சனி, 8 அக்டோபர், 2016

மதியும் அறிவும்

மதி என்பது அறிவு குறிக்கும் தமிழ்ச்சொல்.  இதற்குரிய வினைச்சொல்
மதித்தல் என்பது. மதித்தல் என்ற வினைச்சொல் தமிழிலிருப்பதனால்
மதி என்பது தமிழ்தான். அறிவு என்பது அறிந்துகொள்ளும் செயல் அல்லது திறன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

திருக்குறளில் உள்ள ஒரு சிறந்த பா இதுவாகும்.

மதியும் அறிவும்  இப்போது ஒப்பாக வழங்கப் படுவதுண்டு;   இது காலப் போக்கில் பொருளிழப்பு  ஆகும்.

முயலுக்கு மூன்று கால்கள் என்று யாராவது சொல்லி அதை ஒருவன்
நம்பினால் அவனுக்கு அறிதிறன் தேவைப்படுகிறது என்றுதான் கொள்ளவேண்டும். ஒருகாலை இழந்துவிட்ட  முயலானால்   அதுவும்
முயல்தான்;  அதை மாற்றுத் திறனுடை முயல் எனலாமா ?

மதி என்பது ஒப்பிட்டும் அளவிட்டும்  அறியும்  மேலான  திறனைக் குறிக்கிறது.
ஆகவே  அறிவு  மதி ஆகிய சொற்களிடையே  ஒரு சிறு வேறுபாடு உள்ளது.
நிலவு  காலத்தை அளவிடுவதால்  அதற்கு  மதி  என்பது பெயராயிற்று .


மதியைக் கொண்டு அளவிட்ட காலம்  மாதம் எனப்பட்டது. மதி +  அம் = மாதம்.  இது முதனிலை நீண்டு விகுதி பெற்று, இடைநின்ற இகரம் கெட்ட பெயர்.  இதைப் போன்ற இன்னொரு சொல் படி+ அம் =  பாடம் ஆகும்,

சுடு+ அம் = சூடம்  என்ற சொல்லில்  முதனிலை நீண்டு உகரம் கெட்டு விகுதி பெற்றது. அறு >  ஆறு  என்பதில்  முதனிலை நீண்டு பெயரானது,  ஏனை விகாரங்கள் யாவையும் இல்லை .

இவற்றை நன்கு மனத்திலிருத்திக் கொள்க.

நுதி  என்பதும்  அறிவின் கூர்மை குறிக்கும் பழஞ் சொல்லே.




வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .







  

புதன், 5 அக்டோபர், 2016

இறந்துகொண் டிருப்பாரை

இறந்துகொண் டிருப்பாரை இறவாமல் பிழைப்பிக்கப்
ப‌றந்துவானில் கோள்தொட்ட பயன்மாந்தன் அறிந்திலனோ?


அறிந்திருந்தால் அன்புடையார் அவ்வுலகு செல்கையிலே
புரிந்துணராத் தான்மாய்தல் புரிவானின் வீண்மையுமேன்?

வீண்மைபல‌ தாம்விலக்கி வெற்றிகண்ட அறிவியலார்
காண்மரணம் பொய்யாக்கிக் கதிஉயர்த்தல் விளையாரோ?

விளைத்தபல விந்தைகளில் நிலைத்தியலா மனிதவுயிர்
பிழைத்திருக்கும் விந்தைதனை  இழைத்துயர்ந்து சிறவாரோ ?


தலைவன் இறக்கத் தொண்டன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் .
மரணம் [இல்லாப்  பெரு வாழ்வினை அறிவியலார் தரமுடியுமானால் 
பாவம், இத்தகு   தொண்டர்களை எல்லாம்  காப்பாற்றிவிடலாம் ,  அவர்களின்  தலைவர்களுடன் !!

இதில்  அந்தாதித் தொடை பயன்படுத்தப் பட்டது.