ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

நினைவில் நிறுத்தத் தக்க திரிபுகள்



நினைவில் நிறுத்தத் தக்கவை:

யகர - சகரத் திரிபு:
மயக்கை = மசக்கை
ஜப்பான் -- சப்பான் - யப்பான்


வாங்குதல்  பொருள்:  வளைதல்.




பழங்காலத்தில் எதையும் பெற்றுக்கொண்டவர்கள் வளைந்து நின்றே பெற்றுக்கொண்டனர்.  அதனால் பெற்றுக்கொள்தலுக்குவாங்குதல்என்று பொருள் ஏற்பட்டது. 1
இச்சொல்லுக்கு விலைக்கு வாங்குதல் என்ற பொருள் பிற்காலத்தில் உருவானது.

வாகனம் என்ற சொல் அமைந்தவிதம்:
வாங்கு + அன் + அம் = வாகு + அன் + அம் = வாகனம்.
 

வாங்கு என்பது வாகு என்று இடைக்குறைந்தது.  அன் என்பது சொல்லமைப்பு இடைநிலை.  அம் என்பது விகுதி.
வாகு என்பதில் உகரம் கெட்ட்து (  தொலைந்த்து).
வாசனம் என்பதற்கு வேறு பொருள்களும் உள்ளன. அவை:  புடைவை (வளைத்துக் கட்டப்படுவது);  குரல் (வளைந்து வந்தும் காதுகளை எட்டுவது);  

வாசனம் = வாகனம்.

இதில் வாகனம் வாசனம் என்று திரிந்தது.
வாசனம் என்பது வசனம் என்றும் திரியும்.
நெடில் குறுகிக்  குறிலாவது.

வாகனம் என்பது அனம் என்று முடியாமல் இயம் பெற்றும் முடியும்:

வாகனம் :   வாகு+ இயம் = வாகியம் (வண்டி).

தகரம் சகரமாகும்:


வாத்தியம் -  வாச்சியம்.

வாகினி:
 
படைகள் அணியாக நிற்கையில் நேர் கோடு பற்றி நின்றாலும் முன்னேறுகையில்  வில்போல் வளைந்து (சூழ்ந்து ) எதிரியைத் தாக்கும் பாணியினால், வாகினி என்ற சொல் படையைக் குறிக்கும்.

வாங்கு > வாகு > வாகு + இன்+ =  வாகினி.


வானதி:

வானதி என்ற சொல் வான்+ நதி. 
வானத்து ஆறு என்று பொருள்>
ஆகாய கங்கை என்பது போலும் கருத்து.


இவை உங்கள் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பறக்கவுமே சற்றியலாக்.....

பறக்கவுமே சற்றியலாக் கோழிக்குஞ்சு
பக்கத்து வந்தமலைப் பாம்புகௌவி
இரக்கமென ஒன்றின்றிக் கொன்று தின்னும்
இழிவான உலகமிதில் நீதி எங்கே?
உரக்க அது ஒலிசெய்தும் ஓடி வந்து
உதவுதற்குயாருமில்லை என்னசெய்வேன்?
பொறுக்கவினி இயலாத புவியை நீங்கிப்
புகுதற்கே ஓரிடமோ  புகல்வாய் எற்கே.

8.7.2017

வியாழன், 21 செப்டம்பர், 2017

வெட்சித் திணை ஆதாரம் ஆதரவு (தலைத்தோற்றம் தொடக்கம்)



ஆதாரம் ஆதரவு என்ற சொற்களை முன் நாம் விளக்கியதுண்டு.
இதை அறிந்து கொள்வதற்கு அப்துல் கலாம் போன்ற அறிவியல் மூளை வேண்டியதில்லை. இயல்பான அறிதிறனால் உணரலாம்.

வெட்சித் திணையில் படைத்தலைவன் பகைவரின் ஆக்களைக் கவர்ந்து வருவான். இதனை அறிந்த அவன் ஊர்மக்கள் மகிழ்வில் துள்ளுவர்.
இதற்குத் தலைத்தோற்றம் என்று பெயர். இந்நிகழ்வைப் புலவன் பாடலாக்கினால் அப்பாடல் வெட்சித் திணையில் தலைத்தோற்றம் என்னும் துறையின் பாட்டாக வரும்.

அதன்பின் படைத்தலைவன் கவர்ந்துவந்த ஆக்களை ஊரம்பலத்தே நிறுத்துவன். அதற்குப் பெயர் தந்துநிறை என்பர். தந்துநிறை நிகழ்கையில் துடி விம்மும்.  அதாவது பறையடித்து ஆரவாரம் செய்வர்.

இந்த ஆக்களெல்லாம் மக்களுக்கு ஆக்கப்பட்டன. விரைவில் அவை “பாதீடு”  செய்யப்படும். யார்யாருக்கு எத்தனை ஆக்கள் என்று பகிர்ந்து அளிக்கப்படும். ஊர்மக்கள் மகிழ்வர்.

இப்போது ஆதரவு கிடைத்துள்ளது.  அது அரசு தரும் ஆதரவு.   ஆ= மாடு.   தரவு = கொடுத்தல். தாரம் = கொடுத்தலே ஆகும்.
தமிழரசு போய் ஆநிரை கவர்தல் இல்லாதொழிந்த காலத்து “ ஆதரவு”  “ஆதாரம்”  எல்லாம் இல்லாமல் போயிற்று.  ஆனால் இச்சொற்கள் ஒரு புதிய பொருட்பொலிவு பெற்று பொதுவான அரவணைப்பை உணர்த்தின.  ஒன்றும் கிடைக்காதவன் ஆதரவில்லை ஆதாரம் இல்லை என்று புதிய பொருளில் இச்சொற்களை வழங்கினான்.