புதன், 29 மார்ச், 2017

தீ தீபம் தீயியம் தீவியம் திவ்வியம்

 ஒருவரைப் பார்த்தவுடன் அவர் தீயாரா நல்லாரா என்று தெரிவதில்லை. அவர்தம் நடவடிக்கைகளைச் சற்றுக் க‌வனித்தாலே நாம் ஒருவாறு வகைப்படுத்த முயலலாம். ஏற்கனவே தீயார் என்று அறிந்துகொண்ட ஒருவரைக் "காண்பதுவும் தீதே" என்பதுதான் ஒளவைப்பாட்டி நமக்குச்
சொல்லும் அறிவுரை.

  தீயானது, நம்மைச் சுடும் தன்மையுள்ளது. சுடப்படுதலை நாம் விரும்புவதில்லை. தீப்புண் ஆறக் காலமாகும். தொல்லையாகவிருக்கும்.

  தீயிலிருந்து அதை  (தொல்லையை )  விலக்க அறிந்த நாம், தீ நமக்கு ஒளி தருவது; சமைத்துண்ண உதவுவது, பல்வேறு வகைகளில் உதவுவது என்பதை
அறிந்துதான் வைத்துள்ளோம். மாலையில் ஒரு விளக்கு கொளுத்திச் சாமி கும்பிட்டால் மனம் நிலைப் பட்டு அமைதி கிட்டுகிறதென்பது பலரும் கண்ட உண்மை. ஒன்றுமே இல்லாமல் அந்த அமைதி கிட்ட முயலலாகாதா எனில் முயலலாம். ஆனால் அதற்கு மனத்திறன் வேண்டும்,எல்லோர்க்கும் அமையாத மனத்திறம் அது. அமையாதோர், விளக்கினால் - ‍ தீயினால் பயன்பெறுதலில் தவறு காணல் பொருந்தவில்லை.
   தீயே நன்மைக்கும் தீமைக்கும் வித்தானதால், தீமை என்பதும் தீபம்
என்பதும்  ஒரே அடியினின்று தோன்றியவாயினும், கருத்துமுரண் காணப்படுகிறது.
   பழங்காலத்தோர், தீயை வணங்கவும் அதை இறை வழிபாடுகளில்
பயன்படுத்தவும் தலைப்பட்டனர். இவை வேறுவகைகளில் உதவினாலும்
உதவாவிட்டாலும் பூச்சிகள், புழுக்கள், குளிர், வனவிலங்குகள் என்பவற்றை அண்டித் துன்புறுத்தாமற் காத்தன. கொசுவிரட்டுத் தீச்சுருளைக் mosquito coils கொளுத்துகையில் இதை நாம் உணரலாம். இறைவழிபாடு என்ன, ஒரு நிமையம் minute  உறங்குதலும் ஆகாமற் போய்விடுமே!

தீபம் என்பது இறைப்பற்றுமையை மனத்துள் உய்க்கின்றது.

தீ என்பது ஐம்பூதங்களில் ஒன்றானாலும் அது மனிதனுக்கு அமைந்த ஒரு கருவிப்பொருளே ஆகும்.  தீபம் என்பது சற்று மேனிலை பெற்றுத்
திகழ்வதாகிறது.

இறைவன்மை குறிக்க ஒரு சொல் புனையவேண்டின், தீயையே தேர்ந்தெடுப்போம். ஆனால் முரண் உள்ளது. தீ+இயம் என்னும்  ஒரு
அடிச்சொல்லையும் ஒரு விகுதியையும் கூட்டிப் புனைந்தால் அது
தீயியம் என்று வருகின்றது. இதை (வரைசொல்லை draft ) உற்று நோக்கின், தீ மட்டுமே மனத்துள் வருகின்றது. இறைவன்மையும் அதற்குதவும் தீபமும்
அகத்துட் புகவில்லை. காரணம் அந்த முரணே ஆகும்.  ஆகவே
தீயியம் என்பதில் சில மாற்றங்கள் தேவைப்படுவது தெரிகிறது.

தீயியம் என்பதில் வந்த யகர உடம்படு மெய்யை மாற்றி அமைக்கலாம்.
தீவியம் என்னலாம். இலக்கண முறையில் (அதாவது: முன் அமைந்து
மொழிமரபுகளில் காணப்படும் நிலையை ஒட்டிச்சென்றால் ) ஈகாரத்துக்கு அடுத்து இகரம் வந்தால் யகர உடம்படு மெய்யே வரவேண்டும். பழ‌ம்புளியை விரும்பும் புலவன்மார்க்கு வகரம் சுவைக்காது.ஆகவே
தீவியம் அத்துணையும்  விரும்பத்தக்கதாக இல்லை. ஆயினும் பழையன‌
வேண்டியாங்கு கழிதலும் புதியன புகுதலுமாக இதை ஏற்கவேண்டியுள்ளது. இன்னும் ஒருபடி மேலேபோய் தீவியத்தைச் சுருக்கித் திவ்வியம் ஆக்கவேண்டியுள்ளது. அப்போது முரண் முற்றிலும் விலகி ஒரு புதுமைச்சொல் கிட்டுகிறது.

மக்கள் நாவிலே புழங்கிப் புழங்கி, தேய்ந்து தேய்ந்து, காய்ந்து சுருங்கி
மருவி அமையும்படி காத்திருந்தால் பன்னூறு ஆண்டுகள்      காத்திருக்கவேண்டும். சில நெறிமுறைகளைப் பின்பற்றி "வைத்தியம்"
செய்து  "திவ்வியத்தை" வெளிக்கொணர்தலே சாலச்சிறந்தது என்று
தீர மானித்துவிடலாம் (தீர்மானிக்கலாம்) காணீர்!

நெடில் குறிலாகப் பல சொற்கள் மொழியில் உலவிக் கிடக்கையில்
இது ஒன்றும் ஏற்க இயலாததாகிவிடாது.....தாவுதல் தவ்வுதல் என்று
நிலைக்கவில்லையோ?

will edit.
The discussion submitted here are for the purpose of understanding the etymology of the word.
A religious construction is not intended.

தாவரங்கள் தாழ்வரங்கள்

தாமதித்தல்<  தாழ்மதித்தல்

தாவணி<  தாழ்வணி

இச்சொற்களைக் கண்டு களித்த நமக்கு, இன்னொரு சொல்லையும்
கண்டுமகிழ்தல் அம்மகிழ்வின் பெருக்கமாகும்.

தாவரங்கள் என்பதைப் பல ஆண்டுகட்கு முன்னரே எழுதினோம்.
அவை எல்லாம் அழிவுண்டன.

தாவரங்கள் என்பது செடிகொடிகளுக்கான பெயர். இவை மிக்க‌
உயரமாக வளராதவை. மரங்களே உயரமாகப் பெரியனவாக‌
வளரும்.  இவை தாழ = உயரமின்றி. வருதலால் = வளர்ந்து
மேல்வருதலால்; தாழ்வரங்கள் எனப்பட்டன.


இங்கு வரம் என்பது வரு+அம்.   வருதலை உடையது.

தலைக்குமேலே உயரமாய் வருவது மரம்; இடுப்பளவு, மாரளவு
வருவது தாழ்வரம் > தாவரம்.  செடிகொடிகள் எனல் இயல்பாகக்
கூறுவது.

மர வளர்ச்சியை "வரும்" ‍ கழுத்தளவு வரும்; தலைக்குமேலே வரும் என்று,  பேசுவது சிற்றூர்ப் பேச்சு.

மழை பெய்யும் என்பார் வாத்தி;  மழை வருமென்பதே மக்கள் பேச்சு.
பெய்தல் என்பது இல்லாமலில்லை. அது பெய்யும்போது அச்சொல் பயன்படும்,

செவ்வாய், 28 மார்ச், 2017

கனகசபைப் புலவர் 1826 முதல் 1873 வரை

கனகசபைப் புலவர் என்பவர் 1826 முதல் 1873 வரை யாழ்ப்பாணம்
அளவெட்டி என்னும் ஊரிற் பிறந்து வாழ்ந்தவர். வட்டுக்கோட்டை சாத்திரக் கலாசாலை என்னும் கல்விச்சாலையில் கற்றுத் தேறி, பின்னர் ஆங்கில வைத்தியமும் ஆயுர்வேத வைத்தியமும் கற்றவர். இவரைப் பற்றி
நாம் மயிலையார் ஆராய்ச்சியிலிருந்து அறிந்துகொள்கிறோம்.

இவர் அழகர்சாமி மடல் என்னும் ஒரு சிறு பாட்டுநூல் ( பிரபந்தம்)
பாடி அதை வேலூர் சென்று பாட்டுடைத் தலைவர் முன்னிலையிலே
அரங்கேற்றினார். அடுத்து 1753  விருத்தப்பாக்களைக் கொண்ட திருவாக்குப் புராணம் என்பதையும் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தமிழ்நிகண்டையும் எழுதிமுடித்தார்.

இந்த நூல்கள் எவையும் கிடைக்கவில்லை. இராசபக்சே நடத்திய‌
இனவழிப்புப் போரின் முன்பே எரியூட்டிச் சாம்பலாக்கப்பட்ட யாழ்ப்பாணத்
தமிழ் நூல் நிலையத்தில் இவை இருந்திருக்கலாம். நூல்கள் அனைத்தும்
உருவின்றி மறைந்தன என்பதால் இவை இழந்தவை இழந்தவைதாம்.
தனிப்படிகளை யாரேனும் எங்கேனும் கண்டுபிடித்துத் தமிழார்வத்தால்
பதிப்பித்தால், அப்போது நாம் ஆகூழினர் (அதிருஷ்டசாலிகள்) ஆவோம்.
அந்தநாளும் வந்திடுமோ?

இவர் சென்னைக்குச் சென்று வீராசாமி செட்டியார் என்ற புலவருடன்
ஓர் அகரவரிசையைத் தயாரிக்க உதவினார் என்பர். சென்னையும்
பல இயற்கை இன்னல்களுக்கும் வெள்ளத்துக்கும் உட்பட்ட நகரமே.
அங்குக் கிடைப்பதும் முயற்கொம்பே.

என்றாலும் நூல்நிலையங்களில் தப்பித்தவறி இவற்றுள் ஏதாவது
கிட்டுமோ? மக்களை எட்டுமோ?

சாமிநாத ஐயரைப்போல் பழ நூல்கள் காப்போரே தமிழ்த் தாயின்
தவப்புதல்வர் ஆவர்.