திங்கள், 14 ஜூலை, 2014

"ஆயுதம்"

இப்பொழுது "ஆயுதம்" என்ற சொல்லினை ஆராய்வோம்.  இதைப் பிரித்தால்
ஆய்+ உது +அம் என்று வரும்.

ஆய்தல் என்பது, பல பொருளுடைய சொல்.  நூல் ஆய்தல், ஒரு பொருளைப் பிரித்தும் சேர்த்தும் வேண்டியவாறு உட்புகுந்து அறியவும் உணரவும் முற்படுதல், ஆராய்தல், காய்கறி முதலியவற்றை வெட்டிச்  சமையலுக்கு ஏற்றபடி சரிசெய்தல்  என்பன நீங்கள் அறிந்தவையே.  ஆய்வது, மனத்தால் ‍ மூளையால் அல்லது உரிய கருவிகளால் நடைபெறுவது.

உது என்பது, முன் நிற்பது என்னும் பொருளது. அது, இது, உது என்பன சுட்டடியாகப் பிறந்த சொற்கள். சுட்டு எழுத்துக்களாவன, அ, இ,உ  என்பன.
து என்பது  அஃறிணை ஒன்றன்பால் விகுதி.  சொல்லாக்கத்தில், அது, இது உது என்பன பல சொற்களில் பயன்பட்டுள்ளன.  எ டு:  பரு+ அது + அம் = பருவதம்.(மலை ) இங்கு அது பயன்பட்டுள்ளது.   பருத்தல்  = "பெரிதாதல்."(1)  காயிதம் என்பதில் காய்+இது + அம் என இது வந்துள்ளது.  காகிதம் என்பது காயிதம் என்பதன் திரிபு. இது பற்றி முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்.

அம் ‍ விகுதி.

ஆயுதம் என்பது, பொருளை ஆய்வதற்கு ( வெட்டுவதற்குப்) பயன்படும் கருவி. இதுவே அதன் அமைப்புப் பொருள். சொல் அமைந்தபின் பொருள் ஏற்றவாறு விரிவுபடும். இது இயல்பாகும். இப்போது இது weapon, என்ற பொருளில் வழங்குவது  பெரும்பான்மை.


குறிப்பு 

பரிய  -  பெரிய .  இவற்றுக்குள்  நுண்பொருள் வேறுபாடு உண்டு .  பருவதம் -   பரியதாகிய மலை .

காயிதம்  -  அடிச்சொல்  "காய்தல் ".  அரைத்த மரக்குழம்பு  காயவைத்து  காயிதம் ஆகிறது.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

சகுனம்.

மனிதனுக்கு மரணம் என்று ஒன்றில்லா திருந்திருப்பின்,  பிணம் தூக்குவோர், புதைப்போர், எரிப்போர் எல்லாம் தோன்றியிருக்க மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அது மட்டுமா? மதங்கள், சாத்திரங்கள், சோதிடம், சகுனம் என்று பலவும் தோன்றியிருக்க மாட்டா என்பது மாந்தவளர்ச்சி நூலார் (anthropologist)  நமக்கு அறிவுறுத்திய உண்மையாகும்.

நன்மையே என்றும் வேண்டும். தீமையே நமை அண்டுதல் கூடாது, சாவு தீமை; நோய் தீமை, இன்னும் எத்தனை எத்தனையோ! அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ, பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ, இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ என்பதுபோன்ற பட்டினத்தடிகளின் பாடல், மரணம் இல்லையென்றால், பாடப்பெற்றிருக்க முடியாதல்லவா?

ஆமாம். இப்போது சகுனம் என்ற சொல்லைப் பார்க்கலாம்,

தோழி ஒருத்தி இறந்துவிட்டால், அவள் போய்விட்டாள் என்பது ஒரு கவலை; இனி வரமாட்டாள் என்பது இன்னொரு கவலை; எனக்கும் இப்படி நேருமோ என்பது இனியும் ஒரு கவலை; எப்போது அது வருமென்பது மேலும் ஒரு கவலை; நடப்பிலேயே அதை அறிந்துகொள்ள வழியுளதா என்பது அடுத்து நிற்கும் க்வலை. எங்கேயாவது ஒரு பல்லி கில்லி சொல்லாதா என்பது தொடர்ந்து வரும் கவலை.  பல்லி சொல்லிவிட்டது, எனக்கு விளங்க வில்லை, யாராவது தெரிந்தவர்கள் சொல்ல மாட்டார்களா என்பது அதை ஒட்டிவரும் கவலை.

சாவு+அன்+அம் > ( சாவனம் ) > சவனம் > சவுனம் > சகுனம்.1

சாவனம் என்ற இடைவடிவம் ஒழிந்தது. சா என்பது ச என்று குறுகிவிட்டது. மேலும் அறிய, முன் வந்த சவம் என்ற இடுகையைப் படித்தறியுங்கள்.
சாவனம் மட்டுமின்றி, மக்கள் நாவில் இன்றும் தவழும் ஏனை வடிவங்களும் மேலே தரப்பட்டுள்ளன.

சவனம் சகுனம் என்ற சொற்கள் ‍  எந்த மொழிக்காரர்கள் வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளட்டுமே. உலக சேவையில் அது இருக்கட்டும்.

சாவைப் பற்றி மட்டும் சொன்ன பல்லி, இப்போது முன்னேறி குதிரைப் பந்தயம், எண் பந்தயம் என்றெல்லாம் அறிந்து சொல்லத் தொடங்கிவிட்டபடியால், சாவு என்று தொடங்கிய சொல், சவத்துப்போய் சகரக் குறுக்கம் பெற்று சவனம் > சகுனம் என்றானது, வேண்டியதொரு மாற்றமே.
போராட்டம் இல்லாமலே கிட்டிய பரிசல்லவா இந்தத் திரிபு!


notes:

சிலர் சகுணம்  என்று எழுதுகின்றனர். Publication (2002) by Rajan Bndgs  12 Barracks Rd, Seven Wells, Chennai, 600 001  

சனி, 12 ஜூலை, 2014

சவம்.

சில சொற்கள் வினைச்சொல் வடிவிலிருந்து பெயர்ச்சொல் வடிவத்தை அடையும்போது, முதனிலை அதாவது சொல்லின் முதலெழுத்து நீண்டு பெயர்வடிவம் பெறுகின்றன. இதற்கு  எடுத்துக்காட்டு:‍

சுடு  >  சூடு
அசை >  ஆசை  (ஒன்றை நோக்கி மனம் அசைவுறல்).

இப்படி நீண்டபின், விகுதி பெறுவனவும் உண்டு:    எ‍-டு:

படி >  பாடம்.  (அதாவது: ப என்பது பா என நீள, அம் விகுதி பெற்றது.)

இதில், இன்னொன்று, படி என்பதில் இறுதியில் நின்ற இகரம் கெட்டு ட் என்றானது.

படி  >  பாட் > பாடம்.  பட்,  பாட் என்பன தோன்றா இடை வடிவங்கள்.

கருவில் வளர் குழந்தை, பல் வேறு இடை வடிவங்களை அடைந்து, பின் இறுதிக் குழந்தை வடிவம் அடைதற்கும் இதற்கும் வேறுபாடில்லை.

நான் சொல்ல வந்தது இதுவன்று. அதை இப்போது காண்போம்,

சில சொற்கள் சூடு எனற்பாலது நீண்டாற்போன்று நீளாமல், குறுகிவிடுகின்றன.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு:

சாவு >  சவம்.

சாவு என்ற வினைச்சொல்லின் முதலெழுத்து, "ச" என்று குறுகிற்று. "வு" என்ற இறுதி எழுத்து தன் இறுதியில் நின்ற உகரம் இழந்தது. வ்  என்று மட்டும் நின்றது, பின் வந்த அம் விகுதி  "வ்" என்ற எழுத்துடன் புணர்ந்து, "வம்" என்றானது. முன்பே குறுகிவிட்ட "ச" எழுத்துடன் இணைந்து, சவம் என்றானது.

இது போன்று குறுகி அமைந்த சொற்களின்  பட்டியல் ஒன்றை நீங்கள் தயார் செய்யலாமே.