ஞாயிறு, 5 ஜூலை, 2015

Sage Narada

நாரத முனிவரை இன்று நமக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக மறந்துவிடுகிறோம்.  அவர் நினைவு பழங்கதைகளைக் கேட்டாலே மீண்டு வருகிறது. வீணையை வைத்துக்கொண்டு இனிமையாக இசைபாடி, நன்கு பேசிப் பிறரை மடக்கக் கூடியவராகவே அவர் கதைகளில் வரலாறு வருகிறது.

சங்கதப் புலவர்கள் அவர் பெயர் மனிதனைக் குறிக்கும்  "நர(ன்)" என்பதிலிருந்து  வருவதாகச் சொல்லுவர். அவர் நடத்தும் வாதங்களைக் கேட்கையில்,  நரன் என்பதிலிருந்து அவருக்குப் பெயர் வந்தது  என்பது பொருத்தமாக இல்லை.  நாம் அனைவருமே நரர்கள் தாம்.

நாவினாலே யாரையும் அறுத்துப் பேசி மடக்குபவர் என்ற பொருளில் நா+றதர் >  நாரதர்  எனில் சரியாய் இருக்கும்.

றதர் என்பதைப் பார்ப்போம்.

அறு+ அதர் =  அறதர் =  அறுக்கும் வழி.
அதர் =  வழி.
நாவினால் அறுத்துப் பேசும் வழி அறிந்த கலைஞர்.

அறதர் என்பது தலையிழந்து றதர் > ரதர் ஆனது.

அரங்கன் > ரங்கன் ஆனதுபோல.

நா+அறு+அதர்= நாவறுதர் > நாறதர் >நாரதர் என்று தமிழ் முறைப்படி காணலாம்.

இது ஏனை இந்தோ ஐரோப்பியத்தில் இல்லாத சொல்

அது+ அர் என்ற பின்னொட்டுகள் அத(ர்) என்று வந்தன என்னினும் அமையும்.


நாவை ரதமாக உடையவர் எனினும் ஏற்புடைத்தே.  தச + ரதர் = தசரதர் என்பதுபோல நா+ரதர் = நாரதர்.

கடக இராசி :Crab and its qualities

கடக இராசியில் பிறந்தவர்கள்  துணிச்சலும் திடமனமும் உடையவர்கள் என்று கணியர்கள் (சோதிடர்கள்) கூறுவர்.  திடமும் திறமும் உடையாரை எளிதில்  கடந்துவிட இயலாதன்றோ?

நண்டு என்ற  உயிரி,  கடினமான ஓட்டினுள் வாழ்கிறது.   ஓடு கடினமானது;  அந்தக் கடு வெளி  ஓட்டின்  அகத்து (உள்ளே)  அது வாழ்கிறது.  எத்துணை கடின ஓடாயினும் அதை மடக்கிப் பிடித்து மனிதன் உண்டுவிடுகிறான் என்றாலும்,  இதனால் ஓடு கடுமை என்பதும் அகத்தே நண்டு வாழ்கிறதென்பதும் மறுத்தற்கொண்ணாத உண்மைகளே.

கடு+  அகம் = கடகம்.

இங்ஙனம் நண்டுக்கு மற்றொரு பெயர் அமைந்தது.  இது மிக்கப் பொருத்தமாய் அமைந்த பெயராகும்.

கட + அகம் :  வென்று உட்புக அரியது என்றும் பொருள்.

கடம்:  <  கட.

இதனை வேங்கடம் என்ற சொல்லுடன் வைத்து நோக்குக.

கடத்தல் - வெல்லுதல் என்றும் பொருள்படும்.

கடக  இராசி 

வியாழன், 2 ஜூலை, 2015

போருக்குப் புறப்படுமுன் .........

அரசன் ஒருவன்  போருக்குப்     புறப்பட எண்ணுகின்றான்.  அவன் என்ன செய்யவேண்டும்?  இதற்கான விடை யாரும் அறிந்ததுதானே! "போருக்குப் புறப்படுங்கள் " என்று உரத்த குரலில் கட்டளையிடவேண்டும். திரைப்படங்களில் அப்படித்தான் காட்டுவார்கள். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்குக் கட்டளை யிட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

சிறந்த போர்க்கலை மன்னர்கள், பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதிலொன்று படைகளைப் பலவிதத்திலும் தயார்ப்படுத்துவது. அதில் ஒரு "விதம்": வரிசையறிந்து படையுறுப்பினர்களுக்கு விழுமிய பொருள்பல வழங்கிச் சிறப்பிப்பது.

முன் போரில் பல வெற்றிச் செயல்கள் புரிந்து தன் நாட்டுப் பற்றையும் அரசுப் பற்றையும் மெய்ப்பித்தவர்களுக்குச் செயல்தகுதிக்கேற்பப் பொருள்வழங்க வேண்டும்.  இதைத்தான் "வரிசையறிந்து" என்று சொன்னோம்.
பொருளுடன் பட்டம், பதவி முதலியவும் வரும்.

மறவர் சிலருக்குக் குதிரைகள் கிடைத்தன.  வேறு சிலருக்கு யானைகள்.
நிலங்கள் பரிசாகப் பெற்றோரும் உண்டு. இன்னும் சிலருக்குப் பொன்னும் மணியும். இப்படிப் போருக்குமுன் அளிக்கும் நிகழ்வுக்குத்  "தலையளி" என்றனர். அளிக்கும் மருத நிலத்துக்குத் "தண்ணடை" என்று பெயர்.

இதைக்கூறும் பாடலைத்  தும்பைத்திணை, தும்பை அரவத் துறை என்று வகைப்படுத்துவார்கள்.

பொன் புனைந்த கழலடியோன் 
தன்படையைத் தலையளித்தன்று.

என்பது கொளு. தலையளித்தன்று = தலையளித்தது .( புறப் பொருள் வெண்பாமாலை .)

சிவ பெருமானே முப்புரம் எரிக்கப்  ( போருக்குப்) புறப்படுமுன் புறப்பொருள் இலக்கணப் படி செய்வன செய்துதான் புறப்பட்டாராம்.    

அத்தகு சிறப்பு உடையது தமிழனின் புறப்பொருள் இலக்கணம். (என்பர் புலவர் )