ஞாயிறு, 24 மே, 2015

chuuriya aaRRal

உலகின் பாதியைச் சுட்டெரிப்  பதுபோல்
பலநா    டுகளிலும் தாங்கொணா வெப்பம்

வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள்  இவனுக்குக் கிட்டும்;

ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ

ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/

தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே

புதன், 20 மே, 2015

போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே குறுவஞ்சி

குறுவஞ்சி என்பது புறப்பொருளில் ஒரு துறை ஆகும். இது வஞ்சித் திணையில் வரும்.

போருக்குச் செல்பவன் வஞ்சி மன்னன். வஞ்சி மாலையைத் தலையில் மலைந்துகொண்டு புறப்படுவான்.  கூடார்தம் மண்ணினைக் கொள்வேன் என்று முழங்கிக்கொண்டு செல்வோன். கூடார் எனில் பகைவர். அப்படிப் புறப்பட்டு வந்த மன்னனுடன் போர் செய்யப் பின்வாங்கியவனாய், அவனுக்குக் கப்பம் கட்டித் தன் மண்ணையும் குடிகளையும் காத்துக்கொள்ளுதலே  குறுவஞ்சி என்ற துறை. இப்படிப் பணிந்துபோய்த் திறைசெலுத்தியதைப் பாடும் பாடலை, வஞ்சித்திணை, குறுவஞ்சித் துறை என்று பகுத்துரைப்பர்.

விலை யுயர்ந்த யானைகள்,  அழகிய குதிரைகள் என்று தன்பால் உள்ள ஏற்கத்தக்க   எப்பொருளையும் முன்வைக்கலாம்.   வணங்கி இறைஞ்சலாம்.

வீரம் பேசிப் பலரைக் கொல்வதினும் இது நல்லதென்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மன்னர்கள் இதனை விரும்பியதாகத் தெரியவில்லை.

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று

என்பது கொளு.

கனல் கக்கும் போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே "குறு" என்ற அடைமொழி.

குறுவஞ்சி வேறு;   குறவஞ்சி வேறு.


திங்கள், 18 மே, 2015

thiAvuthal திராவுதல்

மடைப்பள்ளியில்  ஒருவர் மற்றவரிடம், "குழம்பைக்  கொஞ்சம் "திராவி"  விடு  என்றார்.  எனவே  எனக்குத் தெரியாத இந்தச் சொல்லை அகரவரிசைகளில் தேடினேன். திராவுதல் என்ற வினைச் சொல் கிடைக்கவில்லை.

இன்றைய நிலையில்,  அகரவரிசை என்பவை பெரும்பாலும்  பகர்ப்புகளே .(copies)  நிகண்டுகளிலோ முன் வெளியிடப் பட்ட அகரவரிசைகளிலோ இடம்பெறாத புதியவாகக் கேட்ட  சொற்களைத்  தேடிப் பிடித்துச்   சேர்ப்பது  அரிதேயாம்.

இப்போது வெளிவந்துள்ளவற்றில் இங்ஙனம் கண்டெடுத்துச் சேர்க்கப் பட்டனவாகக்  குறிக்கப்பட்ட சொற்கள்  எவற்றையும் காண முடியவில்லை.

வட்டாரப் பேச்சுகளில் திரிந்து வழங்கும்  சொற்களைச்  சில கல்லூரி ஆசிரியர்கள் திரட்டிப் பதிப்பித்துள்ளனர்.  இவற்றைக் கிளைமொழிச் சொற்கள் என்றனர். இத்திறத்தன சீரிய முயற்சிகளென்போம்.

திராவுதல் என்பது அகப்பையினால் குழம்பையோ அல்லது வேறு கீரைச்சாறு போன்றவற்றையோ சுற்றிக் கிண்டிவிடுதல் என்று தெரிகிறது.
திருப்பு,  திருகு,  திறம்பு, என்பவற்றுடன் இச்சொல் தொடர்பு பட்டதாகவே தோன்றுவதாலும், வேறுபாடு நுண்ணிதாகவே திகழ்வதாலும், இச்சொல் இருந்தது,   ஆனால்  அகராதிகளில் அகப்படாமல்  போயிற்று என்று முடித்தலே பொருத்தம் உடையதாம்.