புதன், 23 மார்ச், 2016

வச்சிர. . வஜ்ஜிர.

வல் என்ற  அடிச்சொல் பல்  என்று திரியும்.   இந்தப் பல் வேறு, பல என்று பன்மை குறிக்கும் பல் வேறு. இங்கு வல்> பல் என்பதை மட்டும் விளக்குவோம்.

வல் ‍ பல். இது ப>வ திரிபு.  இதை முன் பன்முறை இடுகைகளில் ஆங்காங்கு விரித்துரைத்துள்ளோம்.

வல் > வலம்.  (வலிமை)
வல் > பல் > பலம் (வலிமை).

இவற்றை விரிக்காமல், அடுத்து  வல் அடிச்சொல்லில் விளைந்த ஒரு திரிபைத் தெரிந்துகொள்வோம்.

வல் > வல்லூறு.  ஒரு பறவை.
(வலிமையான பறவை).

வல் ‍  வல்லுறு =  வலிமையாகு.   உறு ‍   உறுதல்.

வல் ‍  வல்லுற.  ( வலிமைப் பட).

வல்லுற >  வஜ்ஜிர.

இங்கு லகரம் ஜ‍வாக மாற்றப்பட்டது. இதற்கு   வேறொரு சொல் வடிவு உந்துதலாகியது


சு என்பது சொற்கள் பலவற்றில் வரும் விகுதி ஆகும்.  எ-டு :  பரிசு .

வல் > வற்சு .> வற்சு + இரு + அம்  > வற்சிரம் >  வச்சிரம்

வலிமையாக இருத்தல் என்பது பொருள். சு என்பது  இடை நிலை ஆனது.

"வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் "  புறம் 241


வஜ்ஜிர என்பது அழகான படைப்பு.

==================================================================

குறிப்புகள்:

வல் > வல் + ம்+  அம்  =  வன்மம்
வல் >  வறு >  வறுமம் =  வன்மம் .
வல் > வற்பு >  வற்பம் =  வன்மம்
வன் >  வன்பு . =  வன்மம்





தானமும் தவமும் தமிழரும்

வேள்வி செய்தல் (யாகம் ​)  -  தமிழர்  செய்யவில்லை என்பது உண்மையன்று. இறை வணக்கத்திற்கு வேள்வி செய்வது அவர்களுக்குப் பிடித்தமானதாய் இருக்கவில்லை.  தானமும் தவமும் தமிழருக்குப் பிடித்தவை.  யாகம் பிடிக்காத காரணம் அது ஓர் உயிரைக் கொன்று இயற்றுவதாய்  இருந்தமைதான் . " அவி  சொரிந்து ஆயிரம் வேட்டலின் ....."  என்ற குறள் இதைக் காட்டுகிறது.    ஆனால் மழை இல்லாமல் போனால் தானமும் தவமும் இயற்ற முடியாவே என்று வள்ளுவர் கவலைப்படுவதாகவே  எமக்குத் தெரிகிறது  .  " வானம் வழங்கா தெனின் "  இவை தங்கா என்று வள்ளுவர் கூறுகிறார்,

தானம் என்ற சொல்  தா என்ற ஏவல் வினையடியே தோன்றியது.  இது பல மொழிகளிலும் பரவி விட்ட சொல்தான்

தா + இன் + ஆம்  =  தானம்  ஆகும்.

இன் என்பது உரிமை/ /  உடைமை  குறிக்கும் இடைச்சொல். 1.தருதற் குரியது ;-  2. தருதல் ஆகிய செய்கை;.

தருங்கால்  பிறர்க்குரிய தாவதே  தானம்.  இங்கு இன் மிக்கப் பொருத்தமாயுள்ளது.  உரிமை பிறர்க்கு மாறுவதைக் குறிப்பால் உணர்த்துகிறது. மிக்க ஆழ்ந்த பொருண்மை மிளிரச் சொல் உருவாக்கப் பட்டுள்ளது.

இன் என்பதில் இப்பொருளைக் காணார் பலர்.

எ-டு : உரிமை உடைமைப் பொருளில் இன்:

இந்தக் காய்ச்சல் ஒரு நோய் நுண்மத்தின் (virus )   வேலை என்று மருத்துவர் கூறுகிறார். 

சொல் அமைகையில் இது  தன்  தலையெழுத்தை  இழந்து  "ன்"  என்று மட்டும் நிற்கும்.  இல்லையென்றால்  "தாயினம் "   என்று போந்து வேறு சொல்லுடன் மயங்கிப்     பயன்படுத்துவோரைக் குழப்பும் . தானம் என்பதே சரியான அமைப்பு.

ஆங்கில dOnation வரை பரவி உலகச்  சேவை செய்யும் இத் தமிழ்ச்சொல்லை வாழ்த்துவோம்.

இன்னும் இதுபற்றி எழுதவேண்டும் என்று தோன்றினும் இத்துடன் அமைவோம்.  அடுத்துத் தவம்  எனற்பாலதான சொல்லை நாடுவோம். 

.

ஞாயிறு, 20 மார்ச், 2016

சாணக்கியனும் சாணாரும்


Continue reading from http://sivamaalaa.blogspot.sg/2016/03/chanakya-was-probably-tamil.html

சாணான் என்போன் கள்ளிறக்கும் ஒரு தொழிலுடையான். இவன் (chANakkiyaan )  இத்தொழிலுடையாரைச் சேர்ந்தவன் என்று கருதினாருமுண்டு. வேதவியாசன் மீனவப் புலவன் ; வால்மீகி வேட்டுவன்;  பாணினி பாணரினத்தான்; வள்ளுவன் வள்ளுவக் குலத்தோன்;  கம்பன் ஓதுவார் வழிவந்தோன் எனும் நெடுந்தொடரில்,  இத்திறத்தினரெல்லாம் பண்டை மேனிலையில் நின்றமையையே ஆய்வுகள் காட்டுகின்றன. சாணானாயிருந்து நூலாக்கியமையால்
சாண் ஆக்கியன் > சாணாக்கியன், சாணக்கியன் என வந்தது எனினுமாம். இன்று கீழ் நிலையர் பலர் முன் மேனிலையராய் இருந்தனர் என்பது  அறிஞர் M .  சீனிவாச ஐயங்காரும் கூறுவதாகும்.
சாணாக்குடி ( சாணார் குடி), சாணாக்கிக்கீரை  முதலான பதங்களை
நோக்கின்  சாணா+ ஆக்கியன்  என்பது பொருந்துகிறது.  ஆகாரங்களில் ("ஆ" ) இரண்டில் ஒன்று கெட்டுப் புணர்ந்து சொல் உருவாகும். பிரமத்தை உணர்ந்தவன் பிராமணன் என்பதால் இவன் பின் பிராமணன் ஆயினன்.

சாணா  ஆக்கியன் =  சாணாக்கியன் > சாணக்கியன் : சாணா(ர் )  வகுப்பு ஆசிரியன்  என்பதும்  ஆகும்..

சாணா +  ஆக்கி + யா என்று சங்கதத்தில் இது  மேற்கொள்ளப்பட்டது.  அன் ஆண்பால் விகுதி அங்கில்லை. அது தமிழுக்கே உரியது.  அது தமிழில் இலங்கும் காலை  சாணா  (அல்லது    சாண  ) + ஆக்கி+  அன்  என்று   யகர உடம்படு மெய்யும் இணைந்து சாணக்கியன்  என்று இறுதியில் முடியும்.

வேறு சொல் முடிபுகளை ஈண்டு துருவா தொழிவோம்.

இவனைத் "திரமிள "  இனத்தவன் (திராவிடன்)  என வடநூல் உரைக்கும். இதைப்  புறந்தள்ளக் காரணம் யாதுமில்லை.

---------------------------------------------------

Note:

சாண்+  நாக்கு+ இயன்=  சாணாக்கியன் >  சாணக்கியன்,
ஒரு சாண் நாக்கு உடையவன்;  என்றால்,  எல்லாவற்றிலும் இடையிற் புகுந்து நீளப் பேசுபவன் என்றும் பொருள்.  மற்றப் பொருள் தரவுகளை தொடர்புடைய ஏனை இடுகைகளில் காண்க.