வெள்ளி, 17 ஜூன், 2016

வெள்ளைப் பெண்ணால் வந்த வேதனை

இன்று சங்ககாலப் புலவர் சத்திநாதனாரின் சிந்தனையூட்டும் ஒரு சிறு பாடலைக் குறுந்தொகை என்னும் நூலிலிருந்து பாடி இன்புறலாமே!

இந்தப் பாடல் கூறுவது ஆண்மை மிக்க ஓர் இளைஞனைப் பற்றியது. இவனொரு வெள்ளை நிறமுள்ள அழகிய பெண்ணைக் கண்டான். இவள் உயர்ந்த குடிப்பிறப்பு உடையவள் என்பது பாடலிலிருந்து போதருகின்றது.
அழகான இதழ்கள்; இளம்பிறை போலும் எயிறுகள். மயக்கும் இளமுறுவல்.
இத்தனையும் இன்னும் பல் கவின்களும் உடையாள் இவள்.

இவளை எதிர்கொண்டு நட்புற்று அணுக்கமானபின் இந்த இளைஞன் முன்போல் தெளிவாக இல்லை.  ஏதோ இவனைப் பற்றிக்கொண்டது போல‌
அதனால் இவன் தடுமாறித் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கவனித்து இவனைக் கேட்க, இவன் கூறினான்:  ஓரு வெள்ளைக் குட்டிப் பாம்பு என்னைக் கடித்துவிட்டது; அதனால் துன்பத்தில் வீழ்ந்துவிட்டேன் என்று,
பெண்ணைக் குட்டிப் பாம்பு என்று இவன் கூறியதனால்  இவள் ஒரு பதின்ம அகவைப் பெண் என்பது பெறப்படுகிறது.

இனிப் பாடலுக்கு வருவோம்.

தொடரும்

வெள்ளைப் பெண்ணால்  வந்த வேதனை   will continue

வியாழன், 16 ஜூன், 2016

திருலோக சந்தர் மறைவு .

திருலோக சந்தரவர் மறைந்து   விட்டார்
திரைகளிலே பெயர்கண்டு தெரிந்தோர் பல்லோர்
பரலோகம் படர்தலுக்கும் வயதும் உண்டோ
பார்ப்போருள் நான்நீஎன் றியார்க்கும் நன்றே
இருலோகம் கால்வைத்தும் இருக்கும் தன்மை
இதுபிழையா தென்பதுவே உளது காண்பீர்
தரவேணும் மரிநாள்மேல் தாவும் காறும்
தமிழுக்கோர் நலம்தன்னைச் செய்தார் என்பர்

காணொளியில் யாமறிந்தார் கருதும் காலை
கல்விகலை நலம்செய்தார் கணக்கில் நண்பர்
மாணுறவே ஆள்கண்டோர் உளரோ இல்லை
மடிக்கணினி தாளிகைக்குள் மண்டி நிற்பார்
வீணுறவே பூண்காலம் கழிந்தி டாமல்
விளைத்திட்டார் கலை யின்பம்  இன்னோர்  எல்லாம்;
சாணளவே பயனெனினும்  முழமாய்க் கொள்வோம்
சாவினையே மேவுறினோ வீழ்புன் கண்ணீர்.


மாணுறவே ஆள்கண்டோர் உளரோ -அதாவது  என் வட்டாரத்தில் இவரை நேராகக் கண்டோர் யாருமில்லை.
பூண்காலம்:  பூணும் காலம் . நாம் பொருந்தி வாழும் இக்காலம் .
அதாவது   நாம் காலத்தின் வாயில்  அகப்பட்டது   -  அகவை;   நாம் வயப்பட்ட  அல்லது  நமக்கு வைக்கப்பட்ட காலம் வயது.  அதன்பின் நாம் சென்றுவிடுவோம்.  காலம் நம்மை இப்போது அணிந்துகொண்டிருக்கிறது,  பூணுதல் -  அணிதல்.  அல்லது நாம் காலத்தை அணிந்துகொண்டிருக்கிறோம் . அதனால் நாம் வயது குறித்துக்கொள்கிறோம்.  இந்த   இரு கருத்தும் பொருந்துவது  "பூண் காலம் "  என்னும் தொடர்.

புன்கண்ணீர்  -  துன்பக் கண்ணீர் .

தலைப்பு: திருலோக சந்தர் மறைவு 





உலகெங்கும் தமிழ்

எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கின்றார் என்பதனை இணையத்தால்  உணர்ந்துகொண்டேன்;
பங்கிட்டே  பல்லரசும் ஓச்சுகின்ற கோல்வரைக்குள்
பதியாமற் கடந்து நின்றேன்;
தங்குற்றேம் ஓரிடத்தில் என்றபடி தவியாமல்
தமிழன்னை  தரணிபரவி
எங்குற்றும் மிளிர்கின்றாள் இதுவன்/றோ வளர்ச்சியிதை
எனைத்தானும் காத்தல்கடனே

கோல் வரை  :   செங்கோல் செலுத்தும் ஆட்சி எல்லை.
பதியாமல்  -   உள் அடங்கி  நின்றுவிடாமல்.
தங்குற்றேம்  -  தங்கிவிட்டோம் 
தரணி பரவி  =  உலகெங்கும் பரவி 
எங்குற்றும்   -  எங்கெங்கும் 
எனைத்தானும்  -  எப்படியாகிலும் .

உலகெங்கும்   தமிழ்