வியாழன், 20 பிப்ரவரி, 2020

முடியுருவினி ( கொரனா வைரஸ்)

கொரனா வைரஸ் பற்றி எழுதவேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் அவ்வப்போது சில கவிதை வரிகள் தலைக்குள்ளும் இதழ்களிலும் தவழ்ந்து வெளிவரும்.  வசதியான சமயங்களில் எழுதிவைப்பேம். நள்ளிரவின்பின் உறக்கத்தின்போது வரிகள் சொரிவுறுமாயின் அவை விழித்தபின் பெரும்பாலும் நிலைத்திருப்பதில்லை.  அப்படி வந்து உறுத்திய வரிகளில் ஒரு பா இங்கு இடம்பெறுகிறது.

கொரனா  வைரஸ் என்பதைத் தமிழாக்கவேண்டும்,  காரணம் அது கவிதைக்குள் வருகிறபடியினால்.  தமிழ்க் கவியில் பிற மொழிச்சொற்களைப் பெய்து வரைதல் மரபு அன்று,  ஆதலினால்.

அதற்காக யாம் ஆக்கிக்கொண்ட சொல்தான் முடியுருவினி என்பது. முடி அல்லது மணிமுடி போலும் உருவினதாதலின்  "முடியுருவினி" என்றே இவண் வருகிறது.  மகுடமுகி என்றும் சுட்டியிருக்கலாம். மகுடத்தோற்றினி என்றும் இருக்கலாம். இவை பாடலுக்குள் பொருந்தாமை சொல்லாமற் புரிவது.

கவிதை:

முடியுருவினி நோய்நுண்மி அடியெடுத்து வைத்து
கடிநகரிது சிங்கைக்குள் வருதலுக்கென் துணிவே?

உலகிதனிலே தூய்மைக்குப் பெயர்பெறும்அம் மட்டோ?
உடல்நலத் துறை  ஓங்கிற்றே ஒருநகரும் நிகரோ?

பலசாதனைகள் பெற்றிட்டும் ஒருசோதனைமுகர் வைக்க
நிலமகள்தான் இசைவுறுதல்  நிகழாதென்(று) இனி உழைப்பீர். 

அருஞ்சொல்லுரை:

முடியுருவினி = கொரனாவைரஸ்
நோய்நுண்மி  -  வைரஸ்
கடிநகர் -  காவல்மிக்க நகரம்
வருதலுக்கென் -  வருவதற்கென்ன
அம்மட்டோ -  அதுமட்டுமோ
உடல் நலத்துறை =  சுகாதாரத் துறை
முகர்+ =  ( தோல்வி என்று ) முத்திரையிட
முகர ( தோல்வியின் வீச்சினை முகர்ந்து (மோந்துபார்க்க)
என்பதும் பொருந்துமாயினும் சிறப்பில்லை என்று தோன்றுகிறது.

தாழிசை
நிகழாதுழைப் பாயே என்று முடித்தலுமாம். 
 



திங்கள், 17 பிப்ரவரி, 2020

அலாதி

அலாதி என்று நாம் பேச்சில் எதிர்கொள்ளும் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.

அல்லாதன,  அல்லாதவை என்பன அலாதன  அலாதவை என்று கவிதைகளில் தொகுந்து வருதலை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இடையில் லகர ஒற்று மறைவு.

அல் :  அன்மை குறிக்கும் அடிச்சொல்.    அல்+ மை =  அன்மை.
ஆதி :  முன் அல்லது ஆக்க நாட்களில் உள்ளது. தொடக்ககாலத்தது.

ஆதல் : உண்டாகுதல்.  ஆதல் என்பது   ஆ >  ஆகு > ஆகுதல் என்றும் வரும்.  வே > வேகு > வேகுதல் போல.  வே > வேக்காளம்.  வே> வேது > வேதுபிடித்தல்.   வே> வெயில் ( முதனிலைக் குறுக்கம்).

அல் ஆதி > அலாதி என்றால் முன்னில்லாதது. முன் காலத்தில் இல்லாதது. முன்னது அல்லாத ஒன்று.

முன் அதுபோல் இல்லாததென்றால்  அது தனித்தது என்று பொருள்.

அலாதி மகிழ்ச்சி என்றால்  முன் அறிந்திராத மகிழ்ச்சி.

அலாதி என்பதில்  லகர ஒற்று இரட்டிக்கவில்லை.  அல்லாதி என்று சொல்லக்கூடாது.   அலாதி  தான்.

அனாதை என்ற சொல்லில்  அல் என்பது அன் என்று திரிந்தது.  ஆதி + ஐ என்பது  ஈற்று இகரமிழந்து     ஆத் + ஐ  என நின்று ஆதை ஆனது.  ஆகவே அனாதை முன்வரலாறு அல்லது முன்னோர் யாரும் அறியப்படாதவன். இது பெண்பாலுக்கும் ஆகும்.

அன் + ஆதி=  அனாதி.   ஆதியற்றோன். கடவுள்.  நாதி என்பது   அகரமிழந்து நாதி என்றொரு சொல் அமைந்தது. இது பிறழ்பிரிப்புச் சொல்.

அறிவோம் மகிழ்வோம்,

பிழைத்திருத்தம் பின்.

சனி, 15 பிப்ரவரி, 2020

மகுடியும் அதை ஊதுதலும்.

இன்று மகுடி என்ற சொல்லை அறிவோம்.

பாம்புக்கு மகுடி ஊதியவுடன் அது இசைக்கேற்ப ஆடத் தொடங்கிவிடுகிறது என்று சொல்வர்.  ஓசையின் எழுச்சியைப் பாம்பு உணர்ந்தாலும் இசையை நுகர அதற்குச் செவி தனியாக அமையவில்லை என்பர்.  கண்ணும் செவியும் ஒன்றாக உள்ளமையின் பாம்புக்குக் " கட்செவி" என்ற பெயரும் உள்ளது.

எனினும் நம் கவிஞர் பெருமக்கள் இசை கேட்டு நாகம் ஆடுவதாகச் சொல்வர். உடுமலை நாராயணக் கவிராயரின் " இசைக்கலையே இனிதாமே" என்ற பாடலில் இசைகேட்டு பொல்லாத நாகமும்  ஆடுமென்பார்.  இசையின் மேன்மையை உணர்விக்க இவ்வாறு கூறுவர்.

மகுடி என்ற சொல் மகுடம் என்ற சொல்லினின்று திரித்து எடுக்கப்பெற்றது ஆகும்.  மகுடியிலும் ஒரு சிறு குடம்போன்ற உறுப்பு குழாயில் உள்ளது காணலாம்.

மகுடம் என்ற சொல்லின் அமைப்பு ஈண்டு காண்க.

https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_11.html

மகுடி என்றால் மகுடத்தை உடைய ஊதுகுழாய் என்று பொருள்.

மகுடி என்ற சொல் மோடி என்றும் திரியும்.

தேடி வந்தேனே புள்ளி மானே
மோடி செய்யலாமோ என் தேனே தானே

என்பது பழைய நாடகப் பாட்டு.

மகுடாதிபதி என்ற கூட்டுச்சொல்லும் உள்ளது.

அறிந்தின்புறுக.

எழுத்துத் திரிபுகள் ( பிழைகள் ) புகின் திருத்தம் பின்.