புதன், 13 ஜூலை, 2016

ஔஷதம் ஒளடதம்


இச்சொல் எப்படி அமைந்தது என்பதை ஆய்வோம்.

சில பொருள்களை இடித்துத் தூளாக்கி மருந்து செய்வார்கள். இவற்றைச் சூரணம் என்பர். சிலவற்றை  காய்ச்சி எடுப்பார்கள்.  இன்னும் சில புடம்போட்டுத் தயார் செய்யப்படும். இங்ஙனம் மருந்து செய்யப் பல வழிகளைக் கையாளுவதுண்டு.

தயார் செய்தும் சில சற்று இளகிய நிலையிலேயே இருக்கும். இவை உண்மையில் "இளகியம்" ஆகும். இச்சொல் திரிந்து லேகியம் ஆகிவிட்டதுடன், இளகியம் மறைந்துவிட்டது.

அவிழ்தல் என்பது இளகுதல்.  சொரிதல், மலருதல், விரிதல், உதிர்தல்,  நெகிழ்தல் என்ற பொருளுடைய வினைச்சொல்.

இதிலிருந்து  அவிழ்+ அது+ அம் =  அவிழதம் என்று அமைத்தனர்.
அமைத்தகாலை, இச்சொல இளகிய அல்லது நெகிழ்வாக இருந்த‌
மருந்துகளைக் குறித்தது. தூளாக இருந்தது  தூளம்> தூரம் > செந்தூரம் என்று குறிக்கப்பட்டது போல, இளகிய நிலை மருந்துகளும் அவிழதம், இளகியம் எனப்பட்டன.

இவற்றுள் இளகியம் லேகியம் ஆனதுபோல, அவிழதம்? அவுடதம் >
அவுஷதம் ஆகிவிட்டது.  இச்சொல்  இப்போது மருந்து என்ற பொதுப்பொருளில் குறிக்கப்படுகிறது.






உயிர்களிடம் அன்பு

விலங்கியல் தோட்டத்தில்
குரங்கிற்குத் தனியிடம்;
அரங்கொன்றில் அமர்ந்து
மரங்களிடை இலையுணவு.

குரங்கெனப் பிறந்தனவே;
வரங்கள்பல பெறுந்தகைமை
இருந்ததனால் உயர்ந்தனவே;
சிறந்தஇடம் நிரந்தரமே.

நீர்த்தேக்கம் அருகினிலே;
பார்த்தயரும் நல்லழகே'
கூர்த்தவிழிக் குட்டிகளால்
கூடிவரும் மகிழ்வெல்லை.

உயிர்களிடம் அன்புவைப்பாய்;
ஓங்கிவள ரும்வாழ்வே!
பயிர்கள்போல் பசுமைபெறும்
பைந்தமிழின் இனிமைவரும்.




திங்கள், 11 ஜூலை, 2016

விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை

மனிதன் உயர்வென் றவனே மதிப்பின்
இனிது மதுவாமோ இவ்வுலகில் தோழரே
நாய்பூனை சொன்னாலே நல்ல திலையேலோ 
காய்பழம் காணல் அரிது.  1

நாய்பூனை நல்லுரை தாரா நிலையாலே
வாய்திறந் தானே வழங்கிக்கொள் சான்றிதழைக் 
கூயுரைத்துக் கும்மாளம் கொட்டுகிறான் அங்கினிப்
போய்மறுக்க உள்ளார் எவர்.  2


விலங்குகள் சொல்லாத‌ வெற்றுரை கேட்டுக்
கலங்குதல் மற்றும் களித்தலும் வீணே
நிலங்கவர் நெஞ்சத்தான் நில்லாத் திருடன்
நலம்பிதற்றல் நாணுத் தரும்.  3

பொருள்:


1.  இனிது மதுவாமோ   -   இனிமையானதும்   அதுவாகுமா ?
    நல்ல திலையேலோ -   நல்லது  இல்லையேல்;    ஓ -  அசை .
    காய்பழம் காணல்  -  ஏற்கத்  தக்கது ,  தகாதது  வேறுபிரித்து  அறிதல்.

2   தாரா -  தராத .
      கூய்  -  கூவி . 

3     நலம்பிதற்றல் - தன்னைத் தான் புகzந்து கொள்ளல்.  
      நாணுத்தரும்  -  வெட்கத் தக்கது .