வெள்ளி, 17 மே, 2019

எச்ச வினை இடைநிலை

உட்டணம் என்பதே இறுதியில்  "உட்ணம்" " உஷ்ணம்" என்று திரிந்து வழங்கிவருகிற தென்பதை முன் கூறியிருந்தோம்.  இதை நீங்கள் மறந்திருத்தல் கூடும்.

உள் தணல் >  உட்டணல் > உட்டணம்  என்று ஆனதே மூலமாகும்.

https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html

இன்று  இன்னொரு சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இன்று நாம் காண்பது இலாயம் என்ற சொல்.

இல் =  வீடு.
ஆய :  இது இங்கு "போன்றது" என்ற பொருள் உடையது.
அம்  என்பது விகுதி.

இலாயம்:  இல்லம் போன்றது.  எடுத்துக்காட்டு: குதிரை இலாயம்.

சொல்லமைப்பில் எச்சவினைகளும் இடைநிலைகளாய்ப் பயன்பட்டிருக்கின்றன என்பதை இதன்மூலம் அறியலாம்,

இலாயம் லாயம் என்பவை சங்கத அகரவரிசையில் காணப்படவில்லை..




புதன், 15 மே, 2019

விண்ணு கண்ணன் கிருஷ்ணசாமி

விண்ணு என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைந்ததே விஷ்ணு என்ற சங்கதச் சொல் என்பதைச் சில ஆசிரியர்கள் முன் உரைத்ததுண்டு.  இந்த ஆய்வு சொல்லும் நூல் இப்போது கிட்டவில்லை

ஆனால்:

விண் > விண்ணு > விஷ்ணு.

ஓர் எழுத்து மாற்றம் தான்.  அழகான இன்னொரு சொல் அமைந்துவிட்டது. மொழி ஆக்கம் என்றால் இதுவே மொழியாக்கமாகும்.

விண்ணனுக்கு நீலமேகன் என்ற பெயரும் உள்ளது.  நீலம் என்பது விண்ணின் நிறமே.  இதைக் கருமை என்று சொல்வதுண்டு.

"வானக் கருமை கொல்லோ?"  என்று வரும் பாரதி பாடலைக் கண்டு இதை உணர்ந்து இன்புறலாம்.

கரு என்ற தமிழ் அடிச் சொல் அயல்திரிபானால் கிரு என்று வரும்.  இவ்வாறே
"கிருஷ்ணபட்சம்"  என்ற சொற்றொடர் உண்டாயிற்று. நிலவு இருள் அடைந்த பக்கமே கிருஷ்ணபட்சம்.   பச்சம் > பட்சம் > பக்கம் எல்லாம் ஒன்றே.

கரு > கருப்புசாமி :  இச்சாமியே கிருஷ்ணசாமி. கிருஷ்ண  என்றால் கருத்த என்று பொருள்.

ரகர றகர வேறுபாடின்றித் தமிழில் வரும் சொற்களில் கரு> கறு என்பதும் ஒன்று.

கரு > கன் > கண் என்றும் திரியும்.

கரு:  கன்னங்கரேர் என்ற தொடரை நோக்கின் கரு கன் என்று திரிதல் அறியலாம்.

கரு > கண்ணன் என்பதில் கண் என்று திரிதல் காணலாம்.  எனினும் கண் என்ற விழி குறிக்கும் சொல் வேறு.

கரு என்பது கார் என்று திரியும்.  கார்மேகம்,  காரிருள் என்பன காண்க.

விண்ணு என்பதை முதலில் வணங்கியோர் மீனவர்களாகவே இருக்கவேண்டும்.  கண்ணன் என்பது ஆயர் கடவுளாக உள்ளது.  இவ்விரண்டும் பிற்காலத்து ஒன்றுபடுத்தப்பட்டு இன்று இரண்டும் கருமை நிறமென்றும் நீலம் என்றும் சொல்லப்படுகிறது.   தெய்வங்கள் இணைப்பு பற்றி மேனாட்டு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

திங்கள், 13 மே, 2019

நட்டமும் குந்தகமும்



குந்தகமும் நட்டுநிற்றலும்


சொற்களிலிருந்து அவற்றின் கருத்துக்களை ஆய்ந்து அவற்றின் இயைபு காண்போமாக.

ஏதேனும் ஒன்றைத் தொடக்கி நடைபெறுவித்துக்கொண்டிருந்தால் அது நன்றாக : “ ஓடிக்கொண்டிருக்கின்றது " என்று சொல்வது வழக்கம். இந்தக் கருத்தைத் தழுவி " வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது" என்ற கருத்துவழக்கும் எழுந்தது.


நீங்கள் தொடங்கிய கடை எப்படி என்றால் " ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தப் பையன`கள் ஒரு மாதிரி பார்த்துகொள்கிறார்கள் " என்ற பதில் வருகிறது.

குந்துவது என்பது உட்காருவது ஆகும். முதலில் குந்துவது என்ற சொல்லைப் பார்ப்போம்.

அடிச்சொல்: குல் > …

குல் > குன் : ஓர் அடியினின்று இன்னோர் அடி தோன்றியது.

இப்படித் திரிந்தவை ஆயிரக் கணக்கில் இருந்தாலும், இன்னோர் எடுத்துக்காட்டு வேண்டின் தருதும்:

திறல் > திறன்.


குன் து > குன்று. ( சிறிய மலை). இது அம் விகுதி பெற்று நீண்டு, குன்றம் என்றாகும். குன்றமென்பது குன்று என்பதனுடன் சொற்போலி. அம் விகுதி வெறும் அழகுபடுத்தவே அமைந்தது. குன்றம்: வழக்குகள்: திருப்பரங்குன்றம், குன்றத்திலே குமரன். குன்றத்தின் உச்சி: கோடு. -டு: திருச்செங்கோடு; கசரக்கோடு.

குன் து > குந்து. ( உட்காருதல் ).


மனிதன் குந்தும்போதும் ஒரு விலங்கு குந்தும்போதும் ஒரு பறவை குந்தும்போதும் உடலின் விரிவு அகலமெல்லாம் குன்றிவிடுகிறது. கால் கைகளைக் குறுக்கிக்கொண்டுதான் அமைதல் காணலாம். இதனால்தான் குந்துதல் என்ற சொல் குறுக்கிக்கொள்ளுதல் என்னும் பொருளில் உட்காருதலைக் குறித்தது. ஆனால் ஆய்வாலன்றி இப்பொருளை அறியமுடியாமைக்குக் காரணம் சொல்தோற்றக் காலத்தின் பொருளமைதி இன்று இழக்கப்பட்டமையே ஆகும். இவ்வாறு அமைப்புப் பொருளும் வழக்குப் பொருளும் வேறுபடுதல் மொழியியல்பு; மாறாமையே வியத்தகுவது ஆகும்.


இனிக் குந்தகத்துக்கு வருவோம். நல்லபடி ஓடிக்கொண்டிருந்தது குந்திப்போனால் அதுவே குந்தகம் ஆய்விடும்.


ஓடிக்கொண்டிருப்பது நட்டு நிற்றலே நட்டம்; நடு + அம் = நட்டம். டகரம் இரட்டித்தது. இதுவும் கருத்தில் குந்தகத்துக்கு ஒப்புமையான கருத்தே ஆகும். குந்திவிடுவது என்ன? அப்புறம் ஓரிடத்து நட்டு நின்றுவிடுதல் என்ன?


https://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_23.html

தொடர்ந்து வாசியுங்கள்.