சனி, 7 மே, 2016

முகுந்தன்

பரந்தாமன் என்ற சொல்லைக் கேட்டுப் பரமும் தாமுமாய்ப் ப‌ற்றிலாழ்ந்து பரவயப்பட்டு நிற்றற் கருத்தின் உட்பொதிவை அறிந்துகொண்ட  நாம்,  அடுத்து முகுந்தன் என்ற சொல்லின் முன்வரவையும் உணர்தல் முக்கியமே.

இச்சொல்லின் பின்பாதியில் உள்ளது குந்தன் என்பதாகும். அன் விகுதி தென்மொழிகளுக்குச் சிறப்புரிமை எனினும், வடக்கில் அன் விகுதி இலது எனினும்,  அதையும் சேர்த்தே கவனிப்பதில் வரும் குழப்பம் யாதுமில்லை.

கண்ணன் பற்றரின் முன் இருப்பவன். அதனாலேதான் அவன் கடவுள் என்று அறியப்பட்டான்.  கடவுள் எம்மொழியினரிடத்தும்
முன் அமரும், முன் நிற்கும், முன் விளங்கும் முன்னவன். குந்துதல் இருத்தல்.  எனவே குந்து+ அன் =  குந்தன் ஆகிறான்.
அன் விகுதி இல்லா மொழியில் குந்தா என்று நிறுத்தப்படும். இதில்
ஒரு வியப்புமில்லை.

முன் என்ற சொல், மு என்று கடைக்குறையும்.  முன் என்பதற்கு முந்திய  அடிச்சொல் முல் என்பது.  முலை என்ற சொல்லில் முல்+ஐ என்பதில் அது உள்ளது.  முல்> முன்> மு,  (ல் >ன்  திரிபு).

எனவெ

மு + குந்து + அன் =  குகுந்தன். (முன்னவன்).
மு + குந்து + ஆ =  முகுந்தா. (அன் விகுதி வடதிசை மக்களிடம்
இல்லை).


எனவே  முகுந்தன் , கடவுள் , முன்னிருப்போன் என்ற சொற்பொருள் பெறப்பட்டது.


பரம் -- கடவுள்---பரந்தாமன்


பரந்தாமன் என்ற பெயர் மிக்க அழகாய் அமைந்த பெயர்  தமிழ்மொழியில் இதற்குக் கிடைக்கும் பொருளை நாம் கவனித்து மகிழ்வோம், இதனுடன் ஒருபோன்மை உடைய பரந்தாப என்ற சொல்லை நாம் சற்று ஒதுக்கிவைப்பது நன்று.  அது தனியாய் கவனிக்கப்படவேண்டியதாகும்,  பொருள்வேறுபாடு ஒரு காரணம் ஆகும்,



பரம் என்ற சொல் கடவுள் என்று பொருள்படுவது. இதன் விரிவு பரம்பொருள் என்பது.  பரத்தல் எனில் எங்கும் விரிந்து பரந்து இருத்தல் அல்லது பரவி நிற்றல்.  பரவை என்றொரு சொல் உண்டு,  பரந்ததாகிய கடல் பரவை


கவனிக்கவேண்டியது:
பறவை -  பறந்து திரிவன; குருவி முதலியவை ,
பரவை -  ?பரந்த நீர்ப்பரப்பு.?  அதாவது கடல்.


பரம் என்ற சொல் கடவுள்   எனப் பொருள் படும், கடல் நீல நிறமென்பது நீங்கள் அறிந்தது, பரந்தாமனும் நீலனாக உருவகம் செய்யப்படுதலுண்டு,

விண்ணு (விண் )  தோற்றம் தந்த விட்டுணு ஆகிய விஷ்ணுவும்  நீல நிறமே.
,
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍சிவமும் தானும்  இறைவனும்  ஆன்மாவும் என்று சிவஞான போதம் விளக்குகிறது.  இதை அவனும் தானும் என்ற சொற்களால்
விரித்துரைக்கிறது.

நாராயணன் அல்லது விட்ணு  பக்தர் அல்லது பற்றர் குழாம் உடையோன் .அவர்கள்  பாடுவது கேட்டு மனமகிழ்பவன். ஆகவே சிவமும் தானும் என்பதுபோல  பரமும் தாமும் என்ற கருத்துத் தோன்றி வளர்ந்தது.
பரம் ‍ கடவுள். பெரும்பாலும் விட்டுணு. தாம் என்ற பன்மைத் தற்சுட்டு  பற்றர்குழாமைக் குறிக்கிறது.  அவன் புகழ் பாடிப் பின் செல்வோர்.
தாம் என்ற குழுவுடன் மனமகிழும் பரம்,  பரந்தாமன்
ஆகிறான்.  (பரம்+தாம்+அன்). ஆதாவது தாம் என்று பின்செல்லும் அவர்களைப் பரமன் உடையவன். ஆகவே பரந்தாமன் ஆகிறான்.

பரந்தாப என்பது வேறு. பின் விளக்குவோம்.

சி போதம் பா 10. முன்பார்வை.

இது சிவஞான போதத்தின் 10‍வது பாடல்.

அவன் தானே ஆகிய அந் நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க‌
மல மாயை தன்னொடு வல்வினை இன்றே

என்பது பாடல்.

அவன் தான்  என்பன விளக்கம்.

இப்பாடலின் அவன் என்றது இறைவனை.  அவன் ஒருவனே. அவன்
இறைவன்.  ஒருமை ஆதலின் ஒருமைக்குரிய அன் விகுதி கொண்டு
கூறப்படுகிறது.  அஃதன்றி  அவன் ஆணுமில்லை; பெண்ணுமில்லை. அவனுக்குப் பால்  (ஆண்/ பெண் வேறுபாடு) இலது. அன் விகுதி வரக்காரணம் மொழிமரபு.


தான் எனறு அடுத்து ஓதியது  ஆன்மாவை. மனிதர் பலர் இருப்பினும் ஒன்றின் மேற்பட்ட பல இருப்பினும்,  ஒவ்வோர் ஆன்மாவும் இறையுடன் தனித்தனியே கவரப்படுவது ஆகும்.  ஒவ்வோர் ஆணியையும் காந்தம் தனித்தனி கவர்வது போன்றதே இது. தனி என்ற ஒரு பிரிவு தவிர, இறைக்கும் ஆன்மாவுக்கும்  வேறு பிரிவினை இல்லை. வேறு அடையாளங்களும் இல்லை.
அவன் என்னும் இறைக்கு வேறு அடையாளம் இலதுபோல, தான் என்னும் ஆன்மாவுக்கும் வேறு அடையாளமோ குறிப்போ இலது. வேறு அடையாளங்கள் எவையானாலும் அவை இந்த அவன்‍  தான்
உறவில் கண்டுகொள்ளப்படாதவை.  எனவே சிவ ஞானத்தில் அவனும் தானுமே.  ஞானம் என்பதில் அவன் ‍ ஞான் ( அவன், தான்). உண்மையில் அவன் என்பது அன்,  இது ஆண்பாலில் விகுதியாய் வரும்.  இதன் பாலியன்மை மாறவே, அன் எனற்பாலது  அம் என்பது ஆகும்.  ஆகவே ஞான் + அம்  =  ஞானம் ஆகின்றது. உலகிலும் அப்பாலும் ஞானும் அம்மும் ( அவனும்)  அன்றி வேறில்லை. இதுவே உண்மை.

சி போதம் பா 10. முன்பார்வை.-  அடுத்த இடுகையில் தொடரும்.