சனி, 27 ஜனவரி, 2018

அருணன் அருணாசலம் அருணோதயம்

அர் என்ற அடிச்சொல் நாம் அறிந்தின்புறத்
தக்க தமிழ் அடி ஆகும்.

இவ்வடியினின்று எழுந்த பழஞ்சொற்களை
முன்னர்க் காண்போம்.

அர் >  அரக்கு. இது கு விகுதி பெற்ற சொல்.அதை நீக்கிவிட்டால் அர் எஞ்சி நிற்கும். அரக்கு செம்மையாதலின் அர் என்பதும் செம்மைப் பொருளினது ஆகும்,

அர் > அரத்தை:  இது இஞ்சி போன்ற வடிவினது.    அர் + அ+தைஅல்லது அர்+ அத்து + ஐ என்ற துண்டுகள் இணைந்த சொல்.  இதுவும் செம்மை நிறத்தினை உடையது.  இதனாலும் அர் என்ற அடி செம்மை குறிப்பதே என்பது தெளிவாகிறது.

அர்+அத்து+ அம்= அரத்தம்.  இது குருதி என்னும் பொருளது. தன் தலையெழுத்தை இழந்து ரத்தம் என்று வழங்குவது. தமிழில் ரகரத்தில் சொல்
தொடங்காது என்று இலக்கணமிருப்பதால், திறம் மிகப்படைத்த நம் தமிழரால் இரத்தம் என்று இகரம் சேர்த்து எழுதப்படுவதுமாகும்.  இதுவும் சிவப்பு என்று நிறம்குறிக்க எழுந்த நல்ல தமிழ் ஆகும். தலையெழுத்தை இழந்து தலைதடுமாறச் செய்விக்கும் சொற்கள் மிகப்பல. முண்டமாக வரும் சொல்லை எந்தமொழி என்றறியாது அலமருவது கண்டு நீங்கள் ஆனந்தமடையலாம்.

அர் :> அரத்தி : செவ்வல்லியைக் குறிப்பது.

அர் > அர+ இன் +தம் =  அரவிந்தம்  : சிவந்த இனிய தாகிய  தாமரை.  தம் என்பது து+ அம். இன் உடமைப் பொருளெனினும் வெற்று இடைநிலை எனினும்
பெரிய வேறுபாடில்லை.

அர் > அரப்பொடி:  சிவப்பாகத் தோன்றும் இரும்புத் தூள்.  துருப்பிடித்தது சற்று செம்மை தோன்றும்.

அர் >   அரன்:  இது சிவனைக் குறிக்கும் சொல் ஆகும்.  சிவ என்பது சிவப்பு நிறம் குறித்தல்போலவே  அர் என்பது, அந்நிறமே குறித்தது. சிவ> சிவன்;  ஒற்றுமை உணர்க.  அரி+அன் என்று புணர்ந்து அரனாகி பாழ்வினைகளை அரித்தெடுப்போன் என்றும் கொளலாகும்.

அர் >  அருணன்:   இது சூரியனைக் குறிக்கும். அர்+ உண்+ அன் என்று பிரிக்க. உண் என்பதற்கு  "உளதாகிய"  என்று பொருள்கூறவேண்டும்.  உண் என்பது துணைவினையாகவும் வழங்கும். எடுத்துக்காட்டு: வெட்டுண்ட.  கட்டுண்ட என்பவை. உள் > உண்.  நாம் உண்பதும்  உள்ளிடுதலே ஆகும். விள் > விண் என்பதுபோல.  விள்> வெள் > வெளி.  சூரியன் செம்மை யாதலின்  அர் என்பதில் அமைந்தது. செங்கதிர் என்பது காண்க. (ஆனால் சூரியன் என்னும்  சொல் செம்மைப்பொருள் உள்ளதன்று. வெம்மை குறிக்கும் சூடு என்னும் சொல்லினின்று வருவது.  சூடு> சூர். சூடியன் > சூரியன்; அதாவது: மடி> மரி என்பது போல. மடிதலே மரித்தல்.  மடி என்பது ம(த்)தி என்று மலாய்
மொழியில் வரும். இவற்றைப் பின் ஆய்வோம்)

அர் > அரிணி.  செந்நிறத்ததான மான்.

அர் > அரிதம் : பொன் நிறம்.

அர் > அரிணம் : பொன். *( செம்மையுடன் உறவுடைய
நிறத்தது )


அருண+ ஆசலம் = அருணாசலம்; அருண+ உதயம் = அருணோதயம். செங்கதி ரோன் தோன்றும் மலை அருணாசலம். இது அருணகிரி அண்ணாமலை என வும் படும்.

அரக்கு என்பது சிவப்பு என்று பொருள்படுவதால், அரக்கர் செம்மை நிறத்தினர் ஆதல் வேண்டுமே, இதை நீங்கள் ஆய்ந்து எனக்கு அறிவியுங்கள்.

அறிக மகிழ்க
 
மெய்ப்பு பின்னர்







வியாழன், 25 ஜனவரி, 2018

சொல்: தத்துவம்.


 
தத்துவம் : தன் த தற் தத்

தத்துவங்கள் பற்றிப் பேசுமுன் தத்துவம் என்ற சொல்லை ஆய்ந்து அதன் பொருளைத் தெரிந்துகொள்வோம்.

 இப்படிச் சொல்லினை ஆய்வு செய்து அதிலிருந்து  தொட்டு1 எடுத்து நாமறிகின்ற பொருளோ  நாம் அகரவரிசைகளிலும்  பேரகராதிகளிலும் காணும் பொருளினின்று வேறுபடும்.

வரையறவு: (Definition)

தத்துவம் என்பது பிற கருத்துகளைச் சார்ந்திராமல் தானே நிலைநாட்டப்படும் அளவிற்குத் தனித்தன்மை பெற்ற ஓர் அடைவுக் கருத்து ஆகும்.  இதனை மெய்ப்பிக்கப்பட்ட உண்மை என்றும் கூறுவதுண்டு. An established truth. 

இது தன் என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து அமைக்கப்பட்டது.  தன் கடைக்குறைந்து த~  ஆகிறது.  அடுத்தது து.  து என்பது உடையது என்று பொருள்படும் ஒரு சொல். அது  ஒரு அஃறிணை விகுதியாகவும் வரும்.  நரி ஓடுகிறது என்பது இறுதியில் து இருக்கிறது.    திருக்குறளின் முதல் பாவைப் பாருங்கள். அதில் முதற்றே உலகு என்ற தொடர் வரும்.  முதல்+து = முதற்று.  இதன் பொருள் முதலாக உடையது என்பது.  

ஆகவே து என்பது உடையது என்னும் பொருளினது ஆகும்.  

இறுதியில் இருப்பது விகுதி. இது அம்.   ஆகவே த(ன்)+து+ அம் = தத்துவம்.    தன் என்பதின் ~ன்  இறுதியை எடுத்துவிட்டால் பெருந்தொல்லையோ?

செந்தமிழும் கொடுந்தமிழும்:

செந்தமிழ் முறைப்படி அமைந்தால்:  தன்+து + அம் =தன்றுவம் என்று வந்திருக்கும். தற்கொலை என்ற சொல்லில் தற்-  என்று வருகிறது. இது செந்தமிழில் சொற்புணர்வால் அன்றி வருவதில்லை. க ச ட த ப ற என்ற வல்லெழுத்துக்கள் வந்தாலே தன் என்பது  தற் என்று வரும். இல்லாவிட்டால் தற் என்பதற்கு தனிவாழ்வு தமிழில் இல்லை. அது வேறுமொழிக்குச் சென்றால் அதைத்  தத் என்று எழுதலாம். ஏதும் தடையில்லை.  ஏனென்றால் அங்கு இந்த இலக்கணம் இல்லை. இந்தக் கணவனிடம் இருந்து இன்னொருவன் பின்னால் ஓடி அங்கு  சுதந்திரம் (சொம்+தம்+திறம்) பெற்று பிள்ளைகள் பெற்று வாழ்வதில் ஏதும் தடையிருப்பதாக அவள் உணராதது போன்றதே இதுவாம். 

பரிமாணங்கள்:

 பிறழ்பிரிப்பில் தற் என்றாகி, அயல்வாழ்வில் தத் என்று மாறி தனிநிலையாளுமை பெற்றுவிட்டபடியால் அது ஆங்கு, தனிச்சொல். இங்கு அதற்கு அந்த வலிவு இல்லை.

எனவே தன் செந்தமிழ்.  த என்பது னகரம் வீழ்ந்த  கடைக்குறை எனினும் செந்தமிழ். தற் என்பது புணர்விளை.  தத்  என்பது அயல்தோற்றம்.   

செந்தமிழ் அல்லாதவை கொடுந்தமிழ்.  கொடு என்றால் வளைவானது என்று பெருள். கொடுந்தமிழின் பரிமாணங்கள்  ( பரிந்து மாண்புற்றவை ) இன்று பலப்பல. தன் முதல் தற் வரை உள்ளவற்றைத் தமிழாசிரியன் காவல்துறைபோல காத்துக்கொள்ளலாம். ஏனையவற்றைத் தடுக்க அவன் வலிவற்றவன் ஆவான்.  தனித்தமிழ் என்பது ஒரு Rule of Exclusion.
பிற பின்.

அடிக்குறிப்புகள்:

1  தொட்டு = தோண்டி (...எடுத்து)



மறுபார்வையும் திருத்தமும்:  பின்.

சினை என்னும் சொல் சுட்டடி அமைப்பு



இன்று சினை என்ற சொல்லைப் பற்றிச் சிந்திப்போம்.

சினை என்பது தொன்றுதொட்டு தமிழ்ச்சொல் என்று கருதப்பட்டு வருகின்ற சொல் ஆகும்.   இதனுடன் ஒலி ஒற்றுமை உடைய சொல் உலகில் பிறமொழிகளிலும் கிடைக்கலாம்.

மலேசியாவில் சீனாய் என்று ஒரு தேய்வைத் தோட்டம் உள்ளது.  ஆனால் தமிழ்ச்சொல் சினை என்பது இந்தச் சீனாய் என்பதினும் வேறுபட்ட சொல் என்று தோன்றுகிறது.  இஸ்ரேலில் சீனாய்க் குன்று உள்ளது. ஏதும் தொடர்பு உள்ளதாகத் தெரியவில்லை.   சினை என்பதை ஆங்கில எழுத்துக்களால் எழுதினால் Sinai என்றுதான் பெரும்பாலும் எழுதவேண்டியுள்ளது.  குழப்பம் நேரலாம்.  Si   என்பதும்  nai  என்பதும் சீன மொழியிலும் உள்ளது.  இவற்றின் தொடர்பை ஈண்டு ஆராயவில்லை.  உங்களுக்குத்  தேவையானால் நீங்கள் ஆராய்ந்து முடியுமானால்  எமக்கும் தெரிவியுங்கள்.

இவை நிற்க:

சினை என்பது தமிழில் உறுப்பு என்று பொருள்படும் சொல். பேச்சில் பெரும்பாலும் இது விலங்கு வயிற்றில் குட்டி உடையதாய் ( கருவுற்றிருப்பதாய்) உள்ள நிலையைக் குறிக்கிறது.  இலக்கணத்தில் சினைப்பெயர் என்று ஒரு வகையும் உள்ளது.  கை, கால், தலை என்பவை சினைப்பெயர்கள். இவை உறுப்புகளின் பெயர்கள்.

இனிச் சொல்லை ஆய்வு செய்வோம்.

சின் -   சிறியது.
ஐ = அய் = அ.   இது சுட்டுச் சொல். அங்கிருக்கிறது என்று பொருள்படும்.

சுருங்கச் சொன்னால், இந்தத் தமிழ்ச்சொல், சிறியது அங்கு (  உள்ளில் ) இருக்கிறது என்று பொருள்படும் அழகிய சொல்.

சின் என்பது இன்னும் வழக்கில் உள்ளது.  சின்னையா என்ற பெயரில் அது உள்ளது.  சின்னப்பையன் என்பது இன்னும் காதில் விழும் தொடர்.  ஒன்றைப் போல சிற்றளவினதாக வரையப்பட்டதை இன்றும் சின்னம் என்`கிறோம்.  மின்னல் சின்னம்; இலைச் சின்னம் எல்லாம் தேர்தலில் பயன்படுவன.  இப்படிச் சிற்றளவு என்று தொடக்கத்தில் குறித்த சொல் பிற்காலத்தில் பெரிய அளவினதையும் குறிக்க வழங்கி நாளடைவில் பொருள் விரிவு அடைந்தது என்று அறிக.

சின் என்ற சொல் அடி,   சில் என்பதிலிருந்து வருவது. சொல் வரலாற்றில் லகரம் முன்னது.  னகரம் பின்னது என்று அறிக.  எடுத்துக்காட்டாக வள்ளல், இளவல், அண்ணல் தோன்றல் என்பன காண்க.  அல் என்பது அது என்று பொருள்படுவது.  செயல் : செய்யும் அது. இது பிற செமித்திய மொழிகளிலும் உளது.  அல் கைதா தீவிரவாதிகள் என்`கிறோம் அல்லோமோ?   இது பின் அன் என்று திரிந்துவிட்டது.  சுழியன்; சூடன்.  இது பின் அம் என்று திரிந்தது:  அறம் திறம். செமித்தியத்தில் அல் முன்னும் தமிழில் பின்னும் இணையும்.

சில சொற்களில் இம்மூன்றும் உள்ளது,  திறல் திறன்  திறம்.

இனிமைத் தமிழைப் படித்தும் பேசியும் இன்புறுங்கள். இன்னும் பல கூறலாம் எனினும் இனி வரு நாட்களுக்கும் வைத்திருப்போம் கொஞ்சம்.

பிழைகளையும் கூடுதலாகக் கள்ள மென்பொருள்கள் புகுத்தும் தொல்லைதரு புள்ளிகளையும் மீண்டும் வந்து கவனிப்போம்.