வியாழன், 6 ஏப்ரல், 2017

பூமி நேரானதன்று ..கோணி.......

நாம் வாழும் பூமி நேரானதன்று. பல கோணல் நெறிகளைக் கொண்டிருக்கிறது. நாம் கவனத்துடன் செல்லாவிடின், கோணுதலும்
குறிக்கோள் தவறுதலும் நிற்சையம்.( 1 )

கோணிச் செல்வதற்குப் பலவழிகளையும் வலைபோல் விரித்து வைத்திருக்கும் இந்தப் பூமி, ஒரு கோணியே  அன்றோ?  நடப்பதில் கூட‌
இடையில் மேடு, பள்ளம், ஆறு, குளம், கடல், மலை, கட்டை, விட்டை என்று எண்ணிலடங்காதன, குறுக்கிட்டு, நம்மைக் கோணிச்செல்ல, விபத்தைத்2 தவிர்க்கப் பணிக்கின்றன .

இத்தகைய பல கோணல்களையும் உள்ளடக்கிய பூமிக்குக் கோணி என்றுதான் பெயர்வைக்கவேண்டியுள்ளது.

நாம் இனி வைக்கவேண்டாம். முன்னரே வைத்துத் தமிழில் அது
இன்னொளி வீசிக்கொண்டிருக்கிறது.  கோணி என்றால் அதன்
பொருள்களில் பூமியும் ஒன்றுதான்.

இயற்கையால், இறைவனால் வைக்கப்பட்டதனால், வையம், வையகம்;
தோன்றியதனால்:  பூமி. (பூத்தல் = தோன்றுதல் ). நிலைகொண்டிருத்தலால்: நிலம்.  உருண்டையானதால் : உலகு, உலகம்.  (உல் = உருண்டை, கு: விகுதி. ).  உணவு தருவதனாலும் நீர் தருவதனாலும் தரை. (தரு+ஐ = தரை). இங்ஙனம் சொற்கள் பல. அவற்றுள் கோணிக் கோணிப் போகவேண்டியிருப்பதால் அது
கோணியும் ஆகும்.


அடிக்குறிப்புகள்.

1.  நில் > நிற்சை (நில் + சை + அம் ):  நிற்சையம்   நிற்பது , நிலைபெற்றது, மாறாமை உடையது.  சை, அம் என்பன விகுதிகள்.
புளி  > புளிச்சை  (கீரை ).  சை  விகுதி.   அன் >  அனிச்சை .  அல் > அன் . (மோப்பம் .பிடிக்க அல்லாதது ).  இ > இச்சை :  இங்கு மோப்பம் பிடித்து வருவது : இகரச்  சுட்டு, இங்கு என்பது பெண்மை இடக்கர்  அடக்கல் .
இத்தகு சொற்கள் இப்போது பொதுப் பொருளிலே  வருகின்றன.

2.  விபத்து . இதன் முன் வடிவு: விழு பற்று.  ழுகரத்தை
எடுத்துவிட்டுப் பற்று என்பதை சிற்றூர்ப் பேச்சின்படி
பத்து என்றாக்கினால்,  விபத்து கிடைக்கிறது. இது
அப்படி அமைந்த சொல். பற்றுதல் : ஒரு தொல்லை
உங்களைப் பிடித்துக்கொள்ளுதல்; தொடர்தல், நடத்தல்.
விழுதலே பண்டை நாட்களில் விபத்து. இப்போது
விபத்துகளும் காரணங்களும் முன்னேறிவிட்டாலும்
நாம் இவற்றுக்குப் புதிய சொற்களைத் தேடவேண்டாமே. 

ஆன்மாவும் இறுமாப்பும்


இருப்பதோ உண்மை? இறப்பதே உண்மை!

இறுமாத்தல் ஏனோஇவ் வாழ்வில்

--- உருமாறிக்

கூட்டுப் புழுப்போல் குலைவாக்கம் 

காண்கிலம்

தீட்டிதான் மாக்குத் தெளி.


தீட்டிதான் மாக்கு =  தீட்டு  இது ஆன்மாவுக்கு .
கூட்டுப்  புழு :  cocoons 
குலைவாக்கம் :  ஒரு உரு குலைந்து இன்னோர் உருவை மேற்கொள்ளல்.
(கூடு  வீட்டுக் கூடுபாயும் ஆற்றல் இந்தப் புழுக்கட்கு உண்டு,   ஆனால் வரையறைக்குள் .)

Went to a funeral recently. These lines came up in my mind. Share these with you.

If not properly aligned, please see.  But  it comes well only in small font size.



இருப்பதோ உண்மை? இறப்பதே உண்மை!

இறுமாத்தல் ஏனோஇவ் வாழ்வில் --- உருமாறிக்

கூட்டுப் புழுப்போல் குலைவாக்கம்  காண்கிலம்

தீட்டிதான் மாக்குத் தெளி.



வினியோகம்

 வெகு திறமையுடன் அமைக்கப்பட்ட சொற்களில் வினியோகம் என்பதொன்று.  இதில் யோகம் இருக்கிறதே!  ஆம், பொருள் விலையின்றி விநியோகிக்கப்பட்டால், யோகம்தான். அதிக விலையானால் யோகமில்லை. அதுவன்று நாம் நுழைந்துகாண விரும்பியது, இப்போது யாது அது என்பதனை விரைவாக அணுகிவிடுவோம்.

வியன் என்பது விரிவு என்று பொருள்படும் ஒரு தமிழ்ச்சொல்.
"விரிநீர் வியனுலகு" என்ற தொடரை எங்குக் கண்டீர்கள் என்பதை
எண்ணிப்பாருங்கள். வியன் என்ற சொல்லோடு ஓகம் என்ற சொல்லைச் சேர்த்தால் அது வியனோகம் என்று வரும். அதாவது விரிவாக ஓங்குதல் என்பதே இதன் பொருள்.

பொருட்களை விரிவாகக் கொண்டு சேர்த்தல், வியன் ஓகம் ஆகும்.
அது விரிவு மிகு தன்மையைக் குறிக்கும்.  ஓகம் என்பதும் நல்ல‌
தமிழ்ச்சொல். ஓங்கு+ அம் = ஓங்கம்;  இதில்   ஙக‌ர‌ ஒற்று இடைக்குறைந்தால் அதுவே ஓகம்.  அதாவது மிகுதியாகுவது.  ஓகம் என்பது அகரவரிசைகளில் காணப்படும் சொல். அமைந்ததும் கூறியபடியே ஆகும்.

வியனோகம் என்ற கூட்டுச் சொல், பின் எழுத்து முறைமாற்று
செய்யப்பட்டது. விசிறி என்பது சிவிறி என்றும், மருதை (மருத நிலம் நிறைந்த ஊர் அல்லது நகர் ) என்பது மதுரை என்றும் மாறினும்  பொருள் மாறாமை போல், இந்த வியனோகம் என்பது வினயோகம்
என்று மாற்றப்பட்டு, பின்  0னகரம்  நிகரமாக மாற்றப்பட்டுச் சொல்
அமைந்தது.

1. எழுத்து நிரல்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  யனோ > 0னயோ.
2. 0னயோ > 0னியோ என்று மாற்றம்பெற்று, பலுக்குதல் (உச்சரித்தல்) எளிமைசெய்யப்பட்டுள்ளது.

வியனோகம் (பரக்க ஓங்குதல்) வினியோகமாகி, இப்போது
சேவையாற்றிக்கொண்டுள்ளது.

இதிலுள்ள வி என்பது விரிவுணர்த்தும்.

வியனோகம் > வினயோகம் > வினியோகம்.

இதை வெளியிடாமல் வி+ நியோக என்று பகுத்துப் பொருள் கூறிவிடலாம். அப்போது வந்தவழி மறைவுறும்.