வெள்ளி, 4 ஜூலை, 2014

காதுக்கு உகந்த கீதை

முன் இடுகையில்  (கத்) என்ற பிரித்தறி சொல்லினின்று கீதை என்பதும்  ஏனைச்  சொற்கள் சிலவும் உருப்பெற்றன என்பது கண்டோம்.

இப்போது காது என்னும் சொல்லைப் பார்ப்போம்,

கத் என்ற ஒலி குறிக்கும் சொல்லினின்று கத்> காத் > காது என்று வந்திருப்பது மிக்கப் பொருத்தமானதே. அதிலும் இறுதியில் வந்த உகரம் பாருங்கள். ஒலியானது உள் சென்று கேட்பாற்றல் பெறுவது நன்கு தோன்றும்படியாக,  உகரத்தில் முடிகிறது. விகுதியாகவும், அதே சமயத்தில் உட்செலவுப் பொருண்மை தெரியவும் அமைந்துள்ளது.

இதற்காக நாம் பண்டைத் தமிழரைப் பாராட்ட வேண்டும். மொட்டையாக ஒரு விகுதியைப் போடாமல் அதற்கும் ஒரு பொருள்வரச் செய்த பெருமை அவர்களுடையது ஆகும்.

கத் நீண்டு காத் ஆகி காது அமைய,
கத் > கித் ஆகி, அதுவும் நீண்டு ஐ விகுதி பெற்று கீதைச் சொல் அமைய,

கன பொருத்தமன்றோ?

சொற்கள் நீள்வது புதிதன்று.   கண் >< காண்.  வாய் எப்படி நீண்டதென்பது பின்பு சொல்வேன்.


இப்படிச் சொல்லாமல், கத்து >  கது (இடைக்குறை அல்லது தொகுத்தல் போன்றது ) > காது ( முதனிலை நீண்டு பெயரானது ) என்று தமிழிலக்கண மரபு பற்றி உரைப்பது தமிழாசிரியர் விழைவு ஆம்.

கத்திலிருந்து கீதைவரை

சில சொற்கள் நாம் எளிதில் கண்டுகொள்ள இயலாதபடி திரிந்துவிடுவதால்,  உரியவற்றோடு அவற்றைத் தொடர்புறுத்தி அறிந்துகொள்ள,  சிற்சில வேளைகளில் இடர்ப்படுகிறோம். சில சொற்கட்கு தலையில் திரிபு. வேறு சில வாலில் திரிந்துவிடுகின்றன. ஆகவே, ஆசிரியர்களும் அவற்றை வேற்றுமொழிச் சொல் என்று கற்பித்துவிடுகின்றனர்.

கத்து என்ற சொல், (கத்) என்ற அடிச்சொல்லில் இருந்து வருகிறது என்று பாணினி முறையில் வைத்துக்கொண்டால், கதறு என்பது (கத்)> கத்+அ+று என்றும், கதை என்பது (கத்) > கத்+ஐ என்றும் தெரிந்துவிடுகிறது.  கத் என்று ஒரு தனிச்சொல் இல்லையென்றாலும், அதைப் பிரிப்பதால், வேரை ஒருவாறு அறிந்துகொள்ள இயல்வதாகிறது.
நல்ல முறைதான்; ஆனால் தமிழ் ஆய்வாளர்கள் இதைப் பயன்படுத்துவதில்லை.
சங்கதத்தில் இம்முறையே போற்றப்படுகிறது. இம்முறையினால், (கத்) > கதம், ஆகையால் சங்கதம் என்ற சொல்லில் இறுதியில் இது உள்ளது என்று எளிதில் பிடித்துவிடுகிறோம்.

கத் > கித் > கீதை.  மற்றும் கீதம் என்பது சற்று முயன்று கண்டுபிடிக்கவேண்டியுள்ளது. கத் என்றால் ஒலிசெய்தல் என்பது அடிப்படைப் பொருள்.

கத் என்பது குகை மாந்தனின் காலத்தில் இருந்து பின் தொலைந்துவிட்டது. அதன் பின்பிறப்புகள் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும் காண்போம் அடுத்த அல்லது வேறு  இடுகையில்.

வியாழன், 3 ஜூலை, 2014

தேகம்

தேகம்  அழிதலை உடையது என்பதில் இந்திய அறிவாளிகள் மிகுந்த கவனம் செலுத்தி வந்துள்ளனர்.தமிழ், சங்கதம் , பிற இந்திய மொழிகள் என எங்கும் இக்கருத்து பரவிக் கிடக்கிறது. நரை  திரை   பிணி,மூப்பு  என்பது யாவரும் அறிந்த கருத்தாகும். தேகமானது தேய்தலைத்  தன்  உடைமையாய்க் கொண்டுள்ளது.

இதனால்  தேய் என்ற சொல்லினின்று ஒரு சொல் படைக்கப்பெற்றது.(ஷேக்ஸ்பியரின்  கவித் துணுக்கு ஒன்று  கீழே தரப்பட்டுள்ளது . அதிலும் இக்கருத்தைக் காணலாம்.  இஃது ஓர் உலகக் கருத்தென்பதில் யாரும் வேறுபடார் .)

தேய் >  தேயம் .

தேய் என்பதினின்று அமைந்த தேயம் என்ற உடம்பு குறிக்கும் சொல் வேறு.
தேஎம் >  தேயம் > தேசம் என்று திரிந்த நாடு குறிக்கும் சொல் வேறு. இவை வேறு வேறு வீட்டுப் பிள்ளைகள்.   குழம்பாமல் இருங்கள்..

தேயம் (உடம்பு)  என்பது பின் தேகம் என்று திரிந்தது. இது பிற மொழிகளிலும் சென்று வழங்கியது.

தேகம் என்பது     அழிவுக் கருத்தினடிப்படையில், ஞானத்தில்1 எழுந்த சொல் ஆகையால், தொடக்கத்தில் தமிழ் இலக்கியங்களில் இடம் பிடித்துக்கொள்ள முடியாமல் இருந்தது என்பது தெளிவு.  கெடுகுறிச் சொல் (அபசகுனம் ) என்ற நினைப்பு. சங்க இலக்கியங்களில் உளதா? இல்லையெனில் அல்லது அருகியே வழங்கிற்று எனில், இக்கருத்து சரியானதே. பேச்சு வழக்கில் இருந்தது.

ஆனால் தேய் என்ற அடிச்சொல் இல்லாத மொழிகளில் இக்கருத்துத் தடை, மனத்தயக்கம் இல்லை. இப்போது தமிழிலும் இம் மனத்தயக்கம் இலது

இச்சொல் இருக்கு வேதத்திலும் வந்துள்ளது என்றாலும் அங்கு  இணைப்புச் சொல்லுடன் உடற்பூச்சு, கரை, சுற்றுச்சுவர் முதலிய பொருளிலும் விளங்குகின்றது. தேகதி: f. mound , bank , rampart , surrounding wall RV.   ஏனை இணைப்புகளும் உள்ளன. இங்கு சுட்டிக்காட்ட விரும்புவது, உடற்பூச்சு முதலியவை, உடலில் தேய்க்கப்படுபவை. இஃது தமிழ் அடிச்சொல்லுடன் ஒத்துப்போவதாகும்..

மரணத்தைப் பற்றி மகாகவி ஷேக்ஸ்பியர்:

......................
And All our yesterdays have lighted fools:
The way to dusty death;  Out, out brief candle;
Life's but a walking shadow; a poor player
That struts and frets his hour upon the stage;
And then is heard no more; it is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.

WILLIAM SHAKESPEARE (Macbeth V.v.)

இராமலிங்க  அடிகளாரின்  பாடலில் "

"பெற்ற தாய்தனை  மக  மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும்  தாய்  மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ...."

என்று  வரும்  வரிகளையும்  நோக்குக.    தேகம்  உயிரை இழப்பது   ஈ டற்ற  ஒரு  பெரு   
 நிகழ்வே  ஆகும். இங்ஙனம்   தேய்ந்து  அழியும்  உடல்  தேகம்  (தேயம்)  ஆயிற்று.

பொய்  ஆகிய உடலை  எப்படி   மெய்  என்பது?  காற்றடைந்த  பை  அன்றோ?
அதனால்  அதைக்   குறிக்க த்   தேகம்  என்ற சொல்   தேவை   ஆயிற்று.





-----------------------------------------------------------------------------------------------------------

1  ஞானமாவது, ஞானும் கடவுளும் வேறன்று  (வேறல்லோம் ) என்னும் கருத்து, ஞான் ‍> ஞானம்.
ஞான் = நான்,  ஞயம் > நயம் போல. ஞான் மலையாள வழக்குமாம்.

ய  -  க  திரிபு:  நிமித்தியம் >  நிமித்திகம்.