வியாழன், 6 அக்டோபர், 2016

காய்ச்சலென்றால்

காய்ச்சலெனில்  மாத்திரையைப் போட்டுக் கொள்வாய்
கடைகளிலே பலவிதங்கள் கிட்டும் கேட்பாய்!
நாயுறக்கம் கொண்டாலும் தேக நன்மை
நாடுவது கடனன்றோ நாளும் நாளும்.
போய்க்கிடந்து மருந்துண்ண மாட்டே  னென்று
புலம்புவதாற் பயனுண்டோ இன்றேல் சென்றே
நோயகற்று மருத்துவரின் நுட்ப  ஆய்வில்
நுவல்மருந்து பெற்றருந்தி நூறு  காண்பாய் .



நுறு :  நூறாண்டு .







  

புதன், 5 அக்டோபர், 2016

இறந்துகொண் டிருப்பாரை

இறந்துகொண் டிருப்பாரை இறவாமல் பிழைப்பிக்கப்
ப‌றந்துவானில் கோள்தொட்ட பயன்மாந்தன் அறிந்திலனோ?


அறிந்திருந்தால் அன்புடையார் அவ்வுலகு செல்கையிலே
புரிந்துணராத் தான்மாய்தல் புரிவானின் வீண்மையுமேன்?

வீண்மைபல‌ தாம்விலக்கி வெற்றிகண்ட அறிவியலார்
காண்மரணம் பொய்யாக்கிக் கதிஉயர்த்தல் விளையாரோ?

விளைத்தபல விந்தைகளில் நிலைத்தியலா மனிதவுயிர்
பிழைத்திருக்கும் விந்தைதனை  இழைத்துயர்ந்து சிறவாரோ ?


தலைவன் இறக்கத் தொண்டன் தன்னை மாய்த்துக் கொள்கிறான் .
மரணம் [இல்லாப்  பெரு வாழ்வினை அறிவியலார் தரமுடியுமானால் 
பாவம், இத்தகு   தொண்டர்களை எல்லாம்  காப்பாற்றிவிடலாம் ,  அவர்களின்  தலைவர்களுடன் !!

இதில்  அந்தாதித் தொடை பயன்படுத்தப் பட்டது.

திங்கள், 3 அக்டோபர், 2016

கண்டதோர் கொள்கை

கண்டதோர் கொள்கை ஒன்றே
கருதுமோர் உண்மைக் கொள்கை
என்பதோர் படியில் நின்றே
எனைத்துமே போற்றிக் கொண்டு
மன்பதை அனைத்தும் பின்னே
மடங்காது வருக வென்பான்
ஒன்பதில் ஒன்று நீங்கின்
உன்கழுத் தறுத்தல் நீங்கான்.

தீயினில் விரைந்து  வீயும்
ஆயவை  அனைத்தும் போலே
தீவிரம் அதனில் மாயும்
ஆய்விலர் கருதும் யாவும்.
தாவுறும் அனைத்தும் நன்மை
தாவில  அனைத்தும் புன்மை
மேவின புரட்டிப் போட்ட
மிகைபடு பிழைக்கும் செல்கை .     

தீவிரம்  விலகிச்  செல்வீர்
தீவினை கடன   கற்றல் ;
நாவினில் பிழைத்த  லின்றி
நல்லன கடைக் கொள்    வீ ரே;
தேவினை  அடைந்தோன்  போலும்
பாவனை  புனைதல்  தீதாம் ;
ஓவமே  பலரும்  கூடி
ஒத்திருந் தகலுள்  போற்றல் .


 குறிப்புகள்:

கண்டது:  கண்ணாற்  கண்டதும்  மனத்தாற்  கண்டதும்  ஆகியவை;
அவன் காணாத  கொள்கைகள் பல உலகில் உள என்பது  கருத்து.

ஓர்  கொள்கை:   வினைத்தொகை;   ஓரும்  கொள்கை .  ஓர்தல் :  மூளையில்  தோன்ற   அறிதல் .

ஒன்றே  :   மட்டுமே.

கருதுமோர்   உண்மை:    அவன்  ஏற்கத்தக்க  ஒரே  உண்மை.

என்பதோர்  படி:   பிடிவாதமாகிய  ஒற்றைப் படி.

எனைத்துமே -   எதையாகிலுமே.    பிற  குப்பைகள்  பலவற்றையும் .

தா  :   குற்றம்.

செல்கை  :  போம் வழி .

கடன  கற்றல்:   கடன்  அகற்றல்  =   அகற்றல்  கடன் .

பிழைத்தல் :  பிழை படுதல் .

தேவினை  =  கடவுளை.

ஓவம் :   ஓவியம்.