வியாழன், 16 மார்ச், 2017

ராகு என்று வழங்குவது........

இராகு என்பது ராகு என்று வழங்குவது தலையெழுத்திழப்பு ஆகும்.

இர்:  இது இருள் என்பதன் வேர்ச்சொல்.

இர் > இருள்.
இர் > இர் +ஆகு = இராகு.  (இருளாகிவிட்ட கிரகம்).

ராகு என்பது ஒரு நிழற்கிரகம் அல்லது நிழற்கோள். கேதுவும் நிழற்கோள் தான்.

இர் > இராமன்.
இர்+ஆம்+அன்:   கருப்பு நிறமான அவன்.  ஆம் : ஆகும் என்பதன்
குறுக்கம்.  அன் = அவன்.

இர் > இரா>  இராவண்ணன் > இராவணன்.

இவனும் கருத்தவனே.

இர் > இரா > இராகுலன்.

இருள் நிறக் குலத்தினன்.

இவற்றை 2009 ‍~  2010 வாக்கில் விளக்கியிருந்தாலும் இவை கள்ள‌
மென்பொருளால் அழிவுண்டன. பழைய இடுகைகளின் பகர்ப்பு அல்லது
சேமிப்பு இருந்தால் அனுப்பிவையுங்கள்.

இர்> இரவு .  இருள் நேரம்.

இர் > இரா > இராவு.

இர் > இரா > அத்து + இரி:  இராத்திரி.

இரு> இரி:  இருப்பது.  அத்து : சாரியை.

புதன், 15 மார்ச், 2017

சன்னலுக்குப் பலகணி

பலகணி என்ற சொல் அவ்வப்போது நம்மை எதிர்கொள்கின்றது. சன்னல்
என்பதே பரந்து வழங்குவதாய் உள்ளது. நாம் இப்போது பலகணி என்ற‌
சொல்லைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஒன்று, சில, பல என்னும் எண்ணிக்கைகளில் பல என்பதே  பலகணி என்ற சொல்லில் முன்நிற்கிறது.

இது உணர்ந்துகொள்ள விளக்கம் வேண்டாதது ஆகும்.

கண் என்பது ஓட்டையையும் குறிக்கும். கண்  என்ற சொல்லின் பொருளை முழுமையாக அறிந்துகொள்வோம். பொருளாவன:

அல்லி, அழகு, அறிவு, இடம், கணு, துவாரம், மூங்கில், விழி,
பீலிக்கண், தேங்காய்க்கண், மூங்கிற்கண், பெருமை, ஞானம்.

கண் என்பது பலபொருள் ஒருசொல்.  "துணியில் பூச்சிகடித்ததுக்    கண்ணு
கண்ணாய்ப் போய்விட்டது, அதை வீசிவிட்டேன் " என்று பேசுகையில்
கண் என்பது விழியைக் குறிக்கவில்லை; ஓட்டையையே குறிக்கிறது.

முற்காலத்தில் சன்னல்களை அமைத்தவர்கள், பல வட்டமான துளைகளை ஒவ்வொரு சன்னலிலும் அமைத்து காற்றுவர வசதி செய்தனர்.  அதனால் சன்னலுக்குப் பலகணி என்ற பெயர் ஏற்பட்டது.

இதைப் பல + கண் + இ என்று பிரிக்கவேண்டும். பல கண்களை
உடையது என்று பொருள்.

இது அழகாய் அமைந்த ஒரு தமிழ்ச்சொல். இதைப் பயன்படுத்துங்கள்.

கேது

கேவலம் என்ற சொல்லை அறிஞர்கள் முன்னர் விளக்கியுள்ளனர்.
கெடுவலம் என்பதே கேவலம் என்று திரிந்துள்ளது. வலிமை கெட்ட‌
நிலை என்பது பொருள்.

கெடு > கேடு > கே.

கேது என்ற சொல்லும் கெட்ட கோள் என்று பொருள்படுவதே. பலர்
இன்றும் இப்படி நினைக்கின்றனர். கேது என்பதில் து என்பது விகுதி.

கேதம் என்பதும் கெடுதம் என்ற சொல்லின் திரிபுதான், சாவு என்பது
பொருள்.

கெடார்நாதன் என்ற சொல்லுக்கு சிவபத்தர்கள் கெட்டுப்போக மாட்டார்கள், அவர்களின் நாதன் சிவன் என்பது பொருள்.