ஞாயிறு, 13 மே, 2018

விகுதியும் மிகுதியும். விக்ருதி மிக்குறுத்தி.

விகுதி என்ற சொல்லை நாம் பல இடுகைகளில் சந்தித்திருக்கிறோம். இதைப்பற்றி யாம் முன்பு எழுதி விளக்கியதுண்டு.

விகுதி என்ற சொல்லில் தி இறுதியில் உள்ளது.  இதைப் பிரித்து எடுத்துவிட்டால் மீதமிருப்பது விகு என்பதே.  ஆனால் விகு என்ற ஒரு வினைச்சொல் இல்லை.   எனவே விகுதி என்பது நாம் நினைப்பதுபோல்  ஓர் இயற்சொல் அன்று.   அது திரிசொல்லே.

மிஞ்சு என்ற சொல் விஞ்சு என்று திரிகிறது.   இதுவேபோல் சில மகர வருக்கத் தொடக்கத்துச் சொல் வகர  வருக்கத் தொடக்கமாகத் திரிந்துவிடுகின்றன. இத்தகைய திரிபு சொல்லின் தொடக்கத்தில்மட்டுமே வரும் என்பதில்லை. சொல்லின் இடையிலும் வரக்கூடும்.  எடுத்துக்காட்டு: அம்மை >  அவ்வை.( ஔவை).

எனவே  மிகு > மிகுதி என்ற சொல்லே  விகுதி என்று திரிந்தது.  விகுதி என்பதற்குத் தமிழிலக்கணத்தில் இறுதிநிலை என்றும் கூறுப.

உகத்தல் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால்,   உக என்பது சொல்லின் பகுதி.   தல் என்பதே விகுதி.   தல் என்பதைக் கொண்டு கூட்டியபடியால் சொல் மிகுந்தது.

மிகுதி  என்பது  சொல்லின் மிகுதியே.  விகுதியைக் கண்டுணர்ந்த காலை சொல் மிகுதலையே உணர்ந்தனர்.  பின்னர் சில விகுதிகளின் சேர்க்கையில் சொல்லின் பொருளும் சற்று மாறுதலை அடைந்தது.  அப்போதும் அதை விகுதி என்றே அழைத்தனர்.

ஆனால் இதை விக்ருதி என்ற சமத்கிருதச் சொல்லுடன் தொடர்புபடுத்தினர் சில புலவர்கள்.   விக்ருதி என்பது சமத்கிருதத்தில் ஓர் இலக்கணக் குறியீடு அன்று, அது பொதுவான மாற்றம் குறிக்கும் ஒரு இயல்பான சொல்.  ஆதலால் விக்ருதி வேறு. விகுதி வேறாகும், பிரத்யாய என்பது விகுதி என்று பொருள்படுவதால்,  விகுதியை ஏன் பிரத்தியாயம் என்று அழைக்கவில்லை?

மேலும் விக்ருதி என்பது மிக்குறுத்தி என்பதுபோல் ஒலிக்கிறது.  ஆனால் அது வேறு எனப்படுகிறது. மிக்கு உறுத்தும் எதுவும் வேறாகுமன்றோ?


சனி, 12 மே, 2018

சிறிதாவதும் கூம்புவதும் குறிக்கும் சொற்கள்

நாம்  இன்று சொற்களைப் பற்றிய ஒரு  சிந்தனையில் ஈடுபடுவோம்.  சிந்தனை என்றாலே துளிதுளியாக மழைநீரைப்போலச் சொட்டிச் சிந்துவது என்றுதான் பொருள்.  எதை என்றால் மூளையில் எழும் எண்ணங்களை.  அதனால்தான் சிந்தித்தல் என்று சொல்கிறோம்.  சிந்துதல் > சிந்தித்தல். எண்ணங்கள் சிறிது சிறிதாக  வெளிவரச் செய்தல்.  இதுதான் இதன் சொல்லமைப்புப் பொருள் என்றாலும் இந்தச் சொல் அமைந்து வெகுகாலம் ஆகிவிட்டபடியால்,  அப்பொருளை இன்று நாம் உடனடியாகக் கண்டுகொள்ள முடியவில்லை.

சிந்து என்றால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியும்.  ஆனால் அதன் அடிச் சொல் சின் என்பது.  சின் து =  சிந்து ஆகிறது.  முந்து பிந்து என்பதுபோல் அமைந்ததே இச்சொல்லும்.   முன்+து என்பது முந்து ஆனது.  பின்+து என்பது பிந்து ஆனது.  பந்திக்குப் முந்திப்போ; படைக்குப் பிந்திப்போ என்பார்கள்.  பந்தி என்பதும் பலர் இருந்து உண்ணும் நிகழ்வு.  பல் > பன் > பன் தி  என அது பந்தி ஆயிற்று.  வெந்து  என்ற வினை எச்சத்தில்  வே> வெம்> வெம்+து =  வெந்து ஆனது தெளிவு.   வென் என்பது அடிச்சொல் அன்று.

சிந்து என்பது அடிக்கு மூன்று சீர்களே உள்ள பாட்டில் வரும்.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே~

இவ்வடியில் மூன்று சீர்களே உள்ளமையினால் அது சிந்தடி எனப்படும்.

நூல்களில் சிறிய நூலுக்கும் சிந்து என்று பெயராம். இது விற்பனையான
இடமே சிந்து நதிக்கரை.   அது அங்குள்ள நதிக்கும்   உள்ளவர்கள் பேசிய மொழிக்கும்கூடப் பெயராகி விட்டது.   

சிலர் மீன் சினையைக் குழம்பு வைத்துத் தின் கிறார்கள்.    சிறு சிறு முட்டைகள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது  சின் >  சினை எனப்பட்டது.    சின் என்பது சில் என்பதிலிருந்து தோன்றிய சொல்லே.

கோபத்தைச் சினம் என்பர்.   பழங்காலத்தில் சினத்தை ஒரு சிறு செயலாகக் கருதினர் என்று தெரிகிறது.  அதைப் போற்றத் தக்கதாகக் கருதவில்லை. கோபமே பாபங்களுக்கெல்லாம் தாய் தந்தை என்றனர்.  சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்றும் கூறினர்.    ஆறுவது சினம் என்றனர்.  சின் என்ற அடியினின்று தோன்றிய இச்சொல்லுக்குப் பெருமைக்குரிய செயல் அல்லாதது என்பதுதான் சொல்லமைப்புப் பொருள்.  கோபம் என்ற சொல்லும் கூம்புதலைக் குறிப்பது;  கூம்புதலாவது குறுகுவது.

கூ > கூம்பு.  கூம்புதல்
கூ > கூபு > கோபு > கோபம்.  கோபு> கோபித்தல்.
மனச் சுருக்கத்தைக் குறிக்கிறது. 
இங்கு கூ என்பது கோ என்று திரிந்தது.    மகர ஒற்று மறைந்தது இடைக்குறை.

கூகூ என்று கூவும் பறவை கோகிலம் என்று பெயரிடப்பட்டுள்ளது காணலாம்.

 திருத்தம் பின்

வெள்ளி, 11 மே, 2018

தொண்ணூறு அகவைக்கு அப்பாலும் - மகாதீர்.

இன்னிசைப் பஃறொடை வெண்பா.
 (பன்னிரண்டு அடிகள்)

------------------------------------------

தொண்ணூற்றுக் கப்பாலும் தோன்றும் அரசியல்
பண்ணூறும் தேனிலவு மாமேதை;   அன்னவர்க்குக்

கண்ணூ  றழகு கழிந்திடாக் கங்கினிலும்
எண்ணூறும் சிந்தனைச் சிற்பி-   மகாத்தீரே!

நாட்டுநலம் மக்களே  நாடும் நலமனைத்தும்
கேட்டுவரு முன்னரே கிட்டிடச் செய்கையர்.

கள்ளம் இழைத்திட்ட காழ்ச்சொல்  கழுதைகளை
வெள்ளம் எனவந்து வீழ்த்திப் புரட்டியவர்.

விள்ளும் அனைத்திலும் வேண்டும் நகைச்சுவையர்;
கொள்ளும் ஒழுங்கோடு சட்டம் திகைபவரே.

மூலவ நல்லமைச்சாய் முன்னிருந்து மேல்நடத்தி
நாளும் நயம்தருக நன்கு.





குறிப்புகள்:


மூலவ நல்லமைச்சாய் =  பிரதமராய்.
அவர்க்கு அரசியலுடன் இப்போது ஒரு தேனிலவு
என்பது கவிதை.
வாழ்க்கையின் இறுதிக்கு  வந்துவிட்டேன் என்று 
அவர் சொன்னாலும் அழகு இன்னும் உள்ளது.

கண்ணூறு அழகு ----  அவர் பார்வையிலிருந்து கிளர்ச்சி தோன்ற
ஊறிவரும் அழகு.

கங்கு -  முடியும் இடம்.  ஓரம்.

எண்ணூறும் - எண்மை ஊறும்.  எளிமை மேலிடும்.

அகவை எண்கள் கூடும் என்றும் கொள்ளலாம்.

எல்லையிலும் : இது கங்கினிலும் என வந்தது.

செய் கையர் -  செய்யும் கையை உடையவர்.

திகைபவர் -  உறுதி செய்பவர்.

கழுதைகளை -  தை என்பது குறுகி ஒலிக்கும்
ஐகாரக் குறுக்கம்.

பிழைத்திருத்தம் வேண்டின் பின் 

புள்ளி  மறைந்த ஓர் எழுத்து  புள்ளி இடப்பெற்றது.