வெள்ளி, 23 ஜூன், 2017

குண்டலம் I - ( குளம் முதல் குண்டலம் வரை )

குண்டலம் என்ற சொல் நாடோறும் வழங்கும் சொல் அன்று என்றாலும் சில பழங்கதைகளில் இதை எதிர்கொள்ள நேரிடுகிறது. இது எங்ஙனம் அமைந்தது என்பதைக் காணுமுன் இதன் அடிச்சொல்லான "குண்டு" என்பதை நடுவணாக வைத்து நாம் நம் ஆய்வினை மேற்கொள்வது எளிதாகவிருக்கும் என்று எண்ணுகிறோம்.

குண்டு என்பது பல்பொருளொரு சொல். இதன் பொருளாவன: ஆண், ஆண்குதிரை, ஆழம், சிறு நிலம், தாழ்செயல், நிறைகல், குழி, குளம், விதை, முட்டை வடிவமாய்க் கனக்கும் பொருள் -- என்பன.


குண்டு என்னும் சொற்கு குளம் என்னும் பொருளும் இருப்பதை மேலே காணலாம். இது எப்படி
ஏற்படுகிறது என்று காண்போம்.

குள் என்பது அடிச்சொல்.

குள் + அம் (விகுதி) = குளம்.
குள் + து = குண்டு. ஒப்பு நோக்குக: கொள் + து= கொண்டு. (எச்ச வினை).
குள் + து + = குட்டை. "குளம் குட்டை".(இணைத் தொடர்).
குள் > குழி.
குழிதல், குழித்தல்.

குளத்தைக் குறிக்கும் குண்டு என்பதும் குள் என்ற அடியினின்றே தோன்றியதென்பது இதன் மூலமாக விளங்கும்.

குழிவான நீர் தங்குகின்ற இடத்தையே இதுகாறும் விளக்கினோம். இன்னும் இதன் வேறு பரிமாணங்களையும் காணவேண்டும். அவற்றை அடுத்துக் காண்போம்


தொடரும்.

வியாழன், 22 ஜூன், 2017

பூடுவான் என்ற சொல்லை..............

பூடுவான் என்ற சொல்லைப் பார்த்து அறிந்துகொள்வோம்.

பூடு என்பது பூண்டு என்பதன் இடைக்குறை என்றுதான் இலக்கண
நூல்கள் விளம்புகின்றன. பூண்டு > பூடு. இடை நின்ற ணகர
ஒற்று அல்லது மெய்யெழுத்து மறைந்தது. வான் என்பது
விண்ணைக் குறிப்பது. ஆனால் நாமெடுத்துகொண்ட 
சொல் இதைப் பற்றியதன்று.

இது பேச்சில் வரும் "பூடுவான்" என்ற சொல். ஓடிப்போய்விடுவான்
என்பது ஓடிப் பூடுவான் என்று வருகின்றது. இந்தப் பாணியில்
வேறு சொற்கள் அமைந்துள்ளனவா என்று இன்னும் தேடவில்லை.
இல்லை என்றுதான்  தோன்றுகிறது. போய்விடு என்பது பூடு என்று
 மாறுவதுபோல்  வேறு சொற்கள் இல்லை என்று தோன்றுகிறது.

இப்படிப் பல திரிபுகளைக் கொண்டது தமிழ். திரிபுகள் எவ்வளவு கட்டு
மீறி  இருந்திருந்தால் தமிழிலிருந்து பல மொழிகள் தோறியிருக்கும்
 என்று நினைக்கிறீர்கள்?

போய்வி >    பூ .

புதன், 21 ஜூன், 2017

பிரம்மை -ஆய்வு


பிரம்மை என்ற சொல்லை இப்போது ஆய்வு செய்வோம்.

ஒரு வித அறிவு மயக்கத்தில் இருக்கும் ஒருவனுக்கு, திடீரென்று அருகில் இன்னொரு மெய் அல்லது உடல் தோன்றி நிற்கிறது. அந்த மயக்குத் தெளிந்தவுடன் அம்மெய் மறைந்து போகிறது. இந்தப் பிற மெய்தான் பிற + மெய் = பிறமெய் ஆனது. இந்தப் பேச்சு வழக்குச் சொல்லை எடுத்து "பிறம்மெய்" > பிரம்மெய் என்ற சொல் உருவாக்கி மக்கள் மன்றத்திலே உலவு றுத்தப்பட்டது என்பது உணர்க.

ஒரு விடயத்தில் ( a thing)  சில உள்ளுறுப்புகள்  (factors)  இருக்கும். அந்த உறுப்புகள் அந்த விடயத்துக்கே உரியவையாய் இருக்கும். பெரும்பாலும் இத்தகைய நிகழ்வால் ஓர்  இடரும் தோன்றுவதில்லை. பிற பொருளின் உள்ளுறுப்பு  (external factor ) ஒன்று இவ்விடயத்தில் வந்து கலந்துவிட்டால் "பிற சினை" வந்துவிட்டது என்கிறோம். அதற்கு இனமல்லாத வேற்று உறுப்பு புகுந்து விட்டது. இதனால் "பிறச் சினை" ஏற்படுகிறது. அதுவே பிரச்சினை ஆகிறது. அதாவது பிற உறுப்பு வந்து இடர் விளைக்கிறது என்று பொருள். இதைப் பிரச்சினை என்பதை விட "பிறச்சினை" என்பதே உண்மை நிலை காட்டுவதாகும். இங்கும் அப்படியே வேறு இடுகையில் எழுதியுள்ளோம். இதில் இலக்கணப் புலவர் ஒரு மறுப்புத் தெரிவிக்கலாம். நடுவில் ஒரு சகர ஒற்றுத் தோன்றாது என்பதே மறுப்பு ஆகும். இது புதுச் சொல்லமைப்பு ஆதலின் இயல்பான புணர்ச்சி இலக்கணங்கள் இதற்கு ஏலாதவை என்று இம்மறுப்பைக் களைந்து விடுக.

இதைப் போலவே பிற மெய் எனற்பாலது பிரம்மை என மகர ஒற்றும் மிக்கு வந்து ஒரு புதிய சொல் அமைந்தது என்பது கண்டுகொள்க. இவை பேச்சு வழக்குச் சொல்லிலிருந்து கல்லி எடுக்கப்பட்டவையாதலின், மறுப்புகள் எழா.

பொய்ம்மெய் என்பதிலும் மெய் என்பது மை என்று திரிந்து பொம்மை ஆனதை மொழிநூலார் சுட்டியுள்ளனர்.

பெரு + மெய்  என்பதே  பிரம்மை என்றானது என்று  சிலர்  நினைப்பர் . பெரிய மெய் (உடல் ) முன் தோன்றுதல் -  எனினும் தமிழே    மூலம் .  



Tamil text editor could not render the author's  feed in   properly.