வியாழன், 27 மார்ச், 2014

Traffic Accidents

மனிதனாய்ப் பிறந்துவிட்டால் 
மண்டிவரும் குறைகளுக்கோ
பஞ்சமில்லை;

தனியளாய் உந்துதனைத் 
தகச்செலுத்திச் சோலிகளை
முடிக்கவேண்டி 

இனியவா  னொலிப்பாடல்
இதமாகக் கேட்டபடி
ஏகுங்காலை 

கனிவிழைந்த  வாயிலொரு 
காய்வந்து திணிந்ததுபோல்
விபத்து நேரும்! 

நேர்ந்துவிட்ட விபத்தினைச்ச 
மாளிக்க ஒருதிறமை 
வேண்டும்வேண்டும்!

ஊர்ந்துவந்த   வீதியில்கைப்  
பேசிகளில் படமெடுப்பார் 
நடிகை யாமே !

பேர்ந்துவிடும் முகரை எனப் 
பேச்சிலொரு மிரட்டலினை 
விடுப்பார் கேட்டுச் 

சோர்ந்துவிட நேர்ந்துவிட்டால் 
சோமனருள் அன்றியொரு 
காவலுண்டோ?   

----    சிவமாலா 

பாடலில் வரும் பதங்களுக்கு விளக்கம் .

குறைகள் :  கோபம்,  தேவையற்ற வாய்ப்பேச்சு,  அச்சம்,  ஆயுதமெடுத்தல் 
போன்ற  குறைகள் .  உந்து  -  (கார்),     தக -  நன்றாக;  செலுத்தி-  வண்டியை  ஓட்டி ;   நடிகை  யாமே -   யாம் அங்கு விபத்தில் மாட்டிக்கொண்டால்,  எ ம்மைப்  பட மெடுப்பவர்கள்     camera crew ;    I then become the actress!  !    யாமே நடிகையானோம் என்றபடி.


நீங்கள்  படித்தின்புற  சாலையில்  நடப்பவை  பற்றிய  ஒரு கட்டுரை:

Anger, Social Media and Singaporeans

http://theindependent.sg/anger-social-media-and-singaporeans/ 


(விபத்து ஒன்றும் நேர்ந்துவிட வில்லை;  சிங்கப்பூரில் மட்டுமன்று,   எங்கும்  நடப்பதுதானே, ஓட்டுநரும் பயணிகளும் சாலையில் சற்று நிதானம்   கடைப்பிடிக்கவேண்டும்....  அந்த நாள் வரவேண்டும்.   )                                                                                                                

கண்ணீரில் விளைத்த வாழ்வில்.................


(அறுசீர் விருத்தம் )

தண்ணீரில் மிதந்து சென்று 
காற்றொடு மழையில் சிக்கி 
கண்ணீரில் விளைத்த வாழ்வில் 
கால்வயி  றுண்ட மக்கள்
உண்ணீரும் இன்றி வாடி 
உற்றாரை இழந்து கண்கள் 
செந் நீரைச் சிந்தச் செய்தாய் 
சேய்க்கிது தாயின் தொண்டோ?

அமைதியும் வாழ்வும் இன்றி 
அலைந்திட்ட மீன  வர்க்கே 
அமிழ்ந்துயிர் எடுத்துக் கொள்ளும் 
அலைகளோ  பரிசு தந்தாய்?
"இமிழ்கடல் எங்கள் அன்னை"
இருந்தனர் இவ்வா றெண்ணி 
உமிழ்ந்தனை பேர லைகள்  
உயிர்களைக் குடித்தாய் அந்தோ !


இவை சுனாமி சமயத்தில் எழுதியவை .  அப்போது வெளியிடவில்லை, அப்போது கவிதைகள்  பல வெளிவந்தன. துயரை மிகுதிப் படுத்தலாகாது என்று  வெளியிடாமை மேற்கொண்டேன். ஒன்று வெளியிடவேண்டும் அல்லது எறிந்துவிடவேண்டும்  என்ற நிலையில் இப்போது  உள்ளபடியால் இதோ  அவற்றில் .சில...........பிற பின்பு!.
  

புதன், 26 மார்ச், 2014

நாய் வால்

நாய் வால் நிமிர்த்திவிட்டு
நல்லபடி நோக்கியே
ஒயாது முற்படினும்
ஒக்குமோ ?
பேயாய்ப்    பிதற்றித் திரிவாரின்
பேதைமையைப் போக்க
எதைச் செய்தும் ஞாலத்தில் என்?

இதை எழுதிச் சில  ஆண்டுகள் ஆகியிருக்கும்,  ஆனால் எழுதியதன் பின்புலம் இப்போது ஞாபகத்தில் இல்லை.  நாய் வால் நிமிர்த்துதல் என்பது   பலரும் அறிந்ததுதான். இங்குள்ள  சீனர்  மலாய்க்காரரும்கூட சில வேளைகளில் சொல்வதுண்டு. கவிதையிலோ ஒரு புதுமை வேண்டும். பழம்பொருளாயினும் ஒரு புது நோக்கு  வேண்டுமே ! அது  கவிதை.  இதில் இருக்கிறதா என்பதை  நீங்கள் தாம் சொல்லவேண்டும்.....


ஒக்குமோ   -   வேறு  உயிரிகளின்  நேரான வாலுடன்  அது  சமமாகுமா ?  ஒ - (ஒத்தல் ) வினைச்சொல்  ,  ஒவ்வுதல்   எதிர்மறையில்  ஒவ்வாது  என வரும்.  ஒக்குமோ  (மலையாள வழக்கு )  முடியுமோ? எனப்  பொருள்.

ஒ  -  ஒப்பு   என்ற பழந்தமிழ் வினைச்சொல்லை  .. opt   என்ற  ஆங்கிலச்   சொல்லுடன்  ஒப்பிட்டு  ஓர் ஆய்வு   செய்யுங்களேன்........

யாருடைய  பேதைமையையும்  போக்குவது  நம் வேலையல்ல  (  வேலையன்று )  என்று  அறி ஞர்  சிலர்  கூறுவர்   இது  எப்படி ? ..