அறுபதுகளுக்கு முந்திய சிங்கப்பூரில் சத்தியக் காப்பி என்ற சொல் வழங்கியது, இந்தச் சொல் மலேசியாவில் அல்லது முன்னைய மலேயாவில் வழங்கவில்லை என்று தெரிகிறது. அது அங்கும் வழங்கியதாய்க் கேள்விப்படவில்லை.
இந்தியா 15 ஆகஸ்ட் 1947ல் விடுதலை பெற்றபின்பு அங்கிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள் இந்தியக் கடப்பிதழுடன் வரவேண்டியதாயிற்று. ஆனால் பின்பு, யாரேனும் சிங்கப்பூரில் தகப்பனோ தாயோ இருந்தால் தன் பிள்ளைகளை வரவழைத்துக்கொள்ளலாம் என்னும் குடியேற்றச் சட்டமிருந்தது. 1959 ல் திரு லீ குவான் யூ வின் ஆட்சி ஏற்படுமுன் இதுவே விதி; அவர் பதவியேற்ற கொஞ்ச நாட்களுக்குப் பின்னும் இது தொடர்ந்தது.
வாசு என்ற ஒரு மலையாளி சிங்கப்பூருக்கு வந்தார். அவரைச் சிங்கப்பூருக்கு வரவழைக்கக் கோவிந்தன் என்பவர் ஒரு சத்தியக்காப்பி எடுத்துக் கேரளாவிற்கு அனுப்பிவைத்தபடியால் அதை ஆதாரமாக வைத்து வாசு வந்தார். வாசுவிற்குக் கோவிந்தன் என்பவர் அப்பன். எப்படி அப்பன்? சத்தியக்காப்பியின்படி அப்பன். கோவிந்தன், அரசு ஆணையாளர்களில் ஒருவர் Commissioner of Oaths முன் சென்று, "வாசு என் சொந்த மகன்" என்று சத்தியம் செய்து ஒரு சத்தியக்காப்பி எடுத்து ஊருக்கு அனுப்பினார். ஆனால் கோவிந்தன் வேறு சாதியினர்; வாசு வேறு சாதியினர். சட்டப்படி வருவதற்கு இது ஓர் உதவிமட்டுமே. ஆகவே கேரளாவில் வி, வாசு என்ற பெயருடையவராய் இருந்தவர் இங்கு வந்தபின் ஜி. வாசு ஆகிவிட்டார். அதாவது வேலாயுதம் வாசு என்பவர் கோவிந்தன் வாசு ஆனார்.
சத்தியக்காப்பியின் மூலம் தகப்பன்பெயர் மாறிவிட்டது. வந்தபின் வாசுவிற்குக் கோவிந்தன் பிரிட்டீஷ் கடற்படைத்தளத்தில் தண்ணீர்க்குழாய் பொருத்தும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இவற்றுக்கெல்லாம் வாசு கோவிந்தனுக்குச் செய்த நன்மை என்ன என்று தெரியவில்லை. கோவிந்தனுக்கும் இப்படிப் பல "பிள்ளைகள்" சட்டப்படி ஏற்பட்டுவிட்டனர். நாம் கேள்விப்பட்ட படி இவரின் பிள்ளைகளில் ஒருவர் 'பிள்ளை'; இன்னொருவர் நாயர். ஒருவர் பிராமணர். மற்றொருவர் மீனவக் குடியைச் சேர்ந்தவர். எல்லோரும் சட்டப் பிள்ளைகளாகி நல்ல உறவினர்கள்போலப் பழகிச் சிலர் சில ஆண்டுகளின்பின் ஊர்போய்ச் சேர்ந்தனர்; சிலர் சிங்கப்பூரிலே வாழ்ந்து குடும்பக்காரர்களாகி மறைந்தனர்.
சத்தியக்காப்பி (சொல்)
இதில் சத்தியம் என்பது வடசொல் என்பர். காப்பி என்பது படி copy அல்லது பிரதி. ஆங்கிலத்தில் இதை : Statutory Declaration என்று சொல்வர்.
இதைச் சத்தியப் பிரமாணம் என்று சமஸ்கிருதத்தில் சொல்லலாம். தமிழில் உறுதிமொழி ஆவணம் எனலாம். சத்தியக்காப்பி என்பது நமது இந்தியத் தொழிலாள நண்பர்கள் அமைத்த பெயர். நல்ல கற்பனையுடன் தான் அமைத்துள்ளனர்.
தொழிலாள நண்பர்கள் அமைத்த பெயர்களையும் மொழிபெயர்ப்புகளையும் தமிழாய்வு செய்வோர் யாராவது முன் வந்து ஆய்வு செய்து வெளியிடலாம். இதுகாறும் யாரும் வெளியிட்டுள்ளனரா என்று தெரியவில்லை. சிங்கப்பூர்த் தமிழரிடை அமைந்த சில இடப்பெயர்களைப் பாருங்கள்:
போத்தோங்க் பாசீர் - மண்ணுமலை. இதில் பாசீர் என்பது மணல் என்று பொருள்படும்.
காலாங் ஆறு: செங்கமாரி ஆறு.
ஜபத்தான் மேரா: சிவப்பாலம் ( சிவப்புப் பாலம்).
கம்போங் கப்போர் : சுண்ணாம்புக் கம்பம். கம்பம் = சிற்றூர்.
கம்போங் கொலம் ஆயர் : தண்ணீர்க் கம்பம்.
தேக்கா என்பது சீனமொழிச்சொல்.
கண்டங் கிர்பாவ்: மாட்டுக் கம்பம். இங்கு கண்டங் என்பது கொட்டகை.
இப்போது சத்தியக்காப்பி என்ற கலவைச் சொல் hybrid என்னவென்று புரிந்திருக்குமே.
--------------------------------------------------------------------------
குறிப்பு:: இவ்விடுகையில் (மேலே) உள்ள ஆட்பெயர்கள் உண்மைப் பெயர்கள் அல்ல. மாற்றப்பட்டுள்ளன.
பிழைத்திருத்தம் பின்.
சில பிழைகள் திருத்தம் பெற்ற தேதி: 2.2.2019