்.

அறியாது அடைவு கொள்வதால்

கடி ( விரைவு) +  கு ( சேர்வு அல்லது அடைவு) + ஆரம்

ஆனது.  ஆதலின் பண்பின் காரணமாய் இப்பெயர் அமைகின்றது.


விரைந்தோடுவதென்னும் பொருளில் கடுகு+  ஆரம் = கடுகாரம் > கடிகாரம் எனினும் அதுவே.  ஈற்று  உகரம் இகரமாகும்.  கடு> கடி.  மூலம் கடுவென்பதே.

கடி என்பது கூர்மைப் பொருளும் உடையது. மற்றும் முகூர்த்தம் என்று அர்த்தமும்  தரும்.  கடிகை என்பது நேரம் அமைய மங்கலம் பாடுதலையும் சுட்டுவது.

கடு, கடி, கடுகு(தல்),  என்பவை தொன்றுதொட்டு  நேரகாலத்துடன் தொடர்பு பட்டவை என்பதை ஊன்றிப் பற்றிக்கொள்க. முகூர்த்தம், மங்கலப்பாடல் முதலியவை அவற்றோரன்ன வானவை. விரைவு என்பது செயலிற் காலக்குறுக்கமன்றி வேறில்லையாதலின் வேறு விரித்தல் வேண்டாமை உணர்க.

ஆர்தல் - அணிதல், பொருந்துதல்.

ஆரம்  =  அணி, பொருந்துபொருள்.

காலவிரைவு காட்டும் பொறி,  கடிகு ஆரம் >  கடிகாரம் ஆயிற்று.

கடு - கு எனற்பாலது  காலவிரைவு அல்லது காலச்செலவு குறித்தாலும்  இதில் காலம் என்பது தொக்கது. நாற்காலி என்பது சொல்லமைப்புப் பற்றி நாலுகால் உள்ள நாய் பூனை உட்பட அனைத்தையும் குறித்தல் கூடுமெனினும்  அது வழக்கில் இருக்கை என்றே பொருடருதலின், காரண இடுகுறி ஆனது போலவே கடிகாரமென்பதும் காரண இடுகுறி என்று உணர்க. எனினும் கடு>கடி என்பதிற் பிறந்த சொற்கள் பல கால நேரப் பொருண்மை உடையனவாய் இருத்தலின்,  இஃது காரண இடுகுறியே ஆயினும் நாற்காலி என்பதினும் சற்று மேனிலைப்பட்டு நிற்றலை உணர்ந்து இறும்பூது எய்தவேண்டும்.

இது பின் அயலிலும் சென்று கொடிநாட்டிய சொல்.

இப்போது காலக்கருவி குறிக்கும் சொற்கள் பல இருப்பினும் இது முந்து ஆக்கம் ஆயிற்று என்றுணர்க.

கடிகை = நாழிகை:  

கடிகை+ ஆரம் > கடிகாரம்,  கை என்றவீற்றில் ஐ கெட்டது, ககர ஒற்றில் ஆகரமேறிற்று.  கடிகை என்பதிற் கை விகுதி,  கு அன்றி க் என்று குன்றி ஆ என்னும் வரு விகுதி முதலுடன் இணைப்புற்றது.  ஆரமென்பது வட்டு வளையமென்று போதருதலின், நாழிகைவட்டில் என்று கொள்ளவும் தக்கசொல் இது.  அவ்வட்டில் கழிந்து மணிப்பொறி வாழ்வினுட் புக்க காலத்து அஃது மணிப்பொறி குறித்து புதிதுபுகுந்ததையும் உணர்த்திற்று. இவ்வாறு இதனை விளக்கினும் ஏற்புடைத்தே  ஆம். மரப்பட்டை குறித்த சீரை என்ற சொல் இன்று நூலாலும் நெகிழியாலும் ஆனவற்றையும் குறித்தல்போலும் இதுவாகும்.

அறிவீர், மகிழ்வீர். மகுடமுகி என்னும் கொரனாவினின்றும் தப்புதற்குரிய அனைத்து வழிகளையும் விடாது பற்றித் தொடர்க.  நீடுவாழ்க.

தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனம்பெறும்.

 





திங்கள், 13 ஏப்ரல், 2020

சொர்க்கமும் ஆத்மாவும் ஆன்மாவும் சொரூபமும்

சொரூபம் என்ற சொல்லை இப்போது அறிந்துகொள்வோம்.

அதற்குமுன் சொருகுதல் என்பதன் பொருளைப் பார்த்துக்கொள்ளுதல் நல்லது.

முந்தானையைச் சொருகிக்கொள், மேல்சட்டையைக் கால்சட்டைக்குள் சொருகி இடைவாரைப் போடு, கண்கள் உறக்கத்தில் சொருகும் வேளையில்
வானொலியைத் திறக்காதே என்றெல்லாம் இச்சொல் வழக்கில் வருதலைக் கண்டிருக்கலாம். சொருகுதலாவது உட்செலுத்தி மாட்டிவிடுதலைக் குறிக்கிறது. முந்தானை காற்றில் பறக்கக் கூடாது என்று கூறுகையில் அது மாட்டி இறுக்கமானால் அல்லது முறையாகச் சொருகப் பட்டால் பறக்காது என்பது பொருள்.

செருகுதல் என்ற சொல்லும் உள்ளது. வயிற்றுச் செருகல் ஒருபுறமிருக்க, இது நுழைதல், நுழைத்தல், கண்சொருகுதல் என்ற பலநிலைகளை உட்படுத்தும் சொல்லாகும்.

எகர ஒகரப் போலிச்சொற்களில் செருகுதலும் சொருகுதலும் அடங்கும். இதனால்தான் பேச்சுத் தமிழில் எழும்பு என்பதை ஒழும்பு என்றும் சிலர் சொல்கின்றனர். ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தார் பேச்சு வேறுபாடு வியப்பாக இருக்கலாம். ஆய்வாளருக்கு இது பெரிதன்று. மக்கள் பல்வேறு காரணங்களால் பிரிந்துவாழ்ந்த நிலையில் வேறுபாடுகளே இல்லையென்றால் அதுதான் எமக்கு வியப்பாக இருக்கும். இப்போது தொலைத்தொடர்பு மிக்கிருப்பதால் இவற்றை அறிந்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம்.

இப்போது சொருக்கம் என்பதை ஆய்வோம். சொருகுதல் என்பதும் ஓரிடத்தைல் உள்ளதை இன்னோரிடத்தில் உள்நுழைத்தல் என்பதே. இஃது மேலே கூறினோம். எடுத்துக்காட்டுக்குக் காற்றிலாடும் முந்தானை. இதைச் சொருகுவதென்றால் எடுத்து சேலைக்கட்டின் இன்னோரிடத்தில் ஆடாமல் பிடிப்பாக நுழைத்தலே. சொருக்கமென்பது என்ன? இறந்தபின் அலையும் ஆன்மாவை / ஆத்துமாவை மேலே நாமறியாத வானில் எங்கோ சொருகி வைப்பதே ஆகும். சொருகு+ அம் = சொருக்கம். இதுபின் எழுத்துக்கூட்டலில் சொர்க்கம் என்று திருத்தமாக்குதலாக எழுதப்பெற்றது. சொல் ஆக்கப்பட்டு வழக்கில் உலவியகாலை, சொருக்க மென்பது ஒலியழகின்மையினால் சொர்க்கம் என்றாயது எனினுமது. ஒலியழகுக்காக இவ்வாறு திருந்தியமைந்தவை பல. சொருகுதலென்ற பழங்கருத்து ஒரு தடை எண்ணத்தை உருவாக்கியதால் சொர்க்கமென்று அது  மேம்பாடு கண்டது. இதனைச் சொன்னாகரிகம் எனினுமாம்.

உடலின் அகத்து, அதாவது உள்ளில், உடலினும் பெரிதான ஆன்மா அல்லது ஆத்துமா அமர்ந்திருந்தது. அகம்> அகத்து: உள்ளில். மா- பெரிது, எதனினும் பெரிதென்றார்க்கு அஃது உடலினும் பெரிது என்றலே விடை. எனவே அகத்து + மா = அகத்துமா > ஆத்துமா > ஆத்மா. இவ்வடிவங்களில் இறுதி வடிவமே சுருங்கிநின்றமையில் ஏற்புடைத்தென்று கொள்ளப்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆத்துமாவோ உடலினும் மிக்க விரிவானது என்ற கருத்து எழுந்தது. என்வே சிலர் அகல்+ மா = அகன்மா > ஆன்மா என்றனர். அகன்றதும் பெரிதுமானது. இறைவனாகிய பேராத்துமா அல்லது பேராத்மாவினைப்போன்ற சிற்றாத்துமா மனித உடற்கண் இருப்பதாய் உணரப்பட்டது.

அகத்துமா என்றது ஆத்மா ஆனதுபோலும் திருந்தியதாய் எண்ணப்பட்ட வடிவமே சொருக்கமென்ற சொருகிடமாகிய சொர்க்கமும். சமயம் பற்றிய கருத்தாக்கங்கள் மேன்மை பெறவே, சொருகுதல் முதலிய கரட்டு எண்ணங்கள் விலக்கப்பட்டன. Crudeness in the formative thoughts became refined as matters of thought progressed.

ஆன்மா என்பதில் ஆன் என்பது பசுவென்னும் ஆனைக் குறிக்கும் என்று விளக்கினோரும் உளர்.

நாம் முதலின் விளக்க எடுத்துக்கொண்டது சொரூபமே. ஒன்றன் உருவம் என்பது இன்னொன்றில் சொருகப்பெறுவது அல்லது இணைந்தியல்வதுதான் சொரூபம். இஃது உண்மையில் சொருகு உருவம்தான். இங்கு உருவம் என்ற சொல் வரினும் அருவம் என்பதும் அதில் அடங்கும். சொருகு உருவம், சொருகு அருவம் என விரித்தறியத் தக்கது இது.

உருவம் > ரூவம் > ரூபம். அல்லது அருவம் > அரூபம்
சொருகு + ரூவம் > சொரூவம் > சொரூபம்.
இது பகவொட்டுச் சொல். அறிந்து மகிழ்க.

தொடர்புடைய மற்ற இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2019/08/blog-post_20.html 

(தாமம்,  தாமான் ). அகத்து மா > ஆதமா இன்னொரு விளக்கம்.
ஆத்மா ஓர் இருபிறப்பி. 

 
தட்டச்சுப் பிறழ்வுகள் பின் கவனிக்கப்பெறும்