செவ்வாய், 21 மே, 2019

மொழிச்சிக்கல் : உண்டு என்ற வடிவம்.


தமிழ்மொழிச் சிக்கல்கள்

ஈ என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு.

இந்த வாக்கியத்தைப் படித்தீர்களே. இதில் உண்டு என்பது ஒரு தவறான சொற்பயன்பாடு என்பதை அறிந்தீர்களோ?

உண்டு என்றால் இது ஒருமைச் சொல். து என்னும் அஃறிணை ஒருமை தெரிவிக்கின்றது. பல பொருள் என்று பன்மையில் சொன்னபடியால் உள அல்லது உள்ளன என்றே முடித்திருக்கவேண்டும்.

உள்+ து = உண்டு.

உண்டு என்ற சொல்லைக் கற்றோரும் மற்றோரும் ஒருமை பன்மை என்று பகுத்துப் பார்க்காமல் பயன்படுத்தி மகிழ்வதால், இப்போது இவ்விலக்கண விதி வீழ்ச்சி உற்றது.

இலக்கணம் எத்தனையோ கூறுகிறது. எல்லாமும் ஒட்டிச்செல்கை உடையவாய் இல்லை. பல பின்பற்றுகிறோம். நாமறியாமலே பல வீழ்ந்துவிடுகின்றன. வீழ்ந்த விதிகளில் இதுவும் ஒன்று. உண்டு என்பது திணை பால் எண் இடம் என்ற வேறுபாடு இன்றி வழங்குகிறது.

அவன் உண்டு : ஆண்பாலில் வந்தது.
அவள் உண்டு: பெண்பாலில் வந்தது.
அது உண்டு : அஃறிணை ஒருமையில் வந்தது.
அவை உண்டு: அஃறிணைப் பன்மையில் வந்தது.
நீ உண்டு : முன்னிலையில் வந்தது.
நான் உண்டு: தன்மையில் வந்தது.

இன்னும் பொருந்துமிடத்தெல்லாம் பொருத்தி உணர்க.

உண்டு என்பதை சொற்படியே பார்த்தால் ஒருமையில் அஃறிணையில் மட்டும் வழங்கியிருத்தல் வேண்டும். அவ்விதி தவிடுபொடியாகி வெகுகாலம் ஆகிவிட்டதைச் சொல்லாய்வு மூலம் அறிஞர் உணர்ந்து உண்டு என்பதை வழுவமைதி என்று கொள்வர். ஒழிந்துபோன இலக்கண விதிகளை மீள்நிலைப் படுத்துவதில் பயனொன்றும் இலது.


மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்...(வெண்பா).

மோடியே வெல்வாரே முன்வந்த வாக்கினும்
கூடி வருமிது கொள்வீரே ----- நாடிவரும்
மக்கள் அனைவருக்கும் மாண்பு மிகச்சேரும்
தக்கநல் ஆட்சியால் தான்.


இந்த வெண்பாவை இந்தியத் தேர்தலுக்கு முன்னரே
எனது கைப்பேசியில் பதிவு செய்திருந்தேன். வெளியிட வேண்டுமென்று அப்போது ஆவலாய் இருந்தது. ஒரு கணிப்புமின்றி வெறுமனே எழுதியதால் வெளியிடவில்லை.

இப்போது கருத்துக்கணிப்புகள் அவர் வெல்வார் என்`கின்றன. என் கவியும் அதையே சொல்வதால் ஏன் வெளியிடவேண்டுமென்று ஓர் எண்ணம் தோன்றியது. அதை ஒருவாறு மீறிக்கொண்டு இப்போது இதைப் பதிவு செய்துள்ளேன். ஓர் எளிமையான பாடல்தான்.

ஊழலின் சொர்க்கமாக இருப்பது இந்தியா. அங்குபோய் கள்ளப்பணம் என்பதை ஒழிக்க முனைந்தால் பலரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். பலர் வரியே செலுத்துவதில்லை. ஜி எஸ் டி என்னும் வரியை அங்கு புகுத்தினால் பலர் வெகுண்டு எழுவர். ஊழலால் பலருக்கு ஊதியமுண்டு. அதை இல்லாமலடித்தால் சினவாரோ என்ன? இந்திய வரலாற்றில் இவரைப் போல இழித்துப் பேசப்பட்டவர் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் நாள்தோறும் ஏசுகின்றன. குற்றங்கள் பலவற்றைச் சாட்டுகின்றன. பாவம்! மக்கள் ஆதரவால் வென்றால் அது உண்மையை மறைக்க முடியாதென்பதை உலகுக்கு உணர்த்துவதாகும்.

சனி, 18 மே, 2019

ஆம்பலரி - சூரியனுக்கு இன்னொரு பெயர்.

சூரியனைக் கண்ட தாமரை மலர்கிறது. இதை நேரடியாகப் பார்த்திராவிட்டாலும் நூல்கள் வாயிலாக அறிந்திருக்கலாம்.   நகர வாழ்நர் பெரும்பாலும் தாமரைக் குளங்களை  ஆங்காங்கு கண்டிருந்தாலும் மலர்கின்ற காட்சியினைச் சென்று காண முனைவதில்லை.

சூடு தருவோன் சூரியன்.

சூடு > சூடியன் > சூரியன்  (  ட - ர திரிபு வகை).  இப்படித் திரிந்த இன்னொரு சொல் வேண்டுமானால்:

மடி >  மரி.

இன்னொன்றையும் கவனிக்கவேண்டும்.  மடிதல் என்பது சாதல் என்ற பொருளில் தன்வினை வடிவம் கொள்கிறது.  மடித்தல் என்ற பிறவினை வடிவோ  இப்பொருளுடன் எந்தத் தொடர்பும் இலாது நிற்கிறது.  சாகடித்தல் என்ற பொருள் இல்லை.  எனவே மடிதல் என்ற சொல்லுக்குச் சாதல் என்பது பிற்காலத்து எழுந்த பொருளாகும்.   புழு பூச்சி முதலியவை சாகும்போது இரண்டாக மடிந்து சாவதால் மடிதல் என்பதற்குச் சாதல் என்ற பொருள் ஏற்பட்டது. இதனைத் தமிழ் ஆசிரியர் கண்டு விளக்கியுள்ளனர். இதுவே உண்மையுமாகும். 

டகர ரகரத் திரிபு:

இதுபோன்ற திரிபினை நுணுக்கமாக நாடினால் பல வழிகளில் அறியலாம்.
" அடுத்தல் " என்பதும்   " அருகுதல் "   என்பதும் பொருள் தொடர்பு உடைய சொற்கள்.

அடு  :  அரு    ( ட - ர திரிபு காண்க ).

பல பேச்சுவழக்குச் சொற்கள் அயலில் புகுந்து உயர்வு பெற்றுள்ளமையால்
சூடியன் > சூரியன் என்பதும் அங்கனம் உயர்வுபெற்றதறிக. சூடு > சூடு இ அன் > சூட்டியன் என்று இரட்டிக்காமல் சூடியன் என்றே நின்று சூரியன் என்றானது. இரட்டிப்பது சொல்லாக்கத்தில் கட்டாயமில்லை:  எ-டு:  அறு+ அம் =  அறம்,  இரட்டிக்காமல் தருமம் முதலியன குறித்தது.  இரட்டித்துப் பொருள் வேறுபடும்.  அறு + அம் = அற்றம்,  தருணம்.

சூடு என்பது விகுதிகள் ஏற்குமுன் சூர் என்று திரிந்துவிட்டாலும் சூட்டியன்  என்ற வடிவத்துக்குக் காரணம் கூறல் தேவையில்லை.  சூடி >  சூரி எனினும் ஆம். அன் வந்தது பின்னரே.

சூரி =  பகலவன்.

 சூரியனை அவ்வாறு ஆண்பாலில் கூறுவது தமிழர் வழக்கு.  அதற்குப்  பால் ஒன்றும் இல்லை. சூடம் சூடன் என்பன வேறு பொருளுக்குப் பெயராய் இருப்பதால் அதற்கு நீங்கள் வேண்டுமானல் சூட்டன் என்ற இன்னொரு பெயரைக் கொடுத்து மகிழ்ந்துகொள்ளுங்கள். உண்மையில் உலகில் வெம்மைக்கு அதுவே காரணம்:  அது வெய்யோன்.  வெய்> வெயில்.  இதிலும் யகர் ஒற்று வரவில்லை.  ( இரட்டிக்கவில்லை).

இனி ஆம்பலரி.

தாமரை சூரியனால் மலர்கிறது.  ஆம்பலோ குவிகிறது.   அருகுதல் என்பது குவிதல் குறிக்கும்.  அரு > அருகு.  அரு + இ =  அரி  ( சுருக்கம் ).  இப்பொருள் அரு என்ற அடிச்சொல்லில் இருந்து கிடைக்கிறது.  இலைச் சோற்றுக்கும் வாய்க்கும் உள்ள இடைவெளி சுருங்கவே,   அரு > அருந்துதல் ஏற்படுகின்றதென்பதும் கவனிக்க.  வேறு வகையிலும் இதை விளக்கலாம் எனினும் தொடர்பு காண்க.

அரி என்பது சுருங்குதல் எனவே  இதைச் சுருக்குவது சூரியனே.  அவன் ஆம்பல் அரி ஆகிறான்.  இது சூரியற்கு இன்னொரு பெயர்.