திங்கள், 28 ஜனவரி, 2019

வேற்றுமை வித்தியாசமான கதை

வே என்ற எழுத்துக்கும் ( வேகாரம் )   வி என்ற எழுத்துக்கும்  (  விகரம் )  உள்ள ஓர் ஒலித்தொடர்பினை இப்போது கண்டு இன்புறுவோம்.

வேதம் என்ற சொல் வித் என்னும் சொல்  லடிப்படையில் தோன்றியதென்று  ஏறத்தாழ சில நூற்றாண்டுகட்கு முன் சொல்லியிருந்தனர்.  அதனை இன்றும் பலர் மகிழ்வுடன் சுட்டிக்காட்டுவதுண்டு.

வித் >  வேத்    :  வேத் + அம் = வேதம்  என்றனர்.

இவர்கள் இப்படிக் கூறக் காரணம் நாம் இங்குக் கூறியவாறு இவ்வொலிகள் திரிதொடர்புடையன என்பதே.

வேறு,  வேற்றுமை என்ற சொற்கள் தமிழில் உள்ளன.

அதே பொருளுடைய இன்னொரு சொல்:  வித்தியாசம் என்பது.

இங்கும்  வே > வி தொடர்பு நல்லபடியாகப் பளிச்சிடுகின்றது.  ஆதலின் திரிபு வகையை ஒரு விதி அல்லது முறைப்படியானது என்று சொல்வது சரியானதே.

திரிபுமுறை சரி என்றாலும் அடிச்சொல்லாகத் தரப்பட்டது சரிதானா என்பது இன்னொரு கேள்வி.  அதற்குள் நாம் இப்போது செல்லவில்லை.

வே < வி;  வே > வி. இரண்டும் முறைப்படியானவை.

வேறு > வேற்று >  வேத்து > வித்து

வேறு என்பது சொல்லின் உரு வேற்று என்று இரட்டிக்கும்: அதை வேற்றுமை என்ற சொல்லில் கண்டறிவது ஒன்றும்  கடினமில்லை.

வேற்று என்பது வேத்து என்று ஊர்ப்பேச்சில் திரியும்.  வேற்று ஆள் என்னாமல் வேத்தாள் என்று பேச்சில் சொல்வதால் இது தெரியக்கூடியதுதான். இதை அறியவும் பெரிய மூளை வேண்டியதில்லை.

வேத்து என்பது வித்து என்று மாறுவது  மேற்சொன்ன விதிமுறைகளுக்குள் அடங்கிய ஒன்றுதான்.  அதிலும் நமக்கு  ஒரு கருத்துவேற்றுமை இல்லை.

வித்தியாசம் என்பதில்   இ - யாசம் என்பவற்றைக் கவனிப்போம்.

ஆயது = ஆனது.

ஆய+  அம் =  ஆயம்   ( ஆனது )

வித்தி  என்ற முதற்படிச் சொல்பகுதியில்  வித்து என்பது வித்தி என்று மாறியது.

வித்து ஆயம் என்றால் நன்றாக இல்லை.   எச்சச் சொற்களில் வருவதுபோல அதை வித்தி  ஆயம் என்பது நன்று.   விரும்பு என்ற சொல் எச்சமாகும்போது விரும்பி என்பதுபோலும்   சொல்லு என்பது சொல்லி என்று வருவது போலும் ஓர் அமைப்பு இது.   ஆய என்பது வினைச்சார்பான அமைப்பு ஆதலின் இகரம்
பொருந்துகிறது.  வித்தி  ஆய  என்பது மிக்க நன்று.

இனி  யகரம்  சகரமாகும்.  எடுத்துக்காட்டு:  நேயம் >   நேசம்;  வாயில் > வாசல்.

இங்கு  வித்தி ஆய என்பது வித்தி ஆச என்று மாறுகிறது. அப்புறம் இவற்றைப் புணர்த்தினால் வித்தியாச என்றாகிறது.   அம் விகுதி சேர்த்தால்  வித்தியாசம் ஆகிறது.



திரிபு விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டுள்ளன என்பதைக் கண்டு மகிழலாம். இதை முறையாக விளக்கியுள்ளோம்.


எழுத்துப்பிழைத் திருத்தம் பின். 

மற்றொரு விளக்கம்: பந்து பந்தி சிப்பந்தி.

சிப்பந்திகள் முற்காலத்தில் தனியாய்ச் செயல்படாமல் தம் வேலைத்தலைவரைப் பற்றியவாறே சென்றுள்ளனர் என்பது சொல்லாய்வின் மூலம் அறிந்ததாகும்.  எடுபிடி என்பார் போலவேதாம்.  எடுபிடிகள் ஏவுவாரை ஒட்டியவாறே நின்று உத்தரவுகளைப் பெற்றுச் செயலாற்றவேண்டும். சிப்பந்தியரும் அன்னவரே ஆவர்.

இதில் நாம் உணர்தற்கு முன்மையான சொல் பந்தி என்பதே.

பலர் இருந்து உண்பதே பந்தி.

பல் > பன் > பன் தி > பந்தி ஆம்.

முந்தி பிந்தி என்ற சொற்கள் போலவே இதுவும்.   முன் தி  : முந்தி;  பின் தி:  பிந்தி.

 மந்தி என்பதும்  அன்னதாம்.

மன் -  மனிதன் என்பதன் அடிச்சொல்.
மன் தி  >  மந்தி.   மனிதன் போன்ற விலங்கு.

பல் என்பதில் இறுதி லகர ஒற்று   -னகர ஒற்றாக மாறும்.

பல் > பன்.    இவ்வாறு சொற்புணர்ச்சியிலன்றி  சொல்லும் தனியாய் மாறும்.

எடுத்துக்காட்டு:  திறல் > திறன்.

ஆகப் பல் என்ற பன்மைக் கருத்தினின்றே பந்தி வந்துள்ளதென்பது மெய்ப்பிக்கப்பட்டது.

பண்டை நாட்களில் பந்துகள் பல கயிற்றுப் பிடிப்புகளால் உருவானவை ஆம்.
பல் >  பன் > பந்து.  இப்போது தேய்வையால் பந்துகள் உருவாகின்றன.

பல் என்பது பிடித்துக்கொள்ளுதலையும் குறிக்கும்.

பல் > பன் > பன் து  அம் =  பந்தம்.  மணவுறவுகளால் பற்றுடையராதல்.  உறவால் பலராதல்.   ஒன்றை இன்னொன்று பற்றுவதானால் அது ஒருமையில் நடவாது;  பன்மை வேண்டுமாதலின்  பந்தம் போலும் சொற்களில் பன்மைக் கருத்து உள்ளிலங்குவதாகும்.

சிப்பந்தி என்பதில் சில் பல் இரண்டுமுண்டு.  சில் என்பது சி என்று கடைக்குறை   ஆனதென்றும் கொள்ளலாம்;  அன்றிச்  சில் + பந்தி > சிற்பந்தி > சிப்பந்தி என்று திரிபென்றும் கொள்ளலாம்.  இருவழிகளும் நன்றே.

இவை முன் சற்று வேறு விதமாக விளக்கப்படினும் ஒன்றென்றே அறிக.

எழுத்துப் பிழைத்திருத்தம் பின்.

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

விகுதி இல்லாத சொல்லுருக்கள்.

சொற்களின் அமைப்பில் பகுதி விகுதி சந்தி இடைநிலை சாரியை என்று பல சொல்வர்.  இப்போது நாம் இவற்றில் எவையுமற்ற சொல்லமைப்புகள் சிலவற்றைக் கண்டு இன்புறலாமே.

எடுபிடி என்ற சொல்லைக் கவனியுங்கள்.   ஒரு சீமானுக்கு வேண்டியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிப்பந்தியைத் தான் எடுபிடி என்`கின்றோம்.  எடு என்பது ஒரு வினைச்சொல். பிடி என்பதும் ஒரு வினைச்சொல். இரண்டும் சேர்ந்து ஒரு கூட்டுச்சொல்லாகி இது அமைந்துள்ளது.

கெடுபிடி என்ற சொல்லும் அன்னது.  கெடுதல், பிடித்தல் என்பனவே  இணைந்து ஒரு சொல்லாகிவிட்டது.

வருமானம் என்பதற்கு ஈடாக வரும்படி என்ற சொல்லும் வழங்குகிறது.  இதில் படி என்பது சிறு வகையினவான வரத்துகளைக் குறித்ததுபோலும்.  வரும் என்பது எச்சவினையாகும்.

இரு தொழிற்பெயர்கள் இணைப்பில் அமைந்ததே பேச்சுவார்த்தை என்ற சொல் வழக்கு ஆகும்.  பேச்சு வார்த்தை என்பன ஒரு பொருளன போல் தோன்றிடினும் அவை குறிப்பது ஒரு அலுவலகப் பூர்வமான ஓர் உடையாடலையே  ஆகும்.

பேச்சு என்பதில் விகுதி இல்லை.  பேசு > பேச்சு;  இங்கு சகரம் இரட்டித்துச் சொல் அமைந்தது, வார்த்தை என்பதில் ஐ விகுதியாகும். தகர ஒற்று இடைநிலை என்று சொல்க.  இரும்பு ஈயம் போலவே வார்த்தைகளும் வார்த்து எடுக்கப்படுகின்றன என்பதை  அறிந்துகொள்க.  வார் என்பது ஏவல் வினை. வார்த்தை :   இது வார்த்தல் என்பதன் சார்பில் அமைந்த சொல்லாகும்.