வியாழன், 27 செப்டம்பர், 2018

சதி என்னும் சொல்.

சொற்கள் எப்படி அமைந்தன என்று எழுத்தாளன் கவலைகொள்தல் ஆகாது. இதிற் கவனம் செலுத்தினால் அவனெழுதிக் கொண்டுள்ள கட்டுரையோ கதையோ குன்றிவிடும்.  ஆகவே சொல்லியலைத் தனிக்கலையாகப் போற்றவேண்டும்.  படைப்பாற்றலை வெளிக்கொணராத  எழுத்துவேலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள காலை சொல்லியலில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

சொற்களில் வினைகள் பெயராகுங்காலை சில முதனிலை திரிகின்றன. திரிபு வகைகளில் நீள்தல் குறுகுதல் என்பவை அடங்கும்.  இவை இடுகைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும் இடுகைகள் பலவாதலின் இவற்றை ஒன்று சேர்த்து நோக்க, ஈண்டு மிக்க விரிவாகவே இத்தகு திரிபுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை எளிதாக அறியலாம்.

துள் > துளை;   துள்> தொள் > தொடு;  தொடு> தோடு; தோடு > தோண்டு; தோண்டுதல். என்பவை காண்க.

தொண்டை என்பது ஒரு தோடு போன்றதே.  தோண்டியதும் போன்றதே.

தோண்டு> தொண்டை.

இங்கு முதலெழுத்துத் திரிந்தது. (குறிலானது).  ஐ விகுதி பெற்றுப் பெயரானது.

தோண்டு > தோண்டி.  இப்படி வரும். இங்கு முதலெழுத்து திரியவில்லை. இச்சொல் இ விகுதி பெற்றது,

நெடிலான சில முதலெழுத்துக்கள் சொல்லமைவில் குறுகும் என்பதை உணர்ந்தீர்கள்.

சதி என்பது ஒரு திட்டத்தையோ ஒரு மனிதனையோ சாய்ப்பதும் எழவிடாமல் செய்வதுமாகும்,

சாய் > சய்தி > சதி.

இது யகர ஒற்று இழந்து சாதி என்று வரின், குழப்பம் ஏற்படுமாதலின் மேலும் குறுக்கப்பெற்று சதியானது.

இது மிக்கத் திறமையுடனே அமைக்கப்பட்டுள்ளது.  முதலெழுத்து -  குறுகியதும் யகர ஒற்று வீழ்ந்ததும் காண்க.

பின் தேவையெனில் திருத்தம்பெறும்,


செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சித்திரம் என்பது சரியான சொல்லன்று

சித்திரம் என்ற சொல் அழகானது. இதைப் பயன்படுத்தி பாரதிதாசனின் கவிதை ஒன்று உலவுகிறது.

சித்திரச் சோலைகளே உமை நன் கு
திருத்த இப்  பாரினிலே --- முன்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே.

இந்தப் பாட்டில் சி என்ற எழுத்திற்கு தி என்பது மோனை.  யாம் புத்தகத்தைப் பார்த்து எழுதவில்லை யாகையால் இதில் மூலத்துடன் வேறுபாடுகள் இருந்தால் திருத்திப் படித்துக்கொள்ளுங்கள். யாம் குறிப்பிடுவது சித்திரம் என்ற சொல்லைத்தான்.

சித்திரம் ஓவியம் என்பனவெல்லாம் ஒப்புமைக் கருத்தில் தோன்றி அமைந்த சொற்கள்.

செத்தல் என்றால் ஒத்திருத்தல்.

செ என்பதே அடிச்சொல். திரம் என்பது விகுதி.  இந்தத்  திரம் விகுதி திறம் என்ற சொல்லினின்று அமைக்கப்பட்டது.  திறம் > திரம்.  சில விகுதிகட்குப் பொருளிருக்கலாம்.  பல விகுதிகள் தம் பொருளிழந்து வெறும் சொல்லிறுதிகளாகவே பயன்படுகின்றன.  சொல்லமைப்பில் அவற்றின் வேலை அடியை மிகுத்து இன்னொரு சொல்லுருவை உண்டாக்குவதுதான். அதனால்தான் அவை விகுதி எனப்பட்டன.  மிகுதி > விகுதி.  சொல்லை மிகுத்து உருவாக்குதல். மகர வருக்கச் சொற்கள் வகர வருக்கங்கள் ஆகும்.  வருக்கம் என்றால் வருதல் தன்மை அல்லது உருவம்.  வரு> வரு+கு+ அம்= வருக்கம்.  வருகின்ற கொடிவழி.

 மி>வி:  இப்படித் திரிந்த இன்னொரு கிளவி: மிஞ்சு > விஞ்சு.

செ + திரம் = செத்திரம்.  இதுபின் சித்திரம் என்று திரிந்தது.  அதன்பின் செத்திரம் என்ற  சொல் பேச்சு வழக்கிலிருந்தும் எழுத்திலிருந்தும் காணாமல் போய்விட்டது.  இப்படித் தொலைந்தவை பல. செத்தல் என்ற சொல் இருப்பதால் இதனை நாம் அறியலாகிறது.

ஆய்வின்படி சித்திரம் என்பது சரியான சொல் அன்று.  செத்திரம் என்றே இருந்திருக்கவேண்டும். இருந்தாலும் சித்திரம் என்றால் பின்னை வடிவம் அழகாகவே அமைந்திருத்தலின் அதனையே ஏற்று வைத்திருப்போம்.

இது ஒத்தல் என்ற சொல்லினின்று செத்தல் என்று அமைந்திருக்கவேண்டும். ஒகரச் சொல் எகரத் தொடக்கமாதலும் உண்டு.  எடுத்துக்காட்டாக எழுப்பு என்ற எகரச் சொல் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஒழுப்பு என்று வழங்குகிறது. கந்தனை ஒழுப்பிவிடு என்பர்.  ஆகவே  ஒத்தல் > எத்தல் > செத்தல் என்பது தெளிவு. அகர வருக்கங்கள் சகர வருக்கங்கள் ஆகும்.  எத்தல் என்பது செத்தல் ஆன கதை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். எப்போதும் எழுதுகோலும் கையுமாக இருந்து திரிபுகள் காதில் விழும்போதெல்லாம் உடன் பதிவு செய்துகொள்ளவ்ேண்டும்.  இப்போது தொலைப்பேசிகள் மிக்க வசதியைத் தருவனவாய் உள்ளன.

செத்துப்போ என்ற சொல்லில் பகுதி செ என்பதன்று.  சா என்பதே  ஆகும்,  சா> சாதல்.  சா - செத்தல் அன்று.   செத்து என்ற வினை எச்சம்  சா > சத்து என்பதே. ஏனைத் திராவிட மொழிகளில் சத்து என்று சரியாக எச்சம் வழங்குகிறது.  தமிழில் செத்து என்று திரிவடிவம் கொள்கிறது.  இதைக் கொண்டுபோய்  ஒத்தலாகிய செத்தலுடன் ஒப்ப வைத்திடுதல் தவறு.

ஓவியம் என்ற சொல்லிலும்  ஒ என்பதே பகுதி அல்லது அடி.  ஒ > ஒத்தல்.
ஒ+இயம் = ஓவியம்.  ஓ+ அம் =  ஓவம்.   என்றால் சித்திரம்.  ஓவச் செய்தி என்று மு வரதராசனார் ஒரு நூல் எழுதியுள்ளார்.  அதைப் படித்து ஓவம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில் ஓவம் என்பது கருமுட்டை; அது வேறு சொல் ஆகும்.தமிழில் ஓவம் என்றால் ஓவியம்.  ஒன்று ஓ+ அம்; இன்னொன்று ஓ+இயம் ( இ+அம்).  ஒத்தல் என்பதில் உள்ள குறில் ஒகரம் ஓ என்று நீண்டதால்  முதனிலை திரிந்த ( நீண்ட) தொழிற்பெயர்.  சுடு> சூடம் என்பது போல.

புலிக்கு ஓவியகாயம் என்பதொரு பெயர். அழகிய புலி அடித்துக் கொன்று கடித்துத் தின்றிடும். காய்ந்தொழியும் காயமே உடைத்தாயினும்  ஓவியமாய் உலவுவது புலி.

சித்திரம் ஓவம் ஓவியம் என்பன ஒப்புமைக் கருத்தினவாகும்.  சித்திரம் என்பதன் தகப்பன் செத்திரம்.  அது இப்போது மட்கிவிட்டது.

ஒப்பு நோக்குக:  செந்தூரம் > சிந்தூரம்.
                                  நெட்டூரம் > நிட்டூரம் > நிஷ்டூரம்.  நெடிது ஊர்ந்துவரும் துயர். எ-இ வகைத் திரிபு.  ஊறு என்பதே  ஊறம்> ஊரம் என்றானது எனினும் ஒப்புக.   ஊறு என்பதும் ஒத்த பொருளினைத் தருவதாம்.

நம் பாட்டன் பாட்டிகள் இல்லாமை போலவே சொற்களும் அவற்றின் பாட்டன் பாட்டிகளை இழந்துவிடுகின்றன.  இருப்பின் பொறுப்பு டன் போற்றுவோம்.

பிழை இருப்பினும் புகினும் பின் திருத்தம்.பிழை என்றால் தட்டச்சுப் பிழை. கருத்தில் பிழைகள் இரா.

அறிக; மகிழ்க.

திங்கள், 24 செப்டம்பர், 2018

எசமான் ( எஜமான் ) என்ற சொல்.

இன்று எசமான் என்ற சொல் எப்படி ஆக்கப்பட்டது என்பதை அறிந்து இன்புறுவோம்.

இப்போது சில கவிதைகளும் சொல்லாய்வுமே செய்துவருகின்றோம்.
இலக்கிய ஆய்வு அல்லது நோட்டம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் சில நன் கு பிறரால் திருடப்பட்டுவிட்டன.  பல உரைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எமது மின்னஞ்சல் உள்ளும் புகுந்துவிட்டனர்.  அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றி இடர்விளைவிக்கின்றனர்.

தமிழில் நடத்துபவன் அல்லது தலைவனுக்கு இயவுள் என்றொரு சொல் உள்ளது.  இது கடவுள் என்ற சொல்லைப்போல உள் விகுதி பெற்ற சொல்.

இயக்கம், இயங்கு என்ற சொற்களில் இய என்ற அடிச்சொல் உள்ளது.

பெருமான் என்ற சொல் பெரு+ம்+ஆன் என்று அமைந்தது. மகர ஒற்று ஒரு சொல்லாக்க இடைநிலை ஆகும்.  மான் என்பது இறுதி என்று சிலர் சொல்வதுண்டு.  எனினும் மான் என்பது ம்+ ஆன் என்பதே.  ஆன் என்பதுஆண்பால் விகுதி.  பெண்பால் விகுதி ஆள் என்று வரும். இது நீங்கள் அறிந்ததே.

இய+ம்+ஆன் = இயமான்.  அதாவது இயக்குநன்.  இயவுள் என்ற பழைய சொல்லுமது.   யகரம் சகரமாகத் திரியும்.  வயந்தம் > வசந்தம்.  வாயில்> வாசல்.  நேயம் > நேசம்.

இருவர் நெருங்கிப் பழகுவது அன்பைப் பயக்கிறது.  பயத்தல் என்பது உண்டாக்குவதென்பதாகும்.  பய > பயன் என்பதும் காண்க.  இனிப் பய+ அம் = பாயம்.  இது பாசம் என்று திரியும்.  பசுமையான அன்பும் பசு+ அம் = பாசமாகும். இது ஓர் இருபிறப்பிச் சொல்.

இனி இயமான் என்பதற்கு வருவோம்.  இது இயமான் > இசமான் > எசமான் என்று திரிந்தது.  பின் எசமான் எஜமான் என்று மெருகு பெற்று,  மூலங்கள் வழக்கற்றுவிட்டன.

இது தான் எசமானின் கதை.  எசமான் என்பது இன்னொரு விகுதி -  அன்  பெற்று எசமானன் என்றும் சிலரிடத்துத் தவழும்.

அறிவீர் மகிழ்வீர்

பிழைகள் காணின் பின் திருத்துவோம்.