வியாழன், 14 நவம்பர், 2019

ஆபத்து என்ற சொல்

இது ஒரு மூவசைச் சொல்.

ஆநிரைகளைக் கைப்பற்றுதல் பண்டைத் தமிழர் போர்த் தொடக்க நடவடிக்கை.    ஆ பற்றுதல்  எனப்படுவது  ஆ பற்று  >  ஆ பத்து என்று மாறியுள்ளது.

ற்று என்பது த்து என்று மாறுவது எழுத்துத் தமிழ் -  பேச்சுத் தமிழ் இவற்றிடை நிகழும் இயல்புப் பெருநிகழ்வாகும்.   இதைப் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.
இடுகைகள் சில ஈண்டு குறைவுண்டன  (இன்மை).

ஆ பற்றுதல் என்பதில் ஐ யுருபு தொக்கது.

நாளடைவில் ஆ என்ற சொல் பேச்சு வழக்கின்றி மறைந்ததும் தமிழரசு மாறிப் பிற நிகழ்ந்தமையுமே  இதன் பொருள் சற்றுத் திரிந்து  பேரிடர் என்னும் பொதுப்பொருளில் இச்சொல் வழங்குதற்குக் காரணங்களாவன.

சிறப்புப் பொருள் திரிந்தமையில்  திரிசொல்.

மாடு பிடித்தல் என்ற தொடரில் வலிமிகாமை போலுமே இது.  காட்டை வெட்டுவோன் காடுவெட்டி.  காட்டுவெட்டி அன்று.  இங்கும் இரட்டிக்கவில்லை.

காடு > காடை.  குருவிப்பெயர்,  இரட்டிக்கவில்லை.   காட்டில் வாழும் ஒரு வகைக் குருவி என்பது பொருள்.  காரண இடுகுறி.

காவு தாரி  >  கௌதாரி.    (முதனிலைக் குறுக்கம் ).  காடுகள் பெருவாரியாகத் தரும் பறவை.  அவை காட்டில் பெரிதும் வாழ்வன என்று பொருள்.  சில வீட்டுப் பக்கங்களுக்கு  -    பின்பு இடம் மாறின.

குறிப்பு: 

ஆபத்து என்பதில் வலிமிகாமைக்குக் காரணங்கள்:

1..  ஆப்பத்து  <  ஆப்பற்று என்றால்,  ஆப்பு + அற்று என்று பிரிந்து   "ஆப்பு வைக்காமல்" என்ற பொருள் தந்து பொருள் மயக்கு உண்டாம்.

2.  இது சொல்லாக்கம். வாக்கியத்தில் வரும் நிலைமொழி வருமொழி அல்ல.


 காவு என்ற சொல் பயன்பாடு:
ஆரியங்காவு.  காவு கொடுத்தல்.

காடு என்பது இருபிறப்பிச் சொல்.  கடு > காடு. (  கடுமை மிக்க இடம்.  வேங்கடம் என்பதில் கடு> கடம் எனினுமதுவாம்.  காத்தல் : கா > காவு. காப்பு.

பின் உரையாடுவோம்.

மறுபார்வை பின்

சனி, 9 நவம்பர், 2019

வித்துவான் பற்றிய இன்னொரு சிந்தனை

வித்துவான் என்ற சொல்பற்றி முன்பதிவுகள் இட்டதுண்டு.  அவற்றுள் ஒன்று அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லை வித்துவன் என்று எழுதுவோருமுண்டு.  அன், ஆன் என்பன இரண்டும் தமிழ்விகுதிகளே.

விள் என்பதோர் அடிச்சொல்.  வித்து விதை முதலிய பலவேறு வடிவங்கள் இதனோடு தொடர்பு கொண்டவை ஆகும்.

எச்ச வினையினின்று சொற்களைப் பிறப்பிக்கும் முறை பாலி முதலிய மொழிகளில் காணப்படுகிறது.

விளைத்தல் என்பதினின்று விளைத்து,  விளைத்த என்ற எச்ச வினைகள் தோன்றும்.  விளைத்து என்பது எச்சவினை வடிவத்திலே பெரிதும் காண்புறும் சொல்லாயினும் அதைப் பெயர்ச்சொல்லாய்க் கருதுவதற்கு இறுதித் துகரத்தைப் பெயராக்க விகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.  கொள் > கொளுத்து என்பது வினையாகவும் பெயராகவும் பயன்பாட்டிற்கேற்பப் போதரும்.  கொளுத்து என்பது கொண்டி அல்லது தாழ்ப்பாள்.  விளைத்து எனற்பாலதும் அவ்வண்ணமே   போதரத் தக்கது.

விளைத்து என்பது இடைக்குறைய வித்து என்றாகிவிடும்.   வித்து என்பது பெயரும் வினையுமாம்.  ளைகாரம் கெட்டது.

எதனையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும்  ஏற்புடைமை மாறாதது காணலாம்.

அடிக்குறிப்பு.


வித்துவான்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html

வியாழன், 7 நவம்பர், 2019

திடகாத்திரம் இனிய படைப்புச்சொல்

இன்று "திடகாத்திரம்" என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

இது ஒரு புனைவுச்சொல்லே.

ஒருவன் திடகாத்திரமாக இருக்கின்றான் என்றால்:

அவன் தன் உடலின் திடத்தினை      {....திட(ம்)  }

உணவினாலும்  ஏனை  நடபடிக்கைகளாலும்   காத்துக்கொண்டு   {....கா(த்து ) .....}

இவ்வுலகில் இருக்கும்படியாக நல்வாழ்வை அடைந்துள்ளான்   {....இரு....}

அம் என்பது ஒரு விகுதி.

அம்முக்கும் ஒரு பொருளைக் கூறிக்கொள்ளலாம்.  பெரிய வேறுபாடு ஒன்றும் ஏற்பட்டுவிடுதல் இல்லை.

எல்லாத் துண்டுகளையும் இணைக்க:

திட(ம்)  +  காத்து +  இரு +  அம்.


=  திடகாத்திரம்

ஆகிவிட்டது.

காத்து + இரு + அம் > காத்திரம் என்பதை

கா+ திறம்  >  காத்திரம் என்றும் பிறழ்பிரிப்பாகக் கூறலாம்.

இதிலும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை.

அறிவீர் மகிழ்வீர்.


தட்டச்சுப் பிழைகள் புகினோ அன்றிக் காணப்படினோ திருத்தம் பின்.