வியாழன், 3 மே, 2018

மன்னித்தல்

 மன்னித்தல் என்பது தொன்றுதொட்டுத் தமிழ் நாட்டுச் சிற்றூர்களில் வழங்கிவருவதாகும்.

பெரும்பாலும் ஒருவருக்கு இன்னொருவரிடம் உள்ள நட்புறவானது, சில காரணங்களால் வீழ்ச்சி அடைந்துவிடக்கூடும்.  இவர் விருந்துக்கு அழைத்து, அவர் வருகிறேன் என்று சொல்லி, விருந்து நிகழ்ச்சிக்குப் போகவில்லை என்றால்  மனம் புண்பட்டுவிடும்.  அப்போது நேராய் நின்றுகொண்டிருந்த  நட்பு வீழ்ந்தது என்பது தெளிவு.

மன்னுதல் என்றால் நிலைபெறுதல்.  நிலைபெற்று -- மன்னி  நின்ற நட்புறவு, ஒடிந்து வீழ்ந்துவிட்டது.  அதை மீண்டும் நிலைபெறுவிக்க -  மன்னிக்க வேண்டும். "  மன்னிக்க வேண்டும்;  "  என்று கேட்கையில்  " நிலைபெறச் செய்ய வேண்டும்"   என்பதுதான் வேண்டுகோள்.  வேறேன்றுமில்லை.

வீழ்ந்தது எழவேண்டும்; ஒடிந்தது ஒட்டவேண்டும். அதுதான் "  மன்னிப்பது" எனப்படுகிறது. 

உறவை மீண்டும் நிலைகொள்ளச்செய்ய ஒத்துக்கொண்டால்,  அதுவே.  பொறுத்தலாகும்.   முன்போல அன்புடன் தொடர்வோம் என்பது.

மன்னுதல்  -  அடுத்தல்; நிலைபெறச் செய்தல்.
மன்னல்  என்பதும் அது.

மன்னித்தல் என்பது பிறவினை.

மன்னித்தல் என்பது வேற்றுமொழி அகரவரிசைகளில் இருந்தால் அதை இங்கு பின்னூட்டம் செய்யவும்.

மன்னும் இமயமலை எங்கள் மலையே!



புதன், 2 மே, 2018

குருவிபோல அமைந்தது புள் பக விழுமானம்.

புஷ்பக விமானம்

விழுமிய = சிறந்த.  விழு = சிறந்த.  வி -  சுருக்கத் தலையெழுத்து.
 வி மானம். 

புட்பக விமானம்/ வானூர்தி

பூக்கள் செடியிற் பிரிந்து வெகுதொலைவுக்குப் பறப்பதில்லை. வெறும் பூக்களால் ஆன வானூர்தி அல்லது விமானம் பறக்கவியலாதது.
கடவுள்கள் பறப்பதற்கு விமானம் அல்லது வானூர்தி தேவைப்படுவதில்லை. அவர்கள் எப்படியும் பறக்கலாம்.

ஆகவே இலங்கை சென்ற  புட்பக விமானம் ஓர் இன்றியமையாத கருவியாகச் செயல்பட்டிருக்கவேண்டும். வெறும் பூக்கள் அல்ல.

புள் + பகம் = புட்பகம் ஆகிறது.

புள் என்பது பறவை.

பகம் என்பது பகுதி. பகு+ அம் = பகம். இவ்விமானம் அல்லது வானூர்தி  முன்பகுதி பறவை போன்ற  உருவிலானது என்பது பொருள்.

இது புஷ்பக என்று பிறழ உணரப்பட்டு , புஷ்பம் என்பதனோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.  புள் என்ற சொல் தெரிந்த வான்மீகியும் தமிழனாதல் வேண்டும்.சங்கப் புலவன்.  இராமகாதையில் பல சொற்கள் தமிழினுடன் தொடர்பு உடையவை ஆகும். இது முன்னர் நாம் கூறியதேயாம்.

தமிழிலிருந்து சில நூல்கள் சமஸ்கிருதத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட போது, எழில்மலை என்பதை எலிமலை என்று பிறழ உணர்ந்து,  அந்த மணடலத்தை ஆண்ட மன்னனும் எலி வருக்கத்தைச் சேர்ந்தவன் என்று தவறான ஒரு கதையைக் கட்டி, உலவவிட்டு விட்டனர் நம் பண்டிதர்கள். மன்னனும் எலி உருவினன் அல்லன்; மலையும் எலிமலை அன்று.  தவறான மொழிபெயர்ப்பு.
அதுபோலவே பகுதி குருவி போன்று அமைக்கப்பட்டது புட் பக விமானம்.
இப்படி அமைத்தது பறக்கும்;   பூ என்னும் புஷ்பம் பறக்காது. இதை உணரவேண்டும்.

எழில் > எலி வருக்கம் என்பது மூஷிக பரம்பரை என்று மொழிபெயர்த்தனர்.  மேடை நாடகங்களில் அம்மன்னன் பாவம் எலிமுகத்தன் ஆனான்.

வி என்பது விழுமியது என்பதன் முதலெழுத்து.
மானுதல் = ஒத்திருத்தல். மானு+ அம் =  மானம்.
(குருவியை) ஒக்க அமைந்தது.
வி+ மானம் = விமானம்.
மனிதன் குருவியைப் பார்த்துப் பறக்கக் கற்றுக்கொண்டான்
என்பதே உண்மை.  ரைட்  சோதரர்களும் முதலில் இறக்கை அணிந்துதான்
பறக்கப் பார்த்தனர்.
 

திங்கள், 30 ஏப்ரல், 2018

பிரசாதத்தில் பல்லி.....

கோயிலில் பத்தகோடிகட்குத் தரப்பட்ட  அருளுணவில் பல்லி கிடந்து அதை உண்ட பலர் நோய்வாய்ப்பட்டனர்,  இச்செய்தியை கவிதையாய்த் தருகின்றன இப்பாடல்கள்,  கவனம் தேவை என்பதே யாம் சொல்வது.  எப்படி இதைச் செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. பல்லிகள் எங்கும் இருப்பவை.


பல்லி விழுந்தால் பரமன் அருட்சோறு
சொல்ல அழவருமோர் சூழ்நலக் கேடாக்கும்;
நல்லதைச் செய்கின்ற நாட்டமே கோயிலிற்
புல்லிதாய்ப் போச்சே புகல்.

வாந்தி தலைவலி வாய்கோணி வீழ்ந்தனர்,
ஏந்தி இவர்களைப்போய் இட்டனரே நோய்மனையில்;
ஓந்தி சிறுபல்லி வீழ்ந்தாலும் ஊண்கெடுமே;
தேர்ந்தமேற் பார்வையே தேடு.

குறிப்பு:   இத்தகைய பல்லிகள்  விடம்  அல்ல என்று
அறிந்தோர் கூறுகின்றனர். உலகில் ஒரே வகைப்
பல்லி தான் விடமுள்ளதாம். அது அமெரிக்காவில்
ஓர் ஆற்றுப் பக்கம் உள்ளதாம். இதில் விழுந்த
பல்லி  சும்மா பூச்சிகளைப்  பிடித்துத் தின்னும்
பல்லியாம் . இருந்தாலும் இறந்தது,  நாறிப்போன
 எதுவும் உணவில் கலந்தால்  உணவு நஞ்சாகும்.
இந்தச் செய்தியை அப்படித்தான் எடுத்துக்கொள்ள
வேண்டியுள்ளது. 


More at:

food poisoning: 73 hospitalised after taking 'prasadam' in Tamil Nadu ...

73 Hospitalised In Tamil Nadu, Claim "Lizard" Found In Temple's

Lizardfoundin`prasadam' -ANDHRA PRADESH TheHindu

The spotting of a lizard in a packet of 'prasadam' caused panic among the 
pilgrims at Venkateswara Swamy temple at Dwaraka Tirumala in West 
Godavari district on Sunday. A pilgrim, Prabhu from Eluru, w.
The Hindu : Lizard in prasadam, four taken ill