செவ்வாய், 20 நவம்பர், 2018

அரணும் சரணும்

இன்று நாம் சரணம் என்ற சொல்லை அறிவோம்.

அகர முதலான அல்லது அகர வருக்க முதலான சொற்கள் சகர முதலாக அல்லது சகர வருக்க முதலாகத் திரிவது பெரும்பான்மை.  இவ்விடுகைகளில் இத்தகு சொற்கள் பல ஆராயப்பட்டுள்ளன. விளக்கினாலன்றி தெளிவுறாத பல சொற்களும் இப்பட்டியலில் உள.

இப்போது ஒரு சொல்:

அடுதல்:  என்றால் சமைத்தல் என்று பொருள்.

இதிலிருந்து தோன்றியதுதான் அடுப்பு என்ற சொல்.

அடுப்பில் வைக்கும் சட்டிக்கும் இவ்வடியினின்றே சொல் அமைந்தது.

அடு >  அட்டி >  சட்டி.


அடு என்பதனுடன் இகரம் சேர்த்தால் அடு + இ =  அட்டி ஆகும்,  இப்போருளில் இச்சொல் வழக்கில் இல்லை, இதிலிருந்து தோன்றியதே :  சட்டி என்பதாகும்.

யாவரும் அறிந்த பட்டியலில் உள்ள ஒரு சொல் வேண்டுமென்றால்:  அமண் = சமண் என்பதை வைத்துக்கொள்க.

அரண் என்பது தமிழில் பாதுகாப்பைக் குறிக்கும்.  அரண்கள் எங்கும் இருப்பவை அல்ல.  ஆனால் பாதுகாப்பிற்கு உரிய இடத்தில் இருக்கும்.
அரிய பாதுகாப்புக் கருவிகளுடன் உரிய இடத்தை அண்மி இருப்பது அரண். அரு+ அண் =  அரண் ஆகும். உரிய இடமென்பது எதிரிகள் கடந்து சென்றால் எங்கு பேரிடர் ஏற்படுமோ அவ்விடமே உரிய இடம்.  அப்படிக் கடக்க முடியாமல் அவர்களைத் தடுத்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதே அரண்களின் தேவை ஆகும்.

இவ்வழகிய சொல்லே அரண் ; அது பின் இறைவனிடத்துப் புகுந்து பாதுகாப்பு வேண்டுவோனுக்குச் சரண் என்று மாறியமைந்தது.  அரண் புகுதலே சரண் புகுதலாம்.  இதிலிருந்து சரணம் என்ற சொல் அமைந்தது.

நான் இறைவனிடத்திற்கு வந்துவிட்டேன்; இங்கே எனக்குக் காவல் முழுமை பெறுகிறது.  இதுவே அரண்,  இதுவே சரண்,  என்பவன்,  சரணம் சரணம் என் கின்றான்.    அம் என்ற விகுதியை வெறும் விகுதி என்றாலும் அமைவு குறிகும் பொருள்விகுதி என்றாலும் அதனால் பிழையில்லை என்பதறிக.

அரு அண் -  அரண்.
அரண் >  சரண்>  சரணம்.

இது பின் ஷரணம் என்றும் ஆனது.  இறைவனின் இடமே  பற்றனுக்குக் கோட்டை என்றுணர்வோம்.

ஏதேனும் பிழைகள் தோன்றின் பின் திருத்தப்பெறும்.

திங்கள், 19 நவம்பர், 2018

உணவும் அளவும்

சருக்கரை நோயில் ஒருகால் எடுத்துவிட்டால்
இருக்கவும் நடக்கவும்  அடைவது துன்பமதே.
உருக்கென ஊட்டமாய் வளர்ந்த உடம்பெனினும்
பருக்கை மிகுதியால் பாழ்படக் கெடும்பலர்காண்.

உண்பதும் கணித்தினி அளவுடன்  செய்திடுவாய்
பண்புடன் உணவினை அமைத்துப் பாரினில்வாழ்;
கண்படும் உண்பொருள் அனைத்தும் விழைந்திடிலோ
விண்படும் நோய்களும் விரைந்து வந்திடுமே.


உருக்கு :  இரும்பு.

பருக்கை மிகுதியால் பாழ் :   இது இரத்தத்தில் இனிப்பு
கூடுவதால் ஏற்படும் நலமின்மை;

பலர் கெடும் காண் -   பலர் இன்னும் கெட்டு பொது உடல்
நலக் கேட்டை அடைதல்  காண்க .

அதாவது கெடுதல் ஒன்று இன்னொன்றுக்கு வழி செய்தல்.

இனிப்புநீரும் காலும்.

இனிப்புநீர் நோயாளிகளுக்குக் கால்தான் மிக முக்கியமானது என்று கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

அம்மையார் ஒருவருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது.  இவ்வகையான புண் வந்து அப்புறம் அது தானே ஆறிப்போய் நன்றாக இருந்தவர்களும் பலராவர்.

ஆனால் இந்த அம்மையாருக்கு வந்தது கொஞ்சம் 'பிடிவாதமாய்'  ஆறாப்புண்ணாக இருந்துவந்தாலும்  பலவகைக் களிம்புகள் தைலங்களைத் தேய்த்துக்கொண்டு அம்மையார் கவனிக்காமல் இருந்துவிட்டார்.  யாரும் கேட்டால் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று சொல்வார்.

நாளடைவில் காலில் நோய்நுண்மிகள் நச்சுத்தன்மையைக் கக்குவனவாக மாறிவிட்டன. ஒற்றைக் கால் வலிமை இழந்ததுடன் மருத்துவர்கள் அதனை அறுவை செய்து எடுத்தாலே பிழைக்கமுடியும் என்று சொல்லிவிட்டனர்.

கால் போனபின் சக்கர நாற்காலியில் கட்டுண்டவராக இருந்தவர் பலமுறை மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றார். ஐந்தாண்டுகள் இவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இனிப்பு நீர் நோய் கூடிவிட்டது.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவ்வம்மையாரின் ஆத்ம சாந்திக்கு வேண்டிக்கொள்கிறோம்.

 இதுபோலத்  துயர் உறுவோர் பலர் என்பதை அறிவோம். இனிப்பு நீர் இருந்தால் கால்களை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் காயமோ புண்ணோ ஏற்பட்டால் அதற்கு முதன்மை கொடுத்து உரிய மருத்துவ உதவியைத்  தாமதம் இன்றி நாடுங்கள்.