வெள்ளி, 27 மே, 2016

வாடகை வரும்படியும் முகவர்களும்

மலேசியாவில் வீடுகள் வாங்கிப் பலர்  வாடகைக்கு விடுகிறார்கள். இதைப் பற்றிக் கொஞ்சம் உரையாடுவோம்,

இப்போது புதிய மற்றும் பழைய வீடுகள் மிகப்பல வாங்குவதற்குக் கிடைக்கின்றன .  முழுமையான வீட்டின் விலைக்கான தொகையையும் கட்டி வீட்டை வாங்கலாம்,   ஆனால் ஒரு பெருந்தொகை  அதில் போய் அகப்பட்டுக் கொள்ளும்,  அதை விற்று மீண்டும் முதலாக்கும் வரை இந்த நிலை தொடரும்,  இப்படிச் செயல்பட இயலுமா என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து நீங்கள் செய்யத் தக்கது  வீட்டைத் தவணை முறையில் வாங்கலாம், அப்படி வாங்கினால் மாதாமாதம் தவணையைச் செலுத்தவேண்டும்.  உங்கள் மாத வருமானத்திலிருந்து  இதைச் செலுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும்   இதில் கொஞ்சம்  இடிக்கிறது  என்றால் அல்லது வேறு காரணங்கள் இருந்தால்  வாங்கின வீட்டை வாடகைக்கு  விட்டுவிடலாம்.

இங்குதான் பிரச்சினை தோன்றுகிறது.  பிற -  மற்ற,  சினை = உறுப்பு  அல்லது  காரணங்கள்.  பிற என்பது பின் பிர  என்று  மாறிவிட்டது. 

வீட்டில் குடியிருக்கும் கூட்டம் வீட்டைச் சின்னாபின்ன மாக்கிவிடுகிறது.   வீட்டுக் கம்பிகளைப் பேர்த்து எடுத்து விற்றுவிடுகிறார்கள்.  தரை ஓடுகளை உடைத்துவிடுகிறார்கள் ,  மின் கம்பிகளைச் சுவருக்குள் இருந்து வெளியில் இழுத்துத்  தொங்க விடுகிறார்கள்.  பின் வேலிகளை அகற்றிவிடுகிறார்கள்.   நீங்கள் நினைக்காதவை எல்லாம் செய்து விடுவார்கள்.  ஆக மொத்தத்தில்  வீட்டை வாங்கியதற்குத் தண்டனை கிடைத்தது போலத்தான்,  வந்த வாடகை  பத்தாயிரம் என்றால் இப்போது வீட்டைப் புதுப்பிக்க  ஓர் இலட்சம் செலவு செய்ய வேண்டும். புதிய வீடு ஓட்டை வீடாகி விடுகிறது . கதவுகளில் ஒரு  புட்டுக் கூட உடைபடாமல் இருக்காது.  சாவியை எங்கேயோ விட்டுவிட்டேனே  கதவை உடை.கண்ணாடியை  நொறுக்கி உள்ளே போ என்றபடி செயல் படுவர்/

மூன்று மாதமோ நான்கு மாதமோ வாடகைப் பாக்கி வைத்துவிட்டு ஓடிவிடுவார்கள்.  வீட்டின் சாவி உங்களிடம் இருந்தால் மீண்டும் உள்ளே புக அது பயன்படலாம்.  அவர்களை மேற்பார்ப்பது உங்கள் 24 மணி நேர வேலையாய் இருந்தால்  ஒருவேளை தப்பிக்கலாம்.  ஒரே தேதியில் வாடகை  வந்து சேராது.  இடையில் ஓரிரு மாதங்கள் இடைவெளியை ஏற்படுத்துவார்கள். 

மகிழுந்துகள் வைத்திருப்பார்கள். புதிதாக வாங்கி ஓட்டிவிட்டு  அதற்கும் காசு கட்டாமல் அந்த வண்டி நிறுவனம் வந்து இழுத்துக் கொண்டுபோய்விட்டால் இன்னொன்று  வாங்குவர் . அப்புறம் அதற்கும் அதே கதிதான்.

அப்புறம் முகவர்களைப் பற்றிப் பார்க்கலாம்.






வியாழன், 26 மே, 2016

Solomon Tamil சாலமன் > சொலமன் ?

எபிரேய மொழியில்  ஷெலோமோ என்றும்  ஆங்கிலத்தில் சொலமன்  என்றும்  அரபியில் சுலைமான் என்றும் வழங்கும் பெயரோ மொழிக்கு மொழி பலவேறு வடிவங்களில் வந்து முன்னிற்கிறது.  இந்த அரசன் மிக்கப் புகழ்ப்  பெற்று காலங் கடந்து மக்கள் மனத்துள் நிற்பவன். பெரிய அறிவாளி என்று புகழப் பெற்றவன்.  அவனைத்  திறனறிய விரும்பிய ஷீபா  அரசி  ஒரு காகிதப் பூச்செண்டையும் மணமலர்ச்  செண்டையும் காட்டி வினவிய காலை, சாலமன் சாளரங்களைத்  திறக்கச் செய்து தேனீக்களை புகச் செய்து  அவைகள் மொய்த்த செண்டே  உண்மையான மலர்ச் செண்டு  என அறிவுறுத்தினான் என்பர்.  மதி நுட்பத்திற்குச் சாலமன் என்பது  பண்டையர் முடிபாய்  இருந்து வந்துள்ளது.

ஷீபா அரசி  இவனுக்கு  ஒரு குழந்தை  ஈன்றாள் என்கிற கதையும் உண்டு. இவன் பல வெளி  நாட்டு மங்கையரை மோகங் கொண்டு மணந்து இல்லறம் நடாத்தினான்  என்ப/

பல மொழிகளையும் செவி மடுக்கும்  பேறு பெற்றிருந்தான் என்பதற்காகவே இதையெல்லாம்  கதைக்க வேண்டியுள்ளது.

மத்தியக் கிழக்குச் சொற்களிற் பல,  கிரேக்கமொழி வாயிலாகவே  நம்மை வந்தடைகின்றன . இயேசு என்பது  ஜீசஸ்  ஆனதும் கிரேக்கம் > இலத்தீன் வழி ஒழுகியதே ஆம். இதுபோலவே  சொலமன்  என்பது  கிரேக்க  நெய்யில் வாட்டி எடுத்த பதார்த்தம்  ( பதம் )/

சொலமனின் ஆயிரம் மனைவியரில் / வைப்பாட்டியரில் பிறமொழியார்  எத்துணை ?

எப்ரேயத்தில் பிறமொழிச் சொற்கள் கலவாமை  அருமையே.

சொலமன் என்றால்  அமைதியாளன் என்று பொருள் கூறுவர்.

சாலச் சிறந்தவன் இவன் .  சால என்பது தமிழில் வினை எச்சம்.  ஆகவே சாலும் மன்   -  சான்றாண்மை  உடைய மன்னன் .  சால்பு உடையவன்  என்று பொருள்.  பொறுமை உடைமை சால்புக்கு உள்ளீடு .

சாலுமன் >  சாலமன் > சொலமன் .

இம்மன்னன் பெயரின் பல்வேறு மொழித் திரிபுகளையும் இங்கு பட்டியலிட வில்லை.

பிரமனும்  பிரஹாமும் ( ஆப்ரஹாமும் )  தொடர்புடையன என்று  ஆபி டியூபா  கூறச் செவிபடுத்த பயனுடைய நாம்  சாலமன் சொலமன்  என்பவை
சால என்ற தமிழ்த் துண்டுச் சொல்லுடன் தொடர்புடைத்து என்றிசைப்பதில்  வழு ஏதும் வந்துவிடப்போவதில்லை .

மோன் என்பதும் மகன் என்பதன் திரிபு  எனற்பாலது   கருதத் தக்கதே.

இயேசு பிறந்த ஞான்று  மூன்று கீழை நாட்டரசர் சென்று கண்டனர்.  அவர் இன்றையப் பாக்கிஸ்தானில் அடக்கமாகி உள்ளார்  என்ற  செய்திகளும்
தொடர்பு தரும் குறிப்புகளாம்.



 .  

மிராசு . : Arabic word?

மிராசு  என்ற சொல் தமிழ் நாட்டில் வழக்கிலிருக்கிறது,  இந்தச் சொல்லைச் சங்க இலக்கியங்களில் காணமுடியவில்லை.  இது  ஒரு உருதுச் சொல் என்று கொள்ளப்படுவது.

உருது என்பது இந்திபோலப் புதிய இக்கால மொழி.  அதன் சொற்கள் பழைய மொழிகளிலிருந்து திரிந்திருக்க வேண்டும்,  அல்லது  நெருங்கிய தொடர்புடைய அரபி முதலிய மொழிகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.  அல்லது  இம்மொழியில்  புதுப் புனைவுகளாக  இருக்கவேண்டும்.

பிற மொழிச் சொற்கள் வந்து வழங்குவது  எல்லா மொழிகளிலும் காணப்படுவது என்பது   ஓட்டோ ஜெஸ்பெர்சன் முதலிய மொழி நூலறிஞர்களின்  கருத்தாகும்.

தமிழைப் போலவே வேடமிட்டுவரும் ஒரு பிறமொழிச் சொல்லை விலக்கிப்
பேச்சு எழுத்து முதலியவற்றைக் கையாளுவதென்பது  பேசுவோன்  மற்றும் எழுதுவோனுக்கும்  கடினமே.   எல்லோரும் சொல் ஆய்வு செய்வதற்கு இடமும் பொருளும் பிறவும் துணை நிற்பதில்லை.

இவற்றை மனத்தில் இருத்திக்கொண்டு  இங்கு தொடர்வோம் .

அரசு என்ற சொல் இலத்தீன் முதலிய மொழிகளிலும் சென்று வழங்கி உள்ளது.  Rex  Regina   முதலியவை காண்க. தமிழுக்கும்  இந்த மேலை மொழிகளுக்கும் தொடர்பே இல்லாது இருந்திருந்தால்  அரிசி  இஞ்சி  முதலிய சொற்கள்  அங்கு சென்றிருக்க மாட்டா.   தோகை என்ற சொல்லும்
எபிரேய மொழியில் இடம்பெற்றிருக்காது.  சுமேரியா முதலிய இடங்களில் தமிழர் வாழ்ந்தனர் என்பதையும் மனத்தில் இருத்துக.

மீ ​+  அரசு  =  மீ + ராசு  =  மிராசு   ஆகும்.  முதல் எழுத்துக் குறுகிற்று,  அரசு என்ற சொல்  வழக்கம்போல் தலை இழந்தது. இத்தகு  திரிபுகள் பெருவரவு ஆகும் .

மேலாண்மை என்பது பொருள்.  பின் பரம்பரை  நிலத்து  மேலாண்மை குறித்தது.  மீ -  மேல்.   அரசு =  ஆட்சி .

இது :    தமிழ் >  அரபி  >  உருது>  தமிழ்   என்றோ,   தமிழ் > உருது >  தமிழ்   என்றோ   இதன்  செல்பாதை  அமைந்திருக்கலாம்.  இதுவே இனி  நுணுகி  ஆய்தற்குரியது    ஆய்வாளர்கள் இது தொடர்க,,  ஆர்வமிருப்பின்.