திங்கள், 11 டிசம்பர், 2017

கஞ்சாவுக்குத் தமிழில் 33< பெயர்கள்.



தமிழ் மொழி சொல்வளம் மிக்கது. ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் இருந்தால் அதைச் சொல்வளம் என்னாமல் வேறே என்னவென்பது!

கஞ்சா என்பது ஒரு போதைப்பொருள். ஆனால் இன்று போதைப்பொருள் மிகுந்த கட்டுக்குள் இருப்பது தெரிகிறதென்றாலும் வெளியுலகில் பல்வேறு போதைப்பொருள்கள் உள்ளன. அவற்றைத் தூய தமிழில் சுட்டவேண்டிய தேவை நமக்கு ஏற்படவில்லை. நாம் இத்தகு பொருள்களைப் பற்றிக் கருதுவதும் எழுதுவதும் மிகவும் குறைவே.

தமிழில் கஞ்சாவுக்கு மட்டும் 33 அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன.  இப்பொருட்கு இத்துணைப் பெயர்கள் இருப்பது இது  தமிழர்களிடையே நன்’கு புழங்கிய பொருள் என்று தெரிகிறது.

கஞ்சா என்பது இந்திமொழியிலும் சமஸ்கிருதத்திலும் உள்ள சொல் என்று தெரிகிறது. இது பிரிட்டீஷ் அரசின் காலத்தில் இந்தியாவில் ந ன் கு கிடைத்தது என்றும் தெரிகிறது. தம் ஊரை வேறு நாட்டினர் ஆள்கின்றனர் என்பதைப் பற்றி மக்கள் கவலை கொள்ளாமல் இருக்கவேண்டுமென்றால் அவர்கள் நன்றாகக் கஞ்சாப் புகைப்பிடிக்க வேண்டும் என்பது தெளிவு.  அந்த மயக்கில் இருக்கும் போது ஆர்ப்பாட்டம் முதலியவை குறைந்துவிடும்.  ஆனால் மக்களின் உழைப்பு, சிந்தனை முயற்சி முதலியன கெட்டுப் பொருளியல் கல்வி முதலியவையும் கெடுதல் கூடும். இவற்றை நாம் இங்கு ஆய்வு செய்யவில்லை.

முப்பதின் மேற்பட்ட எல்லாச் சொற்களையும் ஆய்வு செய்தல் கடின வேலையே.  சிலவற்றைப் பார்ப்போம்.

குவலை என்பதும் கஞ்சாவைக் குறிக்கும். இது குவித்தல் என்பதிலிருந்து வருவது. குவித்தல் என்பதற்கு ஒடுங்கும்படி செய்தல் என்றும் பொருளுண்டு. மனிதனை ஒடுங்குவித்தலால், குவி+அல்+ஐ எனப்புணர்ந்து, குவி என்பதில் இகரம் கெட்டுச் சொல் அமைகிறது. இது இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் வழக்கிலிருந்து, இப்போது பயன்பாடு குன்றிவிட்டதென்று தெரிகிறது. இனிக் குவலை என்பது குல்லை என்றும் திரிந்து வழங்கியுள்ளது.

புளிச்சை, புளிக்சநார் என்பவையும் கஞ்சாவுக்குப் பெயராய் வழங்கின.  புளிச்சை என்பது ஒரு கீரைக்கும் பெயர்.  இது ஒரு பல்பொருள் ஒருசொல்.

விசையை என்ற பெயருமிருந்தது.  உடலுக்கு விசைகொடுத்தது போன்ற திறனுடையது என்று நினைத்தனர் போலும்.  ஐ என்பது விகுதி.

காய்ச்சிரக்கு, காய்ச்சுறுக்கு என்பனவும் பெயர்கள். சிரங்கு என்பது புண்..  காய் என்பது மனிதன் காய்ந்துவிட்டதுபோலாவதைக் குறிக்கும். சிற்றூர்களில் “காய்ஞ்சான்” என்றும் “வற்றல்” என்றும் சிலரைக் குறித்தலுண்டு.  போதைப்பொருளால் காய்ந்து புண்பட்ட நிலையைக் குறிக்கிறது. காய்+ சிரங்கு  = காய்ச்சிரக்கு. வலித்தல் விகாரம். காய்ச்சுறுக்கு என்பது விரைந்து காய்ந்துபோவதைக் குறிக்கிறது. சரக்கு என்பது சிரக்கு எனத் திரிந்ததெனினுமாம். கஞ்சா வென்பதும் காய்ந்த பொருளே.

கற்பம் என்பதும் பெயர். இது காயகற்பம் என்பதன் முதற்குறையாய்த் தெரிகிறது. ஒப்பீட்டில் அமைந்துள்ளது.

மற்றவை பின் வாய்ப்பின்போது ஆய்வோம்.


ஞாயிறு, 10 டிசம்பர், 2017

பல் > பனுவல் ( நூல் )



இன்று பனுவல் என்ற சொல் அறிந்து இன்புறுவோம்.
“பத்தி செய்து பனுவலால்
வைத்த தென்ன வாரமே”
என்ற தாயுமானவர் பாடல் நினைவுக்கு வருகிறது.

“விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு  என்பது குறளில் இருந்து நினைவகலா வரிகள்.

“ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லனறே” என்பது பவணந்தியார் திருவாய் மலர்ச்சி.
நூலைக்  குறிக்கும் இச்சொல் ஓர் இன்  கிளவியாம்.

இச்சொல்லினுட்புகுந்து காண்போம்.

பன்> பன்னு > பன்னுதல்.

இதன் பொருள்:
ஆராய்தல்.
புகழ்தல்.
கொய்தல்.
சொல்லுதல்
நேர்தல்
நெருங்குதல்.
பேசுதல்.
பாடுதல்.
நின்று நின்று சொல்லுதல்.

இவைமட்டுமின்றிப் பின்னுதல் என்னும் இகர முதற் சொல்லும் பன்னுதல் என்று திரியும்.  இ > அ திரிபுமுறை.

பல் > பன் > பன்னல்:

பன்னல் என்ற சொல்லுக்கு மேற்கண்ட சிலவற்றுடன் பருத்தி என்றும் பொருளிருக்கிறது.

1.
பல் > பரு > பருத்தி.
பல் > பன் > பன்னல்.
இங்கனம் திரிந்தவை பல. ஒன்றிரண்டை மட்டும் இங்குக் காண்க.  ஒப்பு  நோக்குக.

நில் > நிரு:  மற்றும்:  நில் > நிறு> நிறுவு > நிறுவாகம்
நிருவாகம்,  நிறு> நிறு > நிறுவாகம்.

தெல் > தெள் > தெளி.
தெல் > தெரி.     தெல் > தெர் > தெருள்.  தெருட்டுதல்.
தெருள் > தெருட்டி > திருட்டி > திருஷ்டி.

மெல் > மெரு > மெருகு. (மெல்லழகு. மென்பூச்சு.)

2

பல் > பன் >பன்னுதல்.
பலமுறை சொல்லுதல்.
பல் > பன்மை.

பல் > பன் > பனுவு (வினைச்சொல்) > பனுவுதல் :  சொல்லுதல்.

3
பல்> பன் > பனுவல்.
பன் > பன்+வு +அல்
சொல்லப்படுவதாகிய நூல்.  பன்வல் என அமையாமல் பனுவல் என்றோர் உகரச் சாரியை பெற்றமைந்தது  செந்தமிழியற்கை சிவணிய நிலையே என்றுணர்க.

அறியவேண்டிய கருத்து: இந்திய மொழிகள் பலவினிலும் நூல்கள் பல
வாய்மொழியாக உலவி, பின் எழுத்திலமைந்தன என்பதைப் பனுவல் என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது. தமிழில் பழங்காலத்திலேயே எழுத்துக்கள் உண்டாயின.  சமஸ்கிருத்த்தை எழுத்திலமைக்க எதிர்ப்பு ஆதிகாலத்தில் இருந்தது, காரணம் மந்திர ஒலிகளை எழுத்துக்கள் துல்லியமாக வெளிப்படுத்த இயலா  என்ற அச்சம் ஆகும். இன்றும் மந்திர ஒலியை ஆசான் அல்லது குருவின்வழியே அறியவேண்டும்.

நேரம்  கருதி விரித்தெழுத வில்லை. இனி வாய்ப்புக்கேற்ப அவ்வப்போது விளக்கப்படும்.

சனி, 9 டிசம்பர், 2017

பூத்திருக்கும்போது சேர்த்துக்கொள்



பெண்டாட்டி பால்சீறிப் பேடிக்குப் போனக்கால்
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் --- என்றபடி
காத்திருக்கும் கட்சி எதிர்நிற்கும் பூவையே
பூத்தபோ தேற்றல் புரி.

இதற்குப்  பொருள்: (  உரை )

பெண்டாட்டிபால் -  ஒருவன் தன் மனைவியினிடத்து;
சீறி -  சண்டைபோட்டுக்கொண்டு;
பேடிக்கு - சரியான பெண்ணல்லாத ஒரு பிறவியைத் தேடி;
போனக்கால் -  சென்றானாகில்;
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் -  சென்றபோது
வரவேற்று ஒன்றாகி  மென்மை காட்டுவார்கள்;
என்றபடி -  இப்படி உலகம் சொல்வதுபோல;
கட்சி எதிர் நிற்கும் -  எதிர்க் கட்சிகள் முன்னணியில்
நின்றுகொண்டு;
காத்திருக்கும் - அவனை ஏற்றுக்கொள்ளக் காத்திருப்பர்;
பூவையே பூத்தபோது -  பூவே போன்ற அவன் மனைவி
ஏற்கின்ற நிலையை  மேவுகையில்;
ஏற்றல் புரி -  ஏற்றுக்கொண்டு செயல்புரி.

சில எதிர்க்கட்சிகள் பேடிபோல் செய்லாற்ற இயலாதவை;
விலகி நில் என்பது கருத்து.