செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அருளாளர் நாராயணகுருவின் எதிர்கால ஞானம் -( முன்னுணர்வு).



அருள்மிகு நாராயண  குருக்களும் கவி குமரனாசானும்


நம் சிங்கைத் தீவில் வாசுப் பிள்ளை என்று ஒரு மலையாளி இருந்தார். இவரை அறிந்த பின் சீர்மிகு நாராயண குருக்களின் வரலாற்று நிகழ்வுகள்  சிலவற்றை அறிந்துகொண்டோம். 

குருக்கள் மாதவம் புரிந்து பல அரிய ஆற்றல்களைப் பெற்றிருந்தார் என்று அறியலானோம்.  காந்தியடிகள் கேரளா சென்ற காலை ஸ்ரீ நாராயண குருக்களைச் சென்று கண்டு தமது பணிவன்பினைத் தெரிவித்துக்கொண்டார் என்று கூறுப.  குருக்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது.
சிங்கப்பூரிலும் ஸ்ரீ நாராயண மிஷன் என்னும் மடாலயம் இயங்கிவருகின்றது.

குமரனாசான் என்பவர் ஓர் மலையாளக் கவியாவார்.  அவர் குருக்களை பலமுறை சென்று தரிசித்ததுடன் அவர்தம் இறையுரைகளையும் பெற்று மகிழ்ந்தவர்.

ஒரு சமயம் வழக்கம்போல் குருக்களைச் சென்று கண்டு அவர்தம் ஞான உரைகளைக் கேட்டு உயர்நிலையை உணர்ந்தார்.  பின் இறையுணா அருந்திவிட்டு  அன்று சற்று விரைவாகவே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.  குரு இருந்துவிட்டு நாளை போகலாமே என்று சொல்லிப்பார்த்தார்:  குமரனாசான்  கேட்கவில்லை. அவ்விடத்திருந்து ஆசான் அகன்றக்கால், குருவானவர் சற்று கவலையுடன் காணப்பட்டார்.

அருகிலிருந்த ஏனைச் சீடர்கள் குருவைத் துருவிக் கேட்கத் தொடங்கிவிட்டனர். ஏன் எப்போதுமில்லாத கவலையுடன் காணப்படுகிறீர்கள் என்று அவர்கள் வினாவினர்.   கேள்விகள் ஒரு நெருக்கடி நிலைபோன்ற சூழலை எட்டவே குருக்கள் அவர்தம் மனத்துக்கண் இருந்த ஆழ்ந்த  கவலையை வெளியிட வேண்டியதாயிற்று.

“குமரனாசான் இன்று நம்மை விட்டுப் பிரிந்துவிடுவார்.” என்பதை வெளிப்படுத்தினார்.   எப்படி என்றனர் சீடர்கள். அவர்  ஓர் ஆற்றைக் கடக்கப் போகிறார்; அங்கு வள்ளம் கவிழ்ந்து உயிர் துறப்பார்  ----  என்பதைக் குருக்கள் விளக்கினார்.  சீடர்கள் “ குருவே நீங்கள் எப்படியாவது தலையிட்டுக் காப்பாற்றுங்கள்”  என்றனர் . 

 “ இயற்கையின் முடிவுகளில் யாம் என்றுமே தலையிட மாட்டோம்”  என்றனர் குருக்கள். ம் மியுரையைக் குமான் புறந்தள்ளிப் புறப்பட்டுவிடுவார் என்பும் குருவானர் நன்`குணர்ந்தே.  “எது நடைபெற வேண்டுமோ அது நடைபெறும். அதில் தலையிட்டு மாற்றங்கள் செய்யாமல் நம் நேரம் வரும்வரை நாமும் சென்றுகொண்டிருப்பதே இறைவனுக்குப் பிடித்தது”  என்று சொல்லிவிட்டார்.

 சில மணி நேரத்தில் அவர் சொன்னதுபோலவே மடத்திற்குச் செய்தி வந்தது.  கவி குமரனாசான் படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.
இந்நிகழ்வு குரு ஒர வருவதுரைஞர் என்பதைக் காட்டிற்று.

அருளாளர் நாராயணகுருவின் வரலாற்றினைப் படித்துள்ளேமெனினும் குரு பற்றிய இத்தகு நிகழ்ச்சி யொன்று அங்குக் கூறப்படவில்லை.  அதாவது குரு ஓர் முன்னுரைஞர்    என்பதும் குமரனாசானின் மரிப்பினை முன்னறிந்திருந்தார் என்பதும் அந்நூலில் கூறப்படவில்லை. இது மேற்கூறியவாறு அறிந்தவர்வாய்க் கேட்டுணர்ந்தது ஆகும்.

குருவானவர் தாம் செய்த எதற்கும் விளம்பரம் தேடாது அமைந்து வாழ்ந்த உயர்பெற்றியினர் என்பதும் இதன் மூலம் தெரிகிறது.

(குமரனாசான் பற்றிய ஒரு வலைத்தளம் செல்லத்தக்க சான்)றிதழைப் பெற்றிருக்கவில்லையாதலின் அங்குச் சென்று எதையும் ஆராய இயலவுமில்லை. )

குறிப்பு:  ஒரு என்பது ஓர் என்றும் ஓர் என்பது 
ஒரு என்றும் தன் திருத்த மென்பொருளால் 
மாறிக்கொள்கிறது.  திருத்தியுள்ளோம். மீண்டும்
பின்னர் நோட்டமிடுவோம். நன்றி.

திங்கள், 3 செப்டம்பர், 2018

தலைவேர் பக்கவேர் அறிவாளிகள்.

அறிவாளிகள் உலகில் பலர்.  ஒருவர் அறிவாளி என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அவரைச் சூழ்ந்து நிற்கும் அவருடைய புகழ்தான் என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் சில அறிவாளிகளின் வாழ்க்கையை ஆராயும் போது அல்லது மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலும் கூட,  அவர்களும் பல இடங்களில் சறுக்கி விழுந்து அப்புறம் மீண்டிருப்பதும்  சிலர் மீளாமலே அக்குறையுடன் தம் வாழ்நாளைக் கழித்திருப்பதும் மக்களும் அவர்பால் உள்ள அன்பினால் அக்குறைகளை ஒருவாறு அசட்டை செய்துவிட்டு அவரைப் போற்றிக் கொண்டாடி இருப்பதையும் காணலாம்.  மொத்தத்தில் அவர்வாழ்க்கை நிறைவானது என்று எண்ணுவதற்கில்லை.

ஆனால் குறையே இல்லாத அறிவாளியோ அல்லாதவரோ உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  சிற்சில குறைகளை நாம் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை  அல்லது அவர்பால் ஏற்பட்டுவிட்ட பற்றுவிரிவால் ( விசுவாசத்தால்)  மனத்திற் பதிவுசெய்துகொள்வதில்லை என்று திண்மையாகச் சொல்லலாம்.

" நானும் மனிதன் தான்;  உங்கள்போல் என்னிலும் குறைகள் உண்டு"  என்று சில அறிவாளிகள் தங்கள் சிந்தனைகளில் சிந்தியிருக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒருவருடன்ஒரு கோவிலில்  உரையாடிக் கொண்டிருக்கையில் "இந்தக் கோவிலில் சில நடவடிக்கைகளைத் திருத்தம் செய்தல் வேண்டு"  மென்று அவர் கூறினார். அதற்கு நான் இவை தலைவரால் செய்யத் தக்கவை என்றேன்.  அவர் உடனே தலைவர் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு: "தலைவேர்"   "பக்கவேர்"  என்று தாவரவியல் முறையில் விளக்கினார்.  ஆகவே எந்தச் சேவையிலும் தலைவேராக உள்ளவர்களும் பக்கவேராக உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது ஓர்  இயல்பான பாகுபாடு என்று நாம் கருதலாம்.  இதை வேறு விதமாக பேரோடைகள்  சிற்றோடைகள் என்றும் பகுத்துக் கூறுவதில் தவறில்லை.  ஆனால் இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தலைவேரும் பக்கவேரும் ஒன்றாக இணைந்து செயல்படுபவை ஆகும்.  அவற்றின் வேலைகளில் எவையும் எதிர்மறைத் தன்மை உடையவை அல்ல.

ஆனால் ஓடைகளைப் பொறுத்த வரை ஒரு பேரோடை உலகின் ஒருபகுதியில் இருக்கலாம்; இன்னொன்று  வேறொரு பகுதியில் இருக்கலாம்.  அவற்றிடை எத்தகைய பிணைப்பும் இல்லாமல் இருத்தலும் கூடும். சிந்தனைச் செல்வர்களை எடுத்துக்கொண்டால் ஒருவர் ஓர் இலாகாவில் வேலைசெய்து ஓய்வு பெற்றவராகலாம்; இன்னொருவர் வேறோர் இடத்தில் தன்முனைப்பாகவும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டவராக இருத்தலும் கூடும். இவர்கள் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு  ஆளுமைகளுடனும் கட்டின்மையுடனும்  செயல்பட்டவர்கள்.  இவர்களின் கருத்துகள் பேரோடைக் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்று பகுக்கப்படுதலில் ஏற்புடைமை காணுதற்கில்லை. பேரோடைச் சிந்தனையாளர் ஒரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்த்திருந்தால் அவர் கூறிய கருத்துக்கள் அப்பல்கலையில் உள்ள பிற மேலாண்மை அலுவலர்களின் கருத்துகளுக்கு ஒத்துச் செல்வனவாகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்தம் சீட்டுக் கிழிந்துவிடலாம்.  அத்தகைய அச்சத்தில் எழுதியவை அல்லது சொன்னவை ஒரு திறந்த சிந்தனை என்று கொள்வதற்கில்லை.  அவருக்கு எதிர்மறையாக இருக்கும் பிறரின் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்பது உண்மையில் தவறாகும்.

படிப்பாளிகள் பெரும்பாலும் கைகட்டியே தொழில்மேற்கொள்வதால் ஒவ்வொரு கருத்தும் ஆய்வு செய்யப்படவேண்டியதாகும். கட்டின்றி வெளிப்படும் கருத்துகள் மேலானவை; எனினும் அவையும் ஆய்வுக்குரியவை தாம். எதையும் மெய்ப்பொருள் கண்டே ஏற்கலாகும். ஊதியத்துக்கு இயங்குவோன் கருத்து  அவன் தன் ஊதியம் காக்குமாறு வெளியிடப்பட்ட கருத்தே என்று முடிக்கவும்.

இறையின்பம். (2010ல் பாடியது)

இறையின்பம்

முன் யாம் எழுதிய பல   கவிதைகள்  தொலைப்பேசிகள்வழியாகக்  கிடைக்கவில்லை என்று சொல்கின்றனர்.  இவற்றை மீட்பதும் கடினமே.

இதை மீட்டு அளிக்கின்றோம்.    2010ல் எழுதியது.


பாட்டு:

தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.


இதன் பொருள்:

தனித்தலையாய் = தானே தனியராய்; இறையின்பம் = இறைவன் பால் பத்தி (பக்தி) கொண்டு அவனை நாடிச்சென்று இன்புறுவது;
தினைத்துணையே நன்மை! = சிறிதளவே நன்மை தருவதாகும்;

பனித்தூய்மை அடியரொடும் = பனியைப் போல தூயவரான அடியார்களுடன், இனித்திடுமாறு =இன்பம் உண்டாகுமாறு ; ஆழ்ந்து நினைத்து = தியானம் செய்து;
அமர்ந்து நிலைப்படுத்தி = உட்கார்ந்து மனத்தை நிலைப்படுத்தி; நிறைவினையே காணல் = அத்தியானத்தின் வெற்றியைக் காணுவது;
அனைத்துலக அடியவரும் = ஏனை மதங்களின் அடியார்களும் பனைத்துணையென் றேற்பர். =பெருநன்மை பயப்பது என்று ஏற்றுக்கொள்வர்.,கூட்டு முயற்சி ஆதலினாலே. என்றவாறு.