திங்கள், 18 ஏப்ரல், 2016

ம் ‍‍‍ன் திரிபு சீனத்திலும்

சீன மொழியிலும் மகர ஒற்றீறு  னகர ஒற்றீறாதல்  உண்டு.
ஒரு கிளைமொழியிலிருந்து தலைமொழிக்கு மாறுகையில் இது
நிகழும்.

சாய் ஸிம்  .  சாய் க்ஸின்

என்பது நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

தமிழிலும்  அறம் >  அறன்;   திறம்> திறன் என வருதல்
காணலாம்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து  (குறள்)

உரம் >  உரன்.

முன் வேறு எடுத்துக்காட்டுகள் தந்துள்ளோம்.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

உயிர் உயிர்மெய் திரிபு

உயிரெழுத்துக்களில் தொடங்கிய சொற்கள் நாளடைவில் உயிர்மெய் எழுத்துத் தொடக்கமாக மாறுவது தமிழில் காணப்படும் ஒரு வளர்ச்சி என்றே சொல்லலாம். சில சமயங்களில் பொருளில் வளர்ச்சி காணப்படும்.

எடுத்துக்காட்டாக, கலகம் என்ற சொல்.  கலகத்தில் பலர்  நெருங்கி வந்து அடிதடியில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இவர்கள் இப்படிக் கலக்காமல் தங்கள் தங்கள்  இடத்திலேயே இருந்துவிட்டால்  கலகமே இருக்காது என்று கண்டுகொண்ட ஊர்க்காவல் அறிஞர்கள், ஊரடங்கு என்ற ஒரு நடபடிக்கையை உண்டாக்கினர்.  ஆகவே கலகத்துக்குக் காரணம் கலத்தலே. அடி என்ற சொல்லிலும்,அடுத்துச்சென்றாலே அடிக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ளலாம். அடு> அடி. இதுபோலவே
அண்டையில் சென்றாலே ( நெருங்கினாலே)  சண்டையைப் போடமுடியும்.
இவற்றிலிருந்து, சொல்லில் சிறு மாறுதலும், அதற்கேற்பப் பொருளில் சிறு வளர்ச்சியும் ஏற்பாடுதல் காணலாம்,

அண்டை >  சண்டை.

அகர வருக்கச் சொற்கள் சகர வருக்கமாக மாறுவது மட்டுமின்றி,
வேறு உயிர்மெய்களாகவும் மாறும்.

 எடுத்துக்காட்டு:

உச்சி > முச்சி.

உச்சி என்பது முன் உச்சியை (அதாவது உச்சியில் முன் பக்கத்தைக்)
குறிக்க எழுந்த சொல்லாகலாம்.  முன் உச்சி ? முச்சி.  ஓர் ஒற்றும் உகரமும் கெட்டன. தேவையற்ற விரிவுகள் ஒழியும். அல்லது உச்சி என்னும் சொல்லின்முன் உள்ள உகரத்தில் ஓர் மகர ஒற்று ஏறிற்று எனினும் அமையும்.



சிவஞான போதத்தின் 9ம் பாடல்

ஊனக் கண் பாசம் உணராப்  பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத் துனை  தேர்த்து;எனப் பாசம் ஒருவ
தண்ணிழலாம் பதி; விதி எண்ணும் அஞ்செழுத்தே.

இது சிவஞான போதத்தின் ஒன்பதாம் பாடல்.

இதன் பொருளைச்  சுருக்கமாக நோக்குவோம்.

ஊனக் கண் = குறையுடையன வாகிய விழிகள் ;

பாசம்  = சடப் பொருள்களை உண்மையென்று உணரும் அறிவு ;

பதியை உணரா =  இவற்றால்  சிவத்தை அறிய இயலாது.

ஞானக் கண்ணினில் சிந்தை நாடி  -  ஞானக் கண்களால் மனத்தை நிலை  நிறுத்தி உணர்ந்து;

உராத்துனை தேர்த்து  = விரைந்து செலுத்தப்படும்  தேரின் தன்மையது

எனப் பாசம் ஒருவ -   என்று பிறழ்வுணர்வினை  விலக்க


விதி எண்ணும் அஞ்செழுத்தே.  =   உறுதி செய்யப்பட்டபடி ஐந்தெழுத்தைச்
சிந்திக்க


தண்ணிழலாம் பதி  -  சிவத்தை அறியலாகும். அருள் பெறலாம்,

ஊனக் கண்களோ  சடப் பொருள்களை அன்றிப் பிற அறிய மாட்டா;  பாச அறிவோ எனின்  நிலை அற்றவற்றை நிலையானவை என்று பிறழ உணரும்;
இவை இரண்டாலும் பயனில்லை.   இவை விரைந்து செல்லும் தேர் போன்ற  தன்மையை நம்முள் உய்ப்பவை;    இவற்றை விலக்கி  பஞ்சாட்சரத்தைக்
கைக்கொள்ளப் , பதியாகிய சிவத்தின் இன்குளிர் அருள் கிட்டுவவதாகும்.

விரைந்து செல்லும் தேரினால் யாருக்கும் பயனில்லை.  அதனில் அமைவுற்ற சிலையைக் கையெடுத்துக் கும்பிடக் கூடப் பத்தனுக்கு  (இறைப்பற்றாளனுக்கு )  முடிவதில்லை. அத்தகைய தேரினைப் பேய்த்தேர்  என்றனர்.

இவற்றைப் பின் விரித்துணர்வோம்,

Previous post on this subject went missing owing to some software error, This was rewritten.