வியாழன், 8 செப்டம்பர், 2016

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும்...

திருவள்ளுவ நாயனார் ஒரு வெறும் வள்ளுவர் அல்லர்; அவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். அவரை வெறுமனே "வள்ளுவன்" என்று சுட்டலாகாது என்பது திருவள்ளுவமாலையால் அறியப்படுகின்றது. இதற்குக் காரணங்கள் உள்ளன. முதலாவது: அவர் ஆதிபகவன் என்னும்
தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றும் அவர்களில் ஒருவர் பிராமணர் என்றும் கூறப்படுவது. ஆகவே அவர் உயர்வான குடும்பத்தில் பிறந்தவர் என்று கொள்ள இடமுண்டு.  எனின்  அவர் திருவள்ளுவர் ஆகிறார். இரண்டாவது அவரெழுதிய உலகப் பொதுமறை ஈடு இணையற்ற நூல். இத்தகைய உயர் நூலை இயற்றிய அறிவாளி, அவர் யாராயினும் மிக்க உயர்வு உடையவரே ஆவார் . அதனாலும் அவர் திருவள்ளுவர் ஆகிறார்.

திரு என்ற அடைமொழியின்றிச் சுட்டினால் அது அவரைக் குறிக்காது
என்று திருவள்ளுவமாலை சொல்வதுபோல் தோன்றுகின்றது. அப்படியானால் "வள்ளுவன்" என்பது திருவள்ளுவர் பெயரில் வருகையில் அது சாதிப்பெயர் ஆகாது  என்பதுபோல் தெரிகிறது. வள்ளுவர் என்போர் அறிவிப்பாளர் என்று  பொருள் படுவதாலும். திருவள்ளுவர் அப்பெயரைப் புனைப்பெயராய்க் கொண்டிருந்திருந்ததனாலும்  அவர் எங்கும் காணப்படும்
குல வள்ளுவரல்லர்; அறிவு பரப்பிய அறிவிப்பாளர் ,அக்குலத்தினர் அல்லர் என்பதாகவுமிருக்கலாம்,  அரச குடும்பத்தில் பிறக்காத ஒருவர்
தம்மை அரசு என்று குறித்துக்கொள்வதுபோலும்,  (அதாவது உயர்வாக),
அடிமைக் குலத்தில் தோன்றாத ஒருவர் தம்மைத் தாசர் என்று குறித்துக் கொள்வது போலும் ( எடுத்துக்காட்டு: துளசி தாசர் ),  தொண்டர் தலைவராய் இருப்பவர் ஒருவர் தம்மைத் தொண்டரடியார் என்பது போலவும் ஒரு சொல்லாட்சி இது என்பதை விளக்கவே, திருவள்ளுவமாலைப் புலவர், திருவள்ளுவரை வள்ளுவர் என்பான் பேதை என்று விளக்கியுள்ளார் என்றும் நாம் நினைக்க இடமுண்டு.

வள்ளுவர் என்ற சொல்லமைப்பையும் பின் ஆராய்வோம் ,

தொடரும்.

சிக்காவில் சிக்கின் விதி.!

சிக்காது சிங்கப்பூர் சீர்கேடு நோய்களிலே
சிக்காவில் சிக்கின்  விதி.

பசுவில்லை சாணியில்லை பக்கத் தழுக்கில்
கொசுவந்த தெப்படியோ கூறு.

மருந்தும் அடிக்கணும் கொல்லோ இரத்த
விருந்தே விழைந்த கொசுக்கு!

திருந்த மருந்துண்டு தீர்ப்பீரே சிக்கா
அழுந்திப் பழிவாங்கு முன்.

நீரிற் பிறந்து நிலத்திலும் கோலோச்சிப்
பாரிற் கொசுபெற்ற தென்.

கொதுவைப் படைத்தானே கூட   நதிநீரை
விட்டானோ ஊரகத்தில்  இல்!


வேண்டாத வேலைகள் செய்கடவுள் ஆங்கவர்க்கு
வேண்டாமை யாருரைப் பார்?

கொசுக்கொலை என்றிறைவன் கூறினும் அன்ன
நசுக்குதல் நல்லோர் கடன் .

சிறுமண்டைப் பிள்ளைகள் சீரில்பின் வாழ்வு
தருகொசுவைக் கொல்லல் கடன்.

கொசுவொழிப்புச் செய்து குவலயத் தேறின்
பசுவெனினும்  பாராட்டும் காண்.

பசுவுக்கு வால்தந்து பார்த்தான் கொசுவுக்குக்
.கட்டுப்பா டாக்கல் பொருட்டு.








புதன், 7 செப்டம்பர், 2016

பூக்காரியைச் சுட்டிய புறநானூற்றின் இனிமை

https://sivamaalaa.blogspot.my/2016/09/blog-post_7.html

குறித்த முன் இடுகையைத் தொடர்ந்து:

நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாணுடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.


இப்போது என்ன நடந்தது?   மறவர்களை நோக்கி ஓர் இனமானம் காக்கும்
ஏவலன்றோ வீசப்பட்டது?  பகை அழிக்கப் போருக்குப் புறப்படு என்ற ஆணையன்றோ அந்தத் தண்ணுமையால் எறியப்பட்டது? இது நன்கு வெளிப்படும்படியாக: 'குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை" என்று புலவர் இனிமை தோன்றத் தெளிவிக்கிறார்.  ஆகவே இதிலேதும் இரங்கலுக்கு இடமில்லை என்பது முன்வரு குறிப்பாயிற்று.  குறும்பர் -  மறவர் . குறு  என்ற இக் குறுமைச் சொல்  அடித்தளப் போர்மறவரைக் குறிக்கும் பொருள்பொதிந்த சொற் பயன்பாடு.  அவர்களே நாடு காவலர்கள் .


இந்தத் தண்ணுமைத் தட்டொலி இரக்கத்தையா வரவழைக்கிறது?  யாருக்கு
அந்த இரக்கம் வேண்டும்? போருக்கு அஞ்சியவர்களாய் வாழ்ந்து சாகும்
நாணுடை மாக்கட்கு அது வேண்டும்!  மக்கட்கு அன்று,  அந்த மாக்கட்கு!
அவர்கட்கு வேண்டுமானால் இது இரங்குதலைத் தரும்.  எமக்கன்று, யாம்
மறக்குலத்து மாது என்பது தோன்ற: " நாணுடை மக்கட்கு இரங்கும்" என்றார் புலவர்.


எப்போதும் பூச்சூடிக் கொள்பவள். இன்று அது சூடவில்லை. தன் அழகில்
கொஞ்சத்தை அவள் இழந்துவிட்டவள்தான்.அழகிய மலர்கள் சூடி மணச்சாந்துகள் இட்டுக் கணவன்முன் நின்றால் அழகு அழகுதான். ஆனாலும் என்ன? போருக்குப் புறப்பட்ட கணவனைக் கண்டு உள்ளம் பூரித்து அது முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்ட அந்த அழகு அந்த இழப்புக்கு ஈடு செய்யவில்லையோ?  "அதனால் யாம் இழந்தது சிறிதே. எம்மினும் மிகுதியாய் தன் பேரெழில் இழந்து, என்ன வினை ஆகிவிட்டது என்று நொந்துகொண்டு இன்னொரு வீட்டுக்குள் புகுந்து பூவிலை கூற முனைகிறாளே,,, அவள் இழந்தது அதிகம்; அதிகம். இன்று பிழைப்பே அவளுக்குக் கேள்விக்குறி ஆகிவிட்டதே! வினை ஆகிவிட்டதே. பாவம் பாவம் அவள்தான் பாவம் என்கிறாள் இம்மறவர் மாது. யான் இரும்பு வருக்கத்துப் பெண் என்கிறாள் இவள்.


 ஆயின்
எம்மினும் பேரெழில் இழந்து வினை எனப்
பிறமனை புகுவள் கொல்லோ
அளியள் தானே பூவிலைப் பெண்டே.

என்பதைப் பாடி இன்புறுக.