வியாழன், 4 அக்டோபர், 2018

வதந்திக்கு வேறு வடிவங்கள்.

வதந்தி என்ற சொல் உண்மையில் தமிழ்ச்சொல்லே என்பதை வெளிப்படுத்தினோம்.  இதை எப்படியெல்லாம் அமைத்திருக்கலாம் என்பதை இப்போது பயிற்சி செய்வோம்.

வரு+  தரு + தி =  வருதருதி.

பொருள் அதுவேதான்:   வருகின்றவர் தருகின்ற செய்தி.

இத்தகு செய்திகள் பொய்யாகவும் இருக்கலாம்; மெய்யாகவும் இருக்கலாம். அது உரிய செய்தி அறிவிப்பு நிறுவனத்தின் வழியாக வரவில்லை என்பதுதான் இதன் உட்கருத்து.

வருதருதி என்பது  இனிமையாக அமையவில்லை. அருவருப்பாக உள்ளது!  ஆனால் அருவருப்பு என்பதில் இரண்டு ருகரங்கள் இருந்தாலும் நன்றாகவே உள்ளது.  வருதருதி என்பது நீளமாகவும் உள்ளது.

இரண்டு ருகரங்களையும் எடுத்துவிட்டால்,  எப்படி இருக்கும்?

வ+   த +  தி.

இதைச் சேர்த்து ( புணர்த்தி ) எழுதினால்  :

வத்தத்தி.

வத்தச்சி என்று ஒரு சொல் வழக்கில் உள்ளது போலும்.  இது அதுபோல் ஒலிக்கிறது.  வத்தி தத்தி என்பவெல்லாம் பாட்டில் நன்றாக இருக்கும்.  இங்கு
ஒலித்தடை உண்டாவதுபோல் உள்ளது.

தகர ஒற்றுக்களை மெலித்து நோக்குவோம்:

வந்தந்தி.

இதுவும் அவ்வளவு நன்றாக இல்லை.   இன்னும் அறுவை தேவைப்படுகிறது.

வதந்தி:  இப்போது நன்றாக உள்ளது.  வழக்கில் இது  நன்றாகவே செயல்புரிகிறது.

ஐயப்பன் கோவிலும் சட்டமும்.

சட்டப்படி எல்லா வயதுப்  பெண்களும் ஐயப்பனைக் காணச் செல்லலாம் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  சட்டம் என்று மட்டும் பார்த்தால் அது சரியென்று பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருந்தாலும் நம் பெண்கள் சில வேளைகளில் கோவிலுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடவே செய்கின்றனர்.  எடுத்துக்காட்டாக சைவமல்லாத உணவுகளை உட்கொண்டு அதன்பின் கோவிலுக்குச் செல்லாமல் இருந்துவிடும் பல பெண்கள் இருக்கின்றனர்.  இதேபோல் உடல் தூய்மை இல்லாமல் உள்ளபொழுது போவதில்லை.

நாம் கோவிலுக்குப் போவது சட்டப் பிறச்சினை ( பிரச்சினை) களை எழுப்புவதற்காக அன்று. இறையருளைப் பெறவே செல்கிறோம்.

எப்படிச் சென்றால் அது இறைவனுக்கும் நமக்கும் ஏற்புடையது என்று  இதுநாள் வரை கடைப்பிடித்து வந்தோமோ  அப்படியே சென்று வணங்கி அருள்பெறுவதே நன்றாகும்.  சட்டத்தின் தீர்ப்பினை  நாம் எதிர்த்து நிற்கத்
தேவையில்லை.


புதன், 3 அக்டோபர், 2018

கச்சை கட்டி ஆடு.

இன்று கச்சை என்ற சொல்லை அறிந்து இன்புறுவோம்,

கடின ஒலிகளாய் உள்ளனவற்றை விலக்கிச் சொற்களை அமைக்கும் தந்திரத்தைப் பண்டைச் சொல்லாய்வு நிபுணர்கள் அறிந்திருந்தனர்.  நிபுணர் என்போர் யார் எனில் நிலையறிந்தோரே நிபுணர் எனப்படுவர்.

எடுத்துக்காட்டு:   இடு அம் என்ற பகுதி விகுதி இணைந்து இட்டம் என்ற சொல்லானது.  ஒரே சொல்வடிவத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுமாதலால் பண்டை நாட்களில் பல்வேறு வடிவங்களைப் படைத்துக்கொண்டனர் தமிழரும் பிறரும்.

இடு + சை என்ற இரண்டில் இடு பகுதி;   சை என்பது விகுதி.  இடுச்சை ஆகும்.
இட்டம் என்பதும் இடுச்சை என்பதும் ஒன்றுதான்.  மனத்தை இடுவதே இட்டமும் இடுச்சையும் ஆகும்.   இடுச்சை என்பதில் உள்ள டுகரம் களைந்தால் இச்சை ஆகி உச்சரிக்க இன்னும் எளிதாகிவிடுகிறது. இத்தகைய தந்திரங்கள் தொல்காப்பியர் காலத்திலே கண்டுபிடித்துவிட்டனர் என்பதைக் கூறியுள்ளோம்.  புதுமை ஒன்றுமில்லை.

பீடுடைய மன்னன் : பீடு மன்:  இது சுருங்கி பீமன் ஆனது.  அப்புறம் வீமனும் ஆனது.  இதில் கவனிக்க வேண்டுவது:  டுகரம் களைதல்.  அல்லது இலக்கணப்படி இடைக்குறை.

இனிக் கச்சை அறிவோம்:

கட்டு > கட்டுச்சை > கச்சை.

கட்டு என்பது கடு என்ற சொல்லின் விரிவுதான்.

கடு+ சை :>  கடுச்சை > கச்சை.

ஆகவே கச்சை ஆனது.  அதற்குரிய வினைச்சொல்:  கட்டுதல் என்பதே.

கச்சை:  கட்டுதல்,  போட்டி போடுதல் என்பது போல.



-------------------------------------------------------------------------------------------------
நிற்பு :  இது நிலை என்னும் பொருளது.
உணர்:  உணர்வோர்.   நிற்புணர் :  நிபுணர்.  இதில் றகர ஒற்று குறைந்தது.
ஒரு கலையின் அல்லது அறிவியலின் நிலை உணர்ந்தோர் நிபுணர். இது ஆகுபெயராய் உணர்ந்த மனிதனைக் குறித்தது.

விபுலானந்தர் என்ற பெயரில் விபுலம் என்பது விழுபுலம் என்பதன்
இடைக்குறை.  ஆனந்தம் என்பதும் முன் விளக்கப்பட்டது.  ழுகரத்தை எடுத்துவிட்டு ஒரு புதுச்சொல்லைப் படைத்தது திறமைதான்.

இவை 2010ல் விளக்கி வெளியிடப்பட்டவைதாம்.

பிழைகள் புகின் திருத்தம் பின்.