திங்கள், 10 அக்டோபர், 2016

பொத்தகம், book

புத்தகம் என்ற சொல்லுக்கு நேரானதாக , ஆங்கிலத்தில் "புக்" எனப்படுகிறது.

புத்தகம் என்பதினும் பொத்தகம் என்பதே சரியானது என்று தமிழ் ஆர்வலர் கூறுவர்.

பொதி + அகம் ‍=  பொத்தகம்  எனின் ஏடுகள் ஒன்றாக சேர்க்கப்பட்ட கட்டு என்று பொருளாகும்.  பொதி என்பது பொதிதல். உள் வைத்துக்
கட்டுதல்.  இதில் ஒரு இகரம்  கெட்டது;  பொதி < பொத்+ இ.
பொதி என்பது கட்டுச்சோறு என்றும்  பொருள்படும்.

பொத் > பொது.  ( பலர் ஒன்று சேர்தல், சேர்ந்திருத்தல்).
பொத் > பொதி.  (கட்டு)

பொத் > பொத்+ அகம் = பொத்தகம்,  ஏட்டுக்கட்டு. கட்டேடு.  கட்டோலை.

பொத்துதல் : இது கட்டுதல் என்றும் பொருள்.

பொத் என்பது ஒரு அடியன்று . விளக்கும்பொருட்டு   , இவ்வடிவு
காட்டப்பட்டது.

புதை என்பது பேச்சில் பொ தை   என்று வடிவு  கொள்ளும்.   புதைப்பதும்  ஒரு துளை  செய்து.  மண்கட்டுக்குள் ஒன்றை இடுவது ஆகும்.   இங்கு வரும் கட்டுப் பொருளைக்  கவனிக்கவும் .

பொத்துதல் = கட்டுதல்.
பொத்து + அகம்  எனினும் அதுவே ஆகும்.   = பொத்தகம் .

புத்தகம் எனின் புதிய அகம்  ஆகும்!!

பொத்தகம்  என்பதைச் சமஸ்கிருதம் புஸ்தகம்  ஆக்கிற்று.  அது பின் தமிழில்
புத்தகம்  ஆனது.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

சுட்டடிச் சொற்கள் : உ முதல் துதித்தல் வரை

உகரம் முன்னிருப்பதைக் குறிக்கிறது என்பதைப் பல இடுகைகளில் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளோம்.

உவன் :  முன் இருப்பவன்.
உன்:   முன் இருப்போனுக்கு உரிய.  (எடுத்துக்காட்டு: உன் புத்தகம். உன் வீடு என்பன ).
உது:  முன் இருப்பது.

உதி:
உது என்ற முன் இருப்பது என்னும் க‌ருத்தினின்று உதி என்ற சொல் தோன்றிற்று என்பதைக் கூர்ந்துணர்க. உதி > உதித்தல்

உது > உதை:  கால் முன் சென்று ( பிறிது ஒன்றை அல்லது ஒருவனைத் )தொடுதல்.

உ > உய் > உய்தல்.    முன் செல்லுதல்  முன்னேறுதல்.
உ > உது > உந்துதல்.   முன்செலவுறுத்துதல்.

உ > உது > உது + அ + அம் =  உதயம்.  முன் தோன்றி அங்கு
செல்லுதல்.  அ = அங்கு. யகரம் : உடம்படுமெய்.  (  எழுதல் .)

உதையம் > உதயம் எனினுமாம். ஐகாரக் குறுக்கம்.

உது >  நுது > நுதல்.  முன்னிருக்கும் நெற்றி.

உயிரின் முன்  ஒரு நகர மெய் தோன்றிற்று.

நுது > நுதி : புகழ்தல்.

--

நுது > நுதல் > நுதலுதல் ,  ஏதேனும் சொல்லும்போது ஒரு கருத்தை
முன் வைத்தல். விடையம் ‍ > விடயம் > விஷயம். விடுக்கும் செய்தி.
நுதலுதல் : விடயம் உரைத்தல்.

நுது > நுந்து > நுந்தல்.  கொட்டுதல், முன் இறைத்தல், பொழிதல்.
 (உது > உந்தல் போல).

உ> நு > நுவலல்  : சொல்லுதல். முன்னாக மொழிதல்.

நுவலம் > நுவனம்:  நூல்.     ஒ நோ: கவல் > கவலம்> கவனம்.

உ > து >  துப்பு:  முன் உமிழும் எச்சில்.

உ > து > துப்பு: முன்மை உடையதாகிய உணவு.
உ > து > தூவு:  முன் தெளித்தல்.

உ >  து  > துய் .  துய்த்தல் .  முன் சென்று அடைந்து அதில்  மகிழ்தல்

உ> து> துதி.   முன்வைத்துப் புகழ்தல்.  துதி > ஸ்துதி.

துதிக்கை .

உ >  ஊ

ஊகம் .  யூகம்   அறியாததை மனத்தால் எண்ணி அறிவது.  நேரடியாய் அறியுமுன்  எண்ணி அறிவது.


ஊங்கு:  விட.

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை. (குறள்.)


உ > ஊ > தூ > தூவு   தூவுதல்.

தூவு > தூவம் > தூபம் :  பொடி தூவிப் புகை கூட்டுதல்.   வ> ப .

எல்லாம் விளக்க நேரம் போதாது. இவற்றினின்று பலவற்றை நீங்கள்
தெரிந்துகொள்ளலாம்.

இவற்றைத் தமிழ்ப்புலவன்மாரும் கூறியுள்ளனர்.

ஆய்ந்து  விரித்துணர்க .



சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.