வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சொல் வடிவங்கள்

சொல்லியல் நெறிமுறை  தொழிற்பெயர் ஆக்கம் 

இதுவரை நம் இடுகைகளைப் படித்து வந்த நேயர்களுக்குச்  சொற்கள் அமையும்போது  அவை நீளுதலும் குறுகுதலும் பற்றி நன்கு தெரிந்திருக்கும். இருப்பினும்  புதிதாக வருகை புரிவோருக்காகச்  சில எடுத்துக் காட்டுகளைத் தருதல் நன்று என்பதை யாவரும் ஒப்புவர் என்பது எம் துணிபு ஆகும்.

நாகரிகம் என்ற சொல்லைக் கவனிப்போம். இது நகர் அகம் அல்லது   நகர் இகம்  என்ற சொற்களின் புணர்வில் தோன்றிய சொல்லாம். நகர் + இகம் என்பது பின் நாகரிகம் என்று ஆனது. அதாவது முதலெழுத்து நீண்டு அமைந்து சொல்லானது. நகர வாழ்வின்  நடை உடை பாவனை
இவற்றின் மொத்த வெளிப்பாடே நாகரிகம் ஆகும்.  இதற்கு நேரான ஆங்கிலச் சொல்லும் இது காரணமாய்  அமைந்ததே ஆகும்.  நகரகம் என்பது நாகரிகம் என்று  அமைந்தது  எனினுமாம்/ .  வள்ளுவர் வலியுறுத்தும் நாகரிகம் இயல்பான நாகரிகம் அன்று, அது புத்தர் ஏசு நதர் போன்ற பெரியோரால் கடைபிடிக்க இயல்வது ஆகும்.

சொல் குறுகி அமைவது இதற்கு நேர் மாறானதாகும்.  சாவு + அம் = சாவம் 
எனற்பாலது  சவம் என்று குறுகி அமைவது காண்க.   தாவு  +  அளை 
என்பது தாவளை என்று அமையாமல் தவளை என்று வருவதும் 
இத்தகைய குறுக்கமே அகும்.  அளை  என்பது ஒரு விகுதி    கூ +அளை  = குவளை :  இதை இப்போது கொவளை என்கின்றனர்    மேற்பகுதி  கூம்பினது குவளை  என்பது அறிக. தற்காலத்து மேல் கூம்பாததும் குவளையே இது பொருள் மாற்றம்.   கூ > கூம்பு   இங்கு  பு வினையாக்க விகுதி என்பதறிக ,சொல் மிகுந்து அமைவதால்  மிகுதி .> விகுதி   இதில்  மகர வகரப் பரிமாற்றம் உள்ளது.  யாப்பில் மகர வகர மோனையும் அமையும்,  பழைய இடுகைகளை  நன்கு கவனிக்கவும்.
\
சவம்  என்பது  இரு விகுதிகள் பெற்றுக் குறுகிய சொல்.  சா > சாதல் ;  சா> சாவு + அம் ,   இங்கு  வு  அம்  என்பன விகுதிகள் .  

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஊண் பித்தையார் பாடலை....

ஊண் பித்தையார் என்ற சங்கத்து நற்புலவர் பாடிய பாடலை இப்போது நாடியும் பாடியும் மகிழ்வோம். இவர் பெயர் சாப்பாட்டின் மேல் இவர் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்று காட்டுகிறது. பித்தை என்பது விருப்பம் என்று பொருள்படுமாதலாலும் பித்தை என்பதிலிருந்து திரிந்த பிச்சை என்பது பிறருக்கிடுதலைக் குறித்தலாலும், இவர் பிறருக்கு ஊண் வழங்கற்குப் பெரிதும் விரும்பியவர் என்று நாம் கொள்ளலாம்.

இவர் பெயர் பிறர் இவர்க்கு இட்டு வழங்கிய பெயர், ஊண் பிச்சை வழங்கிய காரணத்தாலென்று கொள்க. இயற்பெயர் அறியோம்.


பிச்சை  பித்தர் முதலிய சொற்கள் பற்றி அறிய:



பாடல் வருமாறு:

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரற்கால் யானை ஒடித்துண்டு எஞ்சிய‌
யாஅ வரி நிழல் துஞ்சும்
மாயிருஞ் சோலை மலை இறந்தோரே.

உள்ளார் கொல்லோ தோழி ‍: தோழியே, நம் தலைவர் நம்மை நினைத்துப் பார்க்கமாட்டாரோ? என்ற தலைவிக்கு;


தோழி உரைத்தது:

(நினைத்து இருப்பார்!)

உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் : நினைத்தும் வருவதற்கான வாய்ப்பு அவர் மேற்கொண்ட தொழிலால் இல்லாமையினால்,

வாரார் கொல்லோ : இன்னும் வரவில்லை; அவ்வளவுதான்,

மரற் புகா அருந்திய : மரலென்னும் (மான்கள் வழக்கமாக உண்ணும்) கொடியைத் தின்ற;

எருத்து இரலை : ஆண் கலை மான்;

உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய : உரல்போலும் காலை யுடைய யானை துண்டுபடுத்தித் தின்று மீதமாகிய;

யா வரி நிழல் துஞ்சும் : யா மரத்தின் நிழலிலே படுத்து (ஆண்மான் )உறங்கும்;

மா இருஞ் சோலை மலை இறந்தோர் : இருள் கூடிய பெருஞ் சோலையை உடைய மலையினைக் கடந்து சொன்றோர்.

என்பது தோழி தலைவிக்களித்த பதில்.

எப்போது மீண்டும் ஊர் திரும்ப வேண்டுமென்பது தலைவன் தான் மேற்கொண்ட வேலையில் ஏற்படும் ஓய்வுகொள்ளும் இடைவேளைகளை உணர்ந்து அவனே நோக்கினாலே அறியலாகும். அவன் திரும்புவான். அதுவரை பொறுத்திரு என்கிறாள் தோழி. அவன் அவ்வேலைக்குச் செல்லும் பயணத் தொடக்கம் அவ்வளவு எளிதாய் இருந்திடவில்லை.
சோலைகள் மலைகள் இவற்றைக் கடந்து சென்றவன். இடர்ப்பட்டு அங்கு சென்று சேர்ந்தவன், வேலையை முடிக்கவேண்டுமே. அந்த வாய்ப்பு ஏற்படுங்கால் அவன் உணர்ந்து திரும்புவான் என்றபடி. இது "பொறுமை மேற்கொள்க" என்ற அறிவுரை.


குறுந்தொகை 232.  

புத்த பிக்குகளும்,,,,,

அச்சன் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதற்குக் காரணம், எழுத்தச்சன் மட்டுமின்றி,  அது அச்சன், அப்பன், அத்தன் எனறு மூன்று வடிவங்களிலும் விளங்குவதுதான். பொருள் மாறுபாடு இல்லை; இவை, போலி எனத்தகும். போல இருப்பது போலி; எழுத்துக்களில் மாற்றம் இருப்பினும் பொருளில் இல்லை.

இதே போன்ற தோற்றரவுகள் (அவதாரம்) எடுக்கும் இன்னொரு சொlல்   பித்தன். பித்தம் அதிகமானால் பைத்தியம் ஏற்படும் என்கின்றனர். பைம்மைத் தொடர்புடைய சொல் பைத்தியம். இதனை முன்னரே ஓர் இடுகையில் விளக்கினோம்.

அத்தன் அச்சன் ஆனது போல பித்தன் பிச்சன் ஆகவேண்டும். பித்தர்கள் அல்லது  பைத்தியக்காரர்கள் பிச்சையும் எடுப்பர். பிச்சாண்டி என்ற சொல் உள்ளது. பித்து > பித்தன்; பித்து> பிச்சு > பிச்சை. பித்தன் பெறும்
உணவு அல்லது பொருள். இவை அப்பன்> அச்சன் போன்ற திரிபுகள்.  வைத்து > வச்சு (பேச்சு)

குத்துதற்குப் பயன்படும் மரக்கோல் குச்சி என்பட்டது. குத்து> குத்து > குச்சு > குச்சி.  இது அத்தன் > அச்சன் போலும் திரிபுகள்.

ஆனால் பித்து> பித்தினி > பிச்சினி என்பதுமுண்டு. பிச்சினிக்காடு என்பது ஓர் ஊர்.   பித்து > பிச்சு>  பிக்கு > பிக்குணி என்பதும் காண்க.
பிக்கு:  புத்த பிக்கு.

நல்ல நிலைமை, குடும்பம் முதலிய துறந்து, அலைந்தவர்கள் பித்தர்கள்
என்று கருதப்பட்டனர் என்று தெரிகிறது. இவர்கள் பிச்சையும் புகுவர் .

பித்தர்கள், பைத்தியங்கள் வரிசையில் புத்த பிக்குகளும் பிக்குணிகளும்
கருதப்பட்டமை இச்சொற்களால் விளக்கமாகிறது,

பிசத்துதல் > பிதற்றுதல் .
பிச்சு = பித்து .

திரிபுகள்

ப > த  > ச
ச  > க  not language specific.