திங்கள், 4 ஏப்ரல், 2016

எலும்புடைந்த பாம்புக்கும் ............

எலும்புடைந்த பாம்புக்கும் இரக்கம் காட்டி
எடுத்ததனை மருத்துவர்பால் கொண்டு சென்று
வெறும்பார்வை செய்யாமல் அறுவை ஆற்றி
வேதனையைக் குறைத்திட்டார் விதறல் நீங்க!
அரும்பணியைச் செய்திட்டார் அனந்தல் இன்றி!
அனையவர்க்குப் புகழாரம் சூட்டு கின்றோம்.
பெரும்பாரில் இடருற்ற  உயிர்கள் யாவும்
பிணிநீங்க வலி நீங்க முயல்க நன்றே.
-------சிவமாலா 


 செய்தி
http://www.dinamani.com/tamilnadu/2016/04/02/உயிருக்குப்-போராடிய-பாம்பு/article3358533.ece


 தமிழ் முரசு 3.4.2016 பக்.5

சிவஞா, போ. 8: உவமை நயம்.

ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த விட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.   சி  போ . 8

 சிவஞான போத ஆசிரியர், ஐம்புலன்களையும் வேடர்களுடன் ஒப்பிடுகிறார். நாவிற் புலால் சுவை நுகர்வான் வேண்டி, காட்டு விலங்குகளை ஒளிந்திருந்து கண்ணி வைத்தோ பொறிகளைப்  பொருத்தியோ பிடித்து அடித்து அறுத்து நெருப்பில் வாட்டியும் கறிசமைத்தும் உண்டு மகிழ்ந்து கூத்தாடுபவர்கள் இந்த வேடர்கள்.

மா மிசையக் கிட்டாத ஒவ்வொரு நாளையும் வழுக்கினுள் வைத்து வருந்துவதுடன் விலங்குகளைச் சிக்குவிக்க மிகுந்த பெருமுயற்சியும் மேற்கொள்வர்.  மா=விலங்கு; மிசைதல்: உண்ணுதல். அவர்களின் மனைவிமாரும் குழந்தைகளும் விலங்குணவை வேண்டிக்கிடப்பர்.

நம் ஐம்புலன்களும் இங்ஙனமே நுகர்வினைத் தேடி அலைந்து கிட்டின போதெல்லாம் முழுவதும் அதிலாழ்ந்து  இறைவனை மற‌ந்து
வாழ் நாளை வீணாளாக்கிவிடுகின்றன .

ஐபுலன்களையும் வேடரென்றது எத்துணைப் பொருத்தம் காண்பீர்!

வேடன் விலங்கு கிட்டும்வரை தன்னை மறைத்துக்கொள்கிறான்.
ஐம்புலன்களும் இத்தன்மையையே வெளிப்படுத்துகின்றன. சிலர் புலனுணர்வு இன்பம் பெற எப்படியெல்லாம் தம்மை மறைத்துக்கொள்கின்றனர். கிட்டினகாலை முழுமையாகப் புகுந்துவிடுகின்றனர்.

ஆசிரியரின் கவித்திறம் பெரிதும் இன்புறற்பாலதே.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி.........

உறுதல் என்னும் புலனுணர்ச்சி,  தோலுணர்ச்சியையே சிறப்பாகக் குறிப்பது. எனினும் நாவுடன் உண்பன உறும்போது,  உரசும்போது, படும்போதுதான் நாவும் பொருளின் சுவையை அறிந்துகொள்கிறது. நாவினை அண்டிவராத பொருளை அறிதல் யாங்ஙனம்? எனவே உறுதல் என்ற உணார்ச்சி, நாவில் உறுதல், மூக்கில் உறுதல், செவியில் உறுதல், கண்ணில் உறுதல் என்று  பல்வேறு வகைப்படும். கண்ணுறு, செவியுறு என்ற சொல்லாட்சிகளும் உண்டே!

நாவுறுதலே உறு > உறுசி எனப்பட்டது.

இது பின் உருசி எனத் திரிந்து, அதன்பிறகு தலையிழந்து ருசி என்றும் ஆயிற்று.

ருசியில் றுகரம் ருகரம் ஆனதன்றி வேறு திரிபுகள் யாதுமில்லை.

பொருளும் தெளிவாகவே உள்ளது. சி விகுதி .