திங்கள், 13 ஜூன், 2016

MUTILATIONS IN WORD BUILDING


சிதைவிலாக்கம் அல்லது சொற்சிதைவு

பழம் என்பது மரத்தைச் சிதைத்துக் கிடைப்பதன்று .ஓரிலையாய்க்  கொம்பாய் உயர்மரமாய்ச் சிறியதோர் வண்காயாயாய்த்  தின்பழய்மாய்  வருவது அதுவாகும் .  கோழி உண்பவன்  அதைக் கொன்று தோல் கிழித்து வெட்டிப் பலவாறு சிதைத்து மசாலை தடவி மெதுவாக்கி வேவித்துப் பின் தானே தின்று மகிழ்கிறான் .  ஒன்று இயற்கையை ஓட்டிச் செல்கிறது.  மற்றொன்று  இயற்கையை உருக்குலைத்துப் பின் வருகிறது.

சொற்களிலும் இவ்வாறு பல வழிகள் கையாளப்படுகின்றன .

இறைவன்   -  இது ஒரு முழுச் சொல்.  புழக்கத்தில் உள்ளது.  இறைவர் -  உயர்வுப் பன்மை .  இறைவர்  >  இஷ்வர் >  ஈஷ்வர் >  ஈஸ்வர் ,  இந்த உயர்வுப் பன்மையில் ஒரு ஒருமை ஆண்பால் விகுதி சேர்த்தால்  ஈஸ்வரன்,  என்னவாயிற்று?  ஒரு சொற்சிதைவிலிருந்து ஒரு புதிய சொல் அமைகிறது.
அல்லது அமைக்கப்படுகின்றது.

எரிமலை வெடித்துத் தீப்பிழம்பைக் கக்கி  எங்கும்  பரப்பிப் பின் குளிர்ந்து இறுகி வளமான  நிலம் ஏற்பட்டு மரஞ்  செடி கொடிகள் வளர்ந்து  மலர்கள் பூத்து அதை அழகான பெண்ணொருத்தி கொய்து தலையில் சூடிக்கொள்வதில்லையா ?  அதவாது சிதைவுகளும் நாளடைவில் இதந்தரும் மயக்கும் வண்ணப் பூக்கள் ஆகிவிடுகின்றன.

ஈஸ்வர் என்பதும் அப்படி ஒரு வண்ணமலராகி  அதனோடு வாசத் தென்றல் வந்து குலாவலாமே !

இருக்கலாம்  இருக்கலாம்   ஆனதுதான் எது   ஆகாததுதான் எது ?

வன்சிதைவும் ஒரு  நன்பதமே.

ஐம்பதின் மேற் கொன்றவன் -- பைத்திய உலகமே

தமிழ் எழுதிகள் ஏன் இன்று தத்தளிக்கின்றன என்று  தெரியவில்லை. எழுத்துக்கள் வரவில்லை ஆகையினால் வேறு உருமாற்றிகளைக் கைக்கொள்ள வேண்டியதாயிற்று,

பைத்தியம் என்ற சொல்லினை மீண்டும் ஆய்ந்து அதைப்பற்றிப் பேசலாம் என்று நினைத்தேன். விரிவாக்காமல், சுருக்கமாகவே எழுதிவிடுகிறேன்.

பண்டைத் தமிழர் பைம்மையே மனக்கோளாற்றுக்குக்  ஒரு காரணமாய் இருக்கலாம் என்று நினைத்தனர்.  பைம்மையாவது முதிர்ச்சி இன்மை.
பைம்மையும் பசுமையும் தொடர்புடைய சொற்கள். பைந்தமிழ் என்றால்
பசுமையான தமிழ். அதாவது என்றும் இளமையான தமிழ்.

இப்போது பைத்தியம் என்ற சொல்லைக் காண்போம்.


பை  >  பைத்து.

து என்பது உடையது என்று பொருள்.  குறியெதிர்ப்பை நீர துடைத்து
என்ற குறள் தொடரில் உடைத்து என்பதன் பொருள்   உடையது என்பதுபோல‌
பைத்து என்பது முதிர்ச்சியின்மை உடையது என்று பொருள்.

இயம் என்பது பெரும்பாலும் இயங்குதல் குறிக்கும் ஒரு விகுதி அல்லது பின்னொட்டு. இதைப் பின் தனியாக ஆய்வு செய்யலாம்.
இப்போது பின்னொட்டு என்று மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்.  தொல் காப்பு இயம் என்பதில் இயம் ஒரு பின்னொட்டு ஆவது காண்க,  தொன்மை காக்க இயங்குவது  தொல்காப்பிய இலக்கணம் .

ஆகவே பைத்தியம் என்பது முதிர்ச்சியின்மையினால் வரும் ஒரு நோய் என்று பண்டையர் கருதினர்.  அவர்கள் கருதியது மனமுதிர்ச்சி
இன்மை அல்லது மனப்பைம்மை. பையன் என்ற சொல்லும் பைம்மைக் கருத்தே. ஆனால் அகவை முதிர்ச்சி இன்மை குறித்தது.

அமெரிக்காவில் ஐம்பதின் மேற்பட்டோரைக் கொன்றவன் அறிவு முதிர்ச்சி இல்லாதவன்.  பைத்தியக்காரனோ அறியோம்,

அறிவு முதிர்வின்மையின்  அலைப்பட்ட இவ்வுலகு  பைம்மைத்தாய் இயங்கும்  பைத்திய உலகமே  அன்றோ.....?











ஞாயிறு, 12 ஜூன், 2016

உமா.



ஏமமும் ஓம்புதலும்.


ஏமம் என்ற சொல் தொல்காப்பியனார் காலத்தில் ஏம் என்று இருந்தது. சிறு சொல்லான இது பின் சற்று நீண்டது. அம் விகுதிபெற்று ஏமம் என்று வந்தது. காமம் என்ற சொல்லும் முன் காம் என்றுதானிருந்தது. இருக்கவே, உறுதல் என்ற துணைவினையைக் கொண்டு ஏமொடும் காமொடும் இணைக்க, அம் விகுதி தேவைப்படாது. ஏன் தேவைப்படாது? ஆக்ககாலத்திலேயே, அதாவது ஆதியிலேயே அங்கு அம் இல்லையன்றோ? எனவே ஏமமுறுதல் காமமுறுதல் என்று சொற்களை நீட்டிவிடாமல் ஏமுறுதல், காமுறுதல் என்று எழுதினார்கள், பாடினார்கள். " கற்றரைக் கற்றாரே காமுறுவர்" என்றார் நம் பண்டை மூதாட்டி ஒளவையும். இற்றைப் புனைவாயின் ஏமமுறுதல் காமமுறுதல் என்றுதான் இருக்கும்.   இவற்றின் வடிவிளிருந்தம் பழமையா புதுமையா என்று  ஒருவாறு தீர்மானிக்கலாம்.

சில மொழிகளில் சொற்கள் வரைகடந்து நீண்டுவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இவற்றுள் சீனமொழி முன்னிலை பெற்றுத் திகழ்கின்றது. தாங் என்று வருவது, தமிழிற்போல் தாங்கு என்று கு விகுதிபெற்று நீளாமல் தாங் என்றே வருமாறு வைத்துக்கொண்டார்கள். மலாய் மொழியில் விகுதிகள் குறைவு,
பெர்காத்தாஆன் என்பதிற்போல, ஒன்றிரண்டு காணலாம். பெரிதும் முன்னொட்டுக்களே நிலைநின்றன. இதில் டச்சுமொழியின் ஆதிக்கமும் காணப்பெறும்.

அடிச்சொற்களின் திரிபு அறிய வேண்டுமென்றால், முன்னொட்டு ‍ பின்னொட்டுக்களை நீக்கிப் பார்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக,

ஏம் என்பது ஓம் என்று திரியும். இதனை எப்படி மெய்ப்பிப்பது?

ஏம் = காவல், பாதுகாப்பு.
ஓம் = காத்தல், பாதுகாத்தல்.

(ஓம் ஓம் என்று மந்திரங்கள் ஓதுதலிலும்  பாதுகாப்பு!  பாதுகாப்பு!   என்றே பொருள் ).

ஏம் > ஏமம்

ஓம் > ஓம்பு > ஓம்புதல்.

அடிச்சொற்களாய் இருக்கையில் ஒன்றுக்கொன்று எதுகைகள் போல நின்றாலும் விகுதிகள் பெற்றபின் அவை வெவ்வேறு திசைகளில்
சென்றவையாகிவிட்டன.

அம் > அம்மா.
உம் > உம்மா > உமா.


அம்மா ( தாய் என்பது ) சில மொழிகளில், கிளைமொழிகளில் உம்மா என்று வழங்கினும், உமா என்று வந்ததுபோல் அமா என்ற வடிவம் எழவில்லை என்று தெரிகிறது. எங்காவது ஒரு மூலையில் ஒரு வகுப்பாரிடை அமா இருக்கலாம். அல்லது விளியில், அன்றிக் கவிதையில் அப்படிச் சுருங்கலாம். அப்படி ஒலிக்குங்கால், அதைக் குறித்துக்கொள்ளுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்