புதன், 8 பிப்ரவரி, 2017

வாழ்வினொரு பாகமென்ப அரசின் ஓட்டம்,,,,,,,

ஒருமன்னன் வீழ்ச்சியிலின் ‍னொருவன் வந்தான்;
ஒளித்தமிழர் இடைஇதுவோ பழக்கச் செய்தி;
திருமன்னர் தமைநினைந்து விழிநீர் சொட்டி
தேறாமல் திரைபோலும் அலைந்தார் பல்லோர்;
பெருமக்கள் குடியரசாள் இதுநாள் கூட‌
பெருநிகழ்வு தானிதுவாய் நடத்தல் கூடும்
வருதக்க  துன்பமெலாம் வரவே செய்யும்
வாழ்வினொரு பாகமென்ப அரசின் ஓட்டம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் ............

தொண்டு மனத்தவராய்த் தோய்ந்துமுன் நிற்பினும்
நின்றுசூழ் வாருமது கொண்டணைக்க வேண்டுமே!
ஒப்பார்முன் தோன்றுதல் ஒல்லாதே செய்தொழிலும்
தப்பாகக் கொள்வரே காண். 

திங்கள், 6 பிப்ரவரி, 2017

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி.....

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி வந்த‌
இன்பழமைக் காலத்திற் கேகி நாம்போய்
நிறைவான சண்டையிலா உலகம் தன்னை
நிறுத்தின்றிக் காலயரத் தேடி  னாலும்
குறைவான பலன்கூடக் கிடைக்கா தம்மா
கோதற்ற போரற்ற ஞால மில்லை;
வரைவின்றிப் பலவாறு கருதிப் பேசும்
வளமூளை மனிதனதே ஆன தாலே.