வியாழன், 12 ஏப்ரல், 2018

இட்டமும் இச்சையும்.

இட்டம் இச்சை என்ற இருசொற்களையும் இன்று
ஒப்பாய்வு செய்வோம், உள்ளம் மகிழ்வோம்.

இட்டம் என்பதும் இச்சை என்பதும் முன் இடுகை
களில் விளக்கப்பட்டன. ஒப்பாய்வில் இரண்டையும்
ஓரளவு  சுட்டுவதும் சீரியைவு காட்டுவதும்
தேவையாகின்றன.

இரண்டுக்கும் அடிச்சொல் இடு என்பதே.

(  இடு )  >  இடு+ அம் =  இட்டம்.

ஆசைப்பட்ட மனத்தை எங்காவது இட்டுவிட்டால்,
இட்டது இட்டமாகிறது.  இடு+ அம் = இட்டம்.
மனத்தை இடாதவிடத்து இட்டமில்லை.

இட்டம் என்பது ஈடுபாடு. மனம் விரும்பிய
ஈடுபாடு.   இந்த ஈடுபாடு என்பதிலும் அடிச்சொல்
இடு என்பதுதான்.  இடு> ஈடு. முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.

படு > பாடு என்பதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
அதுவும் முதனிலை திரிந்து பெயரானது.

இனி இச்சை என்பதைக் காண்போம்.

இச்சையும் மனம் இடுவதே ஆகும்.

இடு > இடு+சை > இடுச்சை.

இதில் டுகரம் விலக்கி, இச்சை ஆகிவிடும்.

இடு இழு என்பன டகர ழகரப் பரிமாற்றம்.
பாழை > பாடை என்பதுபோல.
வாழகை > வாடகை போல.  வாழ்கூலி என்பதே
வாழகை.
இடுச்சை. இழுச்சை என்பன இரண்டுமே
இச்சை என்றே திரியும்,

மனம் இடுவது இச்சை. (  இடுச்சை).
மனம் இழுக்கப்படுவது இச்சை  ( இழுச்சை).

மனம் இட்டாலும் மனம் இழுபட்டாலும் விளைவு
விருப்பமாதலின் வேறுபாடு கண்டிலர்.

இரண்டு சொற்களும் ஒரு குட்டையின் மட்டைகள்.

மேலும் வாசிக்க:

http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_9.html


http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_46.html

http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_15.html

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_13.html

http://sivamaalaa.blogspot.com/2016/12/broadband-collapse.html 

இங்கு கூறப்பட்டவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை
ஆய்ந்தறிக. 

பாலிமொழியும் புனைமொழியே என்பர்.  புத்த மத போதம்
பரப்ப அது தேவையாய் இருந்தது.  தருமம் என்ற சொல்லை
ரு எடுத்துவிட்டு தம்மா என்று மாற்றவில்லையோ?  அதுபோல
கேடுது என்று டுவை வைத்துக்கொண்டு மடுவில் மாட்டி
நாக்கு நலியாமல்  கேது என்று புனைந்தது திறமையிலும்
திறமையே. இத்திறமைகள் வாழ்க.

புதன், 11 ஏப்ரல், 2018

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பல சொற்களை ஆய்வு
செய்து வெளியிட்டுள்ளேன்.  இவற்றில் பல இன்றும் கிடைக்
-கின்றன. கிடைக்காதவை பல எனது முன்வரைவுகளில்
உள்ளன.  எதையும் எளிதாக மறந்துவிடுவதில்லை.

வாடிக்கை என்ற சொல் இவற்றுள் ஒன்று.

வாடிக்கை என்பது வடித்தல் என்பதனடிப் பிறந்த சொல்.

வடித்தல் என்பதன் பொருளாவன:  கூராக்குதல், தெளிதல்,
தெளித்தெடுத்தல், ஆராய்தல், திருத்துதல், நீளமாக்குதல்,
பயிற்றுதல், யாழ் மீட்டுதல்  அல்லது நரம்புகளை உருவுதல்,
வயப்படுத்துதல், நீர்போன்றவற்றை வடியச்செய்தல்,
வடிகட்டுதல், பிழிதல்..

கொஞ்சம் நீரை வடித்துவிட்டு அரிசியை வேகவை --- என்னும்
போது இந்தச் சொல் பயன்படுகிறது. இன்னும் கூறப்பட்டுள்ள
வெவ்வேறு பொருள்களில் இச்சொல் இன்னும் வழக்கில்
உள்ளது.

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே  -  இந்த
வாக்கியத்தையும் நோக்கலாம்.

கொல்லர் முதலான திறனாளர்கள்,  ஒன்றை எப்படி வடிப்பது
அல்லது செய்வது என்பதை ந`ன்கு தெரிந்தவர்கள். எப்போதும்
ஒன்றை முன் செய்த வழியிலேயே திறனாகச் செய்வர்.
எப்போதும்  செய்யும் முறையானது வாடிக்கை ஆகிவிடும்
அவர்களுக்கு. அதேபடிதான் செய்துமுடிப்பர். அப்போதுதான்
செய்வதை நன்றாகச் செய்து குறித்த நேரத்தில் முடிக்க
முடியும். அப்போதுதான் பணவரவு தடைப்படாது.

இப்படி அதேபடி செய்வதால் வாடிக்கை என்ற சொல்லுக்கு
எப்போதும்போல் செய்தல் என்ற பொருள் தோன்றலாயிற்று.
எப்போதும் கடைக்கு வந்து பொருள்வாங்குவோர்
வாடிக்கையாளர்கள் ஆயினர்.

இனிச் சொல் அமைப்பைக் கவனிப்போம்.

வடி > வடித்தல்.   இது வினைச்சொல்.
வடி > வடிக்கை.   இது வடித்தல் என்று பொருள்பட்டு,
செயலைக் குறித்த சொல்.  தொழிற்பெயர்.

வடி+கை:  வாடிக்கை.  இது வடி என்ற சொல் தலை நீண்டு
கையென்னு ம் தொழிற்பெயர் விகுதி பெற்றுப் பெயராயிற்று.. 

சுடு+அன்  என்பது சூடன் என்று முதனிலை நீண்டு விகுதி
பெற்றது போல.

பெயர்தல் ( வேறு இடம் சேர்தல்) என்னும் வினை பேர்
என்று நீண்டும் திரிந்தும் பின் து+அம் விகுதிகள் பெற்றுப்
பேதம் ஆனது போல.  ஓரிடத்தது இன்னோர் இடம் செல்வது
பேதம் .  (திரியாவிடில் பெயர்தம் என்று இருந்திருக்கும்). ரகர
ஒற்று கெட்டது .

பெய்தல் -  நீராய் வெளிவருதல் அல்லது பொழிதல்.
பெய்+தி = பேதி என்று நீண்டு விகுதி பெற்றது போல.
செய்தி என்பது சேதி ஆனதைச் சொல்ல வேண்டுமோ.

சொற்கள் திரிவது மொழி இயல்பு.

தொல்காப்பியனார்:  இயற்சொல், திரிசொல்,............என்`கிறார்.
இது திரிசொல்.

சுட்டு விளக்கம் - ஏமம்

இன்று மாந்த வளர்ச்சி நூலார் கூறும் வரலாற்றுத்
தெரிவியல்(theories)களிலிருந்து 50000 ஆண்டுகட்குமுன்
எந்த மொழியும் இருந்திருக்க இயலாது என்று
சொல்லப்படுகிறது. ஆகவே அந்த 50000 ஆண்டுகட்கு
முன்னரோ சற்று பின்னரோ இருந்த மனிதன்
எத்தனை சொற்களை அறிந்திருந்திருக்க
முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.  அங்கே
என்பதற்கு ஆ என்று வாய்பிளந்து ஒலியெழுப்பித்
தன் கருத்தையவன் வெளியிட்டிருப்பான். அது
ஒரு சொல்லாகும்.

இப்படி நான்`கு ஐந்து சொற்களை வைத்துக்
கொண்டு அவன் வாழ்ந்து முடித்தான். அவன்
எழுத்துக்களை அறிந்திருக்கவில்லை.

அவன் வழங்கிய  ஆ ( அங்கே) என்ற சொல்
இன்னும் நம் மொழியில் உள்ளது.

மலையாளத்திலும்  ஆ ஆள் (ஆ யாள்) என்று
இன்னும் உள்ளது.

ஆ என்பதனுடன் கு என்ற சேர்விடம் குறிக்கும்
சிறு சொல் (  உருபு)   இணைந்து  ஆங்கு என்ற
சொல் அமைந்தது.  இதுவேபோல்  ஈங்கு.
ஊங்கு என்ற சொற்களும் அமைந்து சொற்கள்
பலவாகின.

அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை என்'கிறது
திருக்குறள்.  அறத்திற்கு உவ்விடத்தில் ஆக்கம்
தருவது ஒன்றும் இல்லை.  இக்கால மொழியில்
சொல்வதானால் அறத்திற்கு அப்பால் ஆக்கம்
ஒன்றும் இல்லை.  பொருள் ஒன்றுதான்
என்றாலும்,  அறத்தை விட்டால் அங்கு எங்கு
உங்கு போனாலும் ஆக்கம் இல்லை~~!!  ஆகவே
குறளை விளக்கும்கால் விட என்ற சொல்லைப்
பயன்படுத்தி உரை சொன்னாலும் சரியாக
இருக்கும்.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால்
உப்பாலை விட அப்பால் இன்னும் தொலைவாய்ப்
போய்விட்டது.  உ எனபது முன் என்று பொருள்
தரும்.  அ என்பது படர்க்கை.

அறத்தினுக்கு இப்பால் ஆக்கம் உள்ளது.  உப்பால்
அறம் இல்லை ஆதலின் ஆக்கம் இல்லை; அப்பால்
அறம் இல்லை ஆதலின் ஆக்கம் இல்லை; எப்பாலும்
அறம் இல்லையாயின் ஆக்கம் இல்லை. எங்கெங்கெல்
லாம் அறம் உண்டோ அங்கெங்கெல்லாம் ஆக்கம்
இருந்தே ஆகும்.  இப்படி விரித்து நோக்கின், இப்பால்
உப்பால் அப்பால் எப்பால் என்பது புரிந்துவிடும்.  இது
புரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.

இனி விட என்ற சொல்லைப் பயன்படுத்தி:

அறத்தை விட ( இங்கு விட்டுவிட்டால்),   உங்கு அங்கு
எங்கும் ஆக்கம் இல்லை!!

In terms of place, bring along your "aRam" everywhere; if not
there is no benefit. Primitive people expressed things in terms
of situations and places. This concept is still discernable in our
language.

ஆ ஊ ஈ  என்பன முச்சுட்டுக்கள்; இவை பல
சொற்களுக்கு மூலமாகுபவை ஆகும்,

இவை பின் அ,  இ. உ என்று குறுகிவிட்டன.
இப்படி நெடில் குறுகுவதென்பது பலகாலும்
நிகழ்ந்துள்ளது ஆகும். ஏ என்பது ஒரு வினாவாகி
சுட்டுப்போன்ற ஒரு தகுதியுடையதானது. அதுவும்
வேண்டியாங்கு எ என்று குறுகி  நின்றது.

இப்போது இதை நோக்குங்கள். ஒரு துன்பமென்பது
எங்கிருந்தாவது வரும்.  எங்கு என்று சொல்லவிய
லாதது ஆகும். அதற்கு ஆதிமனிதன் பாதுகாப்பு
மேற்கொள்ளவேண்டியிருந்தது.  எங்கிருந்தோ இங்கு
வந்தது என்பதைக் குறிக்க ஏ இ என்றான்.  அதற்கு
அவனுக்குப் பாதுகாப்பு தேவைப்பட்டது; விழிப்பு
தேவைப்பட்டது.   அதை ஏ இம் என்றான்.  அது
ஏம்  ஆகி,  ஏமம் ஆகி, பாதுகாவல் என்ற பொருளை
அடைந்தது. எங்கிருந்தோ வருவதைத் தடுக்கும்
நடவடிக்கையால் உண்டாவதே ஏமம் ஆகும்.

ஏம் என்பது மிகப் பழைய சொல். எகர வினாவாகிய
சுட்டுப்போலியால் அதை விளக்கவியலும்.

அடுத்துச் சந்தித்து அளவளாவுவோம்.