புதன், 25 பிப்ரவரி, 2026

விகிதம் வீதம்

 இந்தச் சொற்கள் ஆய்வுக்குரியவை.

பரிவற்சனம் என்பதற்கு பொருள்கூறுகையில்,  அகரவரிசை ஆசிரியர் கதிர்வேற்பிள்ளை அவர்கள்,  1. கொலை, 2 விகுதல் என்ற இருசொற்களைப் பதிவிட்டுள்ளார். விகுதல் என்பது அருகிவழங்கிய ஒரு சொல்வடிவம் என்று தெரிகிறது.  விகுதல் என்ற சொல் சில அகரவரிசைகளில் பதிவுபெறவில்லை என்று தெரிகிறது.

விகுதல் என்ற வினைவடிவம்:

மிகுதல் > விகுதல் என்ற மகர - வகரத் திரிபாகவும்,

விழுதல் > விகுதல் என்ற வழித் திரிபாகவும்

வரும்.

எடுத்துக்காட்டு:

மிஞ்சு >  விஞ்சு;

தொழுதி -  தொகுதி.  ( திரட்சிக் கருத்து).

மிகு> விகு> விகுதி  ( மிகுதி - விகுதி).

தொகு> தொழு - திரிபு.

புழுதி என்பது பூதி என்றும் திரியும்.

பகுதி என்பது பாதி என்றும்  மிகுதி என்பது மீதி என்றும் திரிவதால்,  விகிதம் என்பது வீதம் என்று திரிவது படியமைந்ததே ஆகும்.  அகலமாகப் பரவி நிற்கும் மரம் ஆலமரம் என்று பெயரிடப்பட்டதையும் நோக்குதல் வேண்டும்.

விழுக்காடு  (விழு)

விகிதம்  ( விகு< விழு)

இவற்றின் தொடர்பும் அறிந்துகொள்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



ஆதிபத்தியம்

 இந்த இருசொற் புனைவை இப்போது அறிவோம்.

ஆதி என்ற சொல் திருக்குறளில் முதல் பாட்டிலே வந்துவிடுகிறது.  ஆதி என்பது ஒரு தமிழ்ச்சொல். அதனை வெளியாரியர் சொல் என்று இருபதாம் நூற்றாண்டின்  தமிழ்ப்புலவர் எவ்வாறு நம்பினர் என்று எண்ணிப்பார்க்கையில் விந்தையாக உள்ளது.  அந்நாட்களிலே,  புலவர்கள் சிலர் சற்றுத் தயக்கத்துடனே அது ஆதல் என்ற வினையிலிருந்து தி என்னும் விகுதி புணர்த்து எழுந்த சொல் என்று சுட்டிக்காட்டினர். இதற்கு முன்னரே இங்கு,  சொல்லாக்கத்தில் அல்லது புனைவின்போது, சொல்லின் பகவுகள் ( உள்ளுறுப்புகள்) தமிழ் அடிச்சொற்களாய் இருந்தால், அஃது தமிழ்ச்சொல்தான் என்று எழுதியிருந்தேம்.1

( அஸ்தி ,  ஆஸ்தி என்ற என்ற சொற்கள்  ஆதி என்பதனோடு தொடர்பு பட்டவைபோல் ஒலிப்பின் காரணமாகத் தோன்றினாலும்,  கருவில் அஸ்தி (எலும்பு)  முந்தித் தோன்றியதாய்  எண்ண ஆதாரமில்லை.  விந்து என்னும் நீர்ப்பொருளிலிருந்தே  தோற்றம் ஏற்படுகிறது.  )

ஆதி என்னும் சொல்  ஆதல் என்னும் வினையடியாய்த் தோன்றியது.  இச்சொல்லுக்கும் இந்தோ ஐரோப்பியத்துக்கும் தொடர்பு கிட்டவில்லை.

பத்தியம் என்ற சொல்லில், பற்றி இயலுதல் என்பதே பொருள். கூடுமானவரை, சொல்லிலுள்ள அடிகளை வைத்தே சொல்லை விளக்கவேண்டும் என்பது எமது கொள்கையாகும்.  ஆகவே ஆதிபத்தியம் என்பது உண்மையில் ஆதி பற்று இயமே ஆகும்.  இச்சொல் தமிழுடன் மிகுந்த தொடர்பு உடையதே  ஆகுமாறு உணர்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை


---------------------------------------------------------------------------------------------------------

இருந்தேம் - இது இருந்தேன் என்பதன் தன்மைப் பன்மையாக இங்கு கையாளப்படுகிறது. 

செனக்ஸ்  என்ற இலத்தீன் சொல்,  பழைமை,  பயின்ற முதுமையுடையது என்பது சொல்லப்படுகிறது.   செந்தமிழ் என்ற சொல், இந்தச் சொல், தமிழ் என்பதனுடன் தொடர்பு பட்டபின் பழமை குறிக்கக்கூடும்.  சென்-, சென்றது என்பனவும் பழமை குறிக்கலாம்.  நீங்கள் எழுதி தெரிவிக்கவும்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

கிழமை ( மற்றும் கிழவன், கிழவி என்பவும்)

 தலைப்பில் கண்ட சொற்களை இன்று சிறிது காண்போம்.

கிழங்கு என்ற சொல்லை  ஆய்ந்தால்,  அது கீழ் என்ற அடிச்சொல்லினின்று பிறந்தது எனற்பாலது நன்கு புலப்படும். கீழ் + அம்+ கு > கிழங்கு என்றாகும்.  கீழ் என்ற சொல்லில் கீழ் என்பது (கீ)  நெடிலில் தொடங்கினாலும்,  சொல்லாக்கத்தில் நெடிலான கீ,  குறிலாகிவிடுகிறது.(கி). இப்படிப் பெயர்ச்சொல் ஆனவுடன் முதலெழுத்து குறிலாகிவிடும் பல.

கிழங்கு என்பது கீழ் என்பதிலிருந்து தோன்றியது போலவே,  கிழமை என்ற சொல்லும் கீழ் என்பதிலிருந்து வருகிறது.  கிழங்கு என்பது வேர்.  கிழவி கிழவன் என்போரும் குடும்பத்தின் வேர் போன்றவர்களே. செடியின்  இலை, இணுக்கு என அனைத்தும் மண்ணுக்கு மேலிருப்பவை. இது மரம் கொடி அனைத்துக்கும் ஒக்கும்.  பிள்ளைகளும் பின் தோன்றல்களும் அப்படியே.  வேரானது செடிக்கு உரிமை, உரிமையும் அவ்வாறே. இதனால் கிழமை என்பது உரிமை குறித்தது.

கிழவன், கிழவி என்போரும் உரிமையானவர்கள் என்றே பொருள்தரும்.  பிற்காலத்து இதை மறந்து, இச்சொற்களுக்கு  முதியோன், முதியோள் என்ற பொருள் ஏற்பட்டுவிட்டன.

கிழத்தி என்பதும் உரிமை உடையாள் என்ற  பொருள் உடைய சொல்லே. இல்லக் கிழத்தி,  காதற்கிழத்தி  என்று வருவனவுக்கும் அவ்வாறே பொருள் கொள்க.

வெள்ளிக்கிழமை என்றால் வெள்ளிக்கு உரிய நாள்.  இவ்வாறே பிறவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை.





புதன், 18 பிப்ரவரி, 2026

கானம் என்ற சொல்.

 கானம் என்ற சொல்லினை இங்கு ஆய்ந்து காண்போம்.

இந்தச் சொல் தமிழிலும் வழங்குகிறது,   சமஸ்கிருதத்திலும் வழங்குகிறது. கன்னல் என்ற சொல் கரும்பைக் குறிக்கிறது.  கன் என்பதே இதன் அடிச்சொல்.

கன் > கனி   ( விகுதி இ ).  பழம்,  இனிமையானது என்பது பொருள்.

கனைவரிவண்டு  என்பது  கேட்பதற்கு இனிய ஒலியினை எழுப்பிக்கொண்டு பறந்து திரியும் வண்டு. வரிகளும் உடையது.

கன் > கனி.

கன் > கனை.  இனிய ஒலி எழுப்பு.  ந ந என்பது இசை ஒலி,

கா என்றால் தொடர்வரவாதல். கா, மற்றும் ந இரண்டும் இசை ஒலிகளும் ஆம்..

கா-  காத்தல் என்றால்  தேவையான அளவில் இடர் இன்றிப் பாதுகாத்தல். இனிய ஒலி காக்கப்பட்டுத் தொடர்வரவாதலே  இசை.

கா -  நா >  கானம்  ( அம் விகுதி வந்து) கானம் ஆகிறது.  காத்து நாவில் வைக்கப்படுவது. நா என்பதற்குப் பதில் கா+ இன்+ அம் என்பன,  இன் குன்றி ன் என்றே நின்று,  கானம் என்று வரின்,  இன் என்பது  இனிமை என்று கொண்டு,  காத்து இனிமையினால் வைக்கப்பெறுவது என்று முடிக்கலாம்.  இதுவும் பொருத்தமே ஆகும்.

கனத்த இருள்,    கனை  இருள்.  இது முழுமை குறிக்கும்.  முழுமையும் இனிமையே.  திணிந்த இருள்.  திண்> திண்மை.

இனி குறில் நெடில்  பற்றிக் கூறின்,  வா என்ற ஏவல்,  குறுகி வந்தான் என்றாகிறது.    தா என்பது தந்தான் என்றாதல் காண்க. தாள் என்ற சொல்லிற் பிறந்த  சொல்  தளம் என்று குறுகும். குப்பை சேர்ந்திருத்தல் குள் > கூளம் ஆகிறது. தண்ணீர் சேர்ந்திருத்தல்  குள்> குளம் ஆகிறது. இது போதும்.  பழைய இடுகைகளையும் படிக்கவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்.

பகிர்வுரிமை



திங்கள், 16 பிப்ரவரி, 2026

சுதர்சன் என்பதன் பொருள் தமிழ் மூலம்

 சுதர்சன் என்ற சொல், தொன்றுதொட்டுத் தமிழிலும் வழக்குடைய  சொல். பெரும்பாலும் விட்ணுவையும் குறிக்கக்கூடும்.  அழகுடையது,  தோற்றப்பொலிவு கொண்டது என்பர். இதில்  சு, தர்ஷன் என்ற இரண்டு சொற்கள் உள.  

தெய்வ தெரிசனம் என்ற தொடரில் தெரிசனம் ( தெரி+ சன்+ அம்) என்றால் தெய்வம், தெய்வச்சிலை முதலானவை கண்ணுக்குத் தெரிவது அல்லது காட்சி தருவது.  தெரிதல் என்ற வினை தமிழ். இது தர்ஷன் என்று தமிழல்லாத இந்திய மொழிகளில் திரியும்.  சன் என்பது  சு விகுதியும் அன் விகுதியும் இணைந்த இணைப்பு.  சு என்பது சுற்றிலும் அல்லது சூழவும் என்ற பொருளது. அதன் ஒரு சொற்குறுக்கம்:  இங்கு கடைக்குறை போல்வது,  முன்னொட்டாக நின்றது. சு என்பது நாளடைவில் சுபம் அல்லது தீங்கற்றது, மேலானது என்று பொருள்வரத் திரிந்தது. இரண்டும் இந்திய மொழிகள் என்பது பல இடுகைகளில் சொல்லப்பட்டுள்ளது.

இங்கு கண்டவற்றை  விரித்து உணர்ந்துகொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை



வியாழன், 12 பிப்ரவரி, 2026

சர்வம் என்பது

 இதைப் பற்றிச் சற்று விரிவாக இங்கு எழுதியுள்ளோம்.

https://sivamaalaa.blogspot.com/2022/02/blog-post_8.html

ஒரு சரிவில் கொட்டிய நீரனைத்தும் சரிவினடிக்குச் சென்றுவிடுவதால், அடியிற் சென்று மீட்டாலன்றி, எல்லாம் ஓடிவிட்டது என்றுதான் சொல்வர். சரிவிலிருந்து மீட்டல் அரிய ஒன்றே ஆகும்.  இதன் அடிச்சொல் சரு என்பதுதான்.  அரு> சரு> சருவு> சருவம்> சர்வம் என்றானதுதான் இச்சொல். சரு என்பதற்கு முந்திய அடி அரு என்பது கூறினோம். மீட்டல் அரிது  என்பதை அரு என்ற அடி காட்டுகிறது. சரிதல் என்பது  சொன்னவன் பக்கம் சாய்ந்துகொள்வது என்ற பொருண்மையால் ஒத்துக்கொள்ளுதலும் உணர்த்துகிறது.

சர்வம் என்பது சமஸ்கிருதம் என்று வைத்துக்கொள்வோம்.  அப்படியானால் அது சம+ கதம் உடைய சொல் என்று பொருள்.  சம - ஒப்புமையுடன்  கதம் - ஒலித்தல். எதற்கு ஒப்புமையாக என்றால் தமிழுக்கு ஒப்புமையாக என்று பதில் கொள்க. இவ்விரண்டு மொழிகளும் இணைமொழிகள் ஆம். சம் > சம என்பது பின் சம(ஸ்) என்று திரிந்தது. கதம் என்பது கிருதம் என்று திரிந்தது.  இவ்விரண்டையும் சேர்த்தால் '' சமஸ்கிருதம்'' என்ற பெயர் கிடைக்கிறது. என்றால், ஒன்றாக ஒலிக்கும் சொற்கள். இரண்டு மொழிகளின் ஒலியமைப்பும் ஒருப்போல அமைந்தவை என்று வங்காள மொழியறிஞர் எழுதியுள்ளார்.  சுனில் குமார் சட்டர்ஜீ  என்பது அவர் பெயர்.  இப்போது அவர் அப்படி ஏன் எழுதினார் என்று சிந்தித்தபின் இங்கு யாம் விளக்கியதைப் படித்தால் மொழியறிவு வந்துவிடும். இதுபோல பல சொற்களில் உதாரணம் காட்டமுடியும். அதனால்தான் இதையுணர்த அறிஞர்கள்  'தற்சமம்'',  ''தற்பவம்'' என்ற சொற்குறியீடுகள் உண்டாயின.  இதை மறந்துவிட்டு,  சமஸ்கிருதம் ஆரிய மொழி, கூரிய மொழி, கீரிய மொழி என்றெல்லா நினைப்பது  மூடமதேயாகும்.  உதாரணம் என்ற சொல்லைப் பாருங்கள். உது - முன் நிற்பது என்று பொருள். உது ஆ >  என்றால் முன் நிற்பதாக  ஆகுவது என்று பொருள்.  அண்- அண்மி நிற்பது.   அம் - அமைப்பு.  எல்லாம் சேர்த்தால்  ''முன் நிற்பதாக அண்மி நிற்கும் அமைப்பினதான சொல்'' என்று பொருள். அப்படியென்றால் எடுத்துக்காட்டு என்று இச்சொல்லைப் பயன்படுத்துகிறோம்.  தனித்தனியாகப் பிய்த்துப் பார்த்தாலும்,  சம கதம் என்பது புரிகிறதா?    கதம் என்பது:  கத்து,  இடைக்குறைந்து, கது. இதில் அம் சேர்ந்து கதம். இது திரிந்து கிருதம்,  அல்லது கிர்தம் என்றாகும்.  இப்போது சமஸ்கிருதம் என்ற சொல்  கிட்டுகிறது. உதாரணம் என்பதும் இவ்வாறே அறிந்துகொள்ளத் தக்கது.

வெள்ளைக்காரனின் பொய்ச் சரித்திரத்தை நம்பி,   இதை ஆரிய மொழி, இந்தோ ஐரோப்பியம் என்றெல்லாம் கொண்டது ஆய்வின்மையே  ஆகும்.

சர்வம் என்பதும் இவ்வாறே உணர்ந்து கொள்ளத் தக்கது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 9 பிப்ரவரி, 2026

ஜீவன் என்ற சொல்.

 ஜீவன் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். இது சீவித்தல் என்று வினையாகவும் வரும். இதற்குப் பல சொல் தோற்றங்கள் சொல்லப்பட்டிருந்தாலும்,  இதைத் தமிழ் மூலத்தது என்று  ஆய்வாளர் சிலர் கூறியுள்ளனர்.

மனிதன் இறந்தபின் மீண்டும் மறுபிறவி கொள்கிறான் என்பது ஒரு கொள்கையாகும். மறுபிறவியில் நம்பிக்கை இல்லாதார் பலராயினும், நம்புவோரும் பலராவர்.  Lobsang Rampa முதல் பலர் பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி மறுபிறவி உண்டென்று கூறுவர்.  தமிழ்ச் சங்க காலத்திலும் மறுபிறவி நம்பிக்கை உடையோர் பலர் இருந்தனர்.

உயிர் >  யிர் >  ஜிவ் > ஜீவன்,  ஜீவித்தல் என்று வருதல் கூடுமென்பர். இது இலங்கை ஆய்வாளரின் கருத்து.

சீர் வருந்ந >  சீவன்ன  > சீவன் என்று வருதலும் கூடுமென்க.

சீர் மிக்கது என்பது புவி வாழ்வே என்பது இதன் கருத்தாக,  உயிர்> உசிர்> சீர்> சீர்வன்ன >  சீவன் என்றாகுமென்ப.

சிர் > சீர்,  வருந்ந என்பது வருகின்ற  என்பது. இன்று என்ற சொல் இன்னு, இன்னக்கி என்றெல்லாம் பேச்சுமொழியில் வருகிறது. ஆகவே வருகின்ற என்பது வருகின்ன -  வருன்ன ,  இதில் வரு என்பது வ  என்று குறுகும்.  வரு என்ற மூலவடி,  வந்த என்ற இறந்தகால வடிவத்தில், தன் ருகரமிழந்து, வந்த  எனவாதல் அறிக. சீவன் என்பதில் இந்த வன் மட்டும் உள்ளது.  வந்> வன். இதில் அன் விகுதிபோலும் அழகு வந்துவிட்டபடியால், அதையே இறுதிநிலை ஆக்கிவிட்டனர்.

வரு என்ற வினைப்பகுதியும்  வருந்து என்ற வினைப்பகுதியும் இவற்றின் காலவினைத் திரிபுகளுடன் கலந்து மயங்குமாறு விளைதல்,  தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

உயிர் என்ற சொல்லே ஜீவன் என்று வந்தது என்று பிற அறிஞரும் கூறியுள்ளனர்.

தலைச்சொல் இழக்கை பல சொற்களில் வந்துள்ள காட்சி ஆகும். எ-டு:  அரங்கன் - ரங்கன். இனி ரங்கா என்பது விளிவடிவம்.  பண்டை நாட்களில் கீழே நெடுஞ்சாண்கிடையாக  விழுந்தோ, நின்று முன்வாட்டாகச் சாய்ந்தோ வணங்கிய கடவுள், ''சாய்மி''   என்பது சாமி  ஆயிற்று.

சமஸ்கிருத மொழிச்சொற்கள் தமிழிலும் தமிழ்ச் சொற்கள் சமஸ்கிருதத்திலும் கலந்துள்ளன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை.



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சந்தா வாய்தா

 இப்போது சந்தா என்ற சொல்லைப் பார்ப்போம்.

இந்தச் சொல்லில் இரண்டு பகவுகள் உள்ளன.  ஒரு சொல்லின் பகுதிச் சொற்களைத் தாம் பகவுகள் என்று குறிக்கின்றோம். பகவுகள் ஆவன:

அண்> சண்> சண்+தா> சண்தா > சந்தா  ஆகும்.  இதைச்

சண்> சம்>  சந்தா  என்று குறிக்க, இன்னும் தெளிவாகும்.

முழுச்சொற்கள் வாக்கியத்தில் புணர்கையில்  சண்+தா> ச ண்டா என்று வல்லொலி மிக்குப் புணரும்.  சொல்லாக்கத்திலும் கூட இவ்வாறும் வருவதுண்டு. எடுத்துக்காட்டாக,  அண்> சண்>  சண்டை.  இறுதியில் வந்த ''தை'' விகுதி: சொல்லாக்கப் புணர்வில், டை என்று மாறிவிட்டது. தை என்பது இதில் விகுதி யன்று, விகுதி டை தான் என்று வாதிட்டாலும்,  இந்த வாதத்தினால் எந்தப் பெரும்பயனும் விளையப்போவதில்லை. இருவழிகளிலும் இதனை விளக்குதல் கூடுமென்று வைத்துக்கொள்வதில் ஒன்றும் இழுக்காது என்றுணர்க. மொழியில் போதுமான சொற்களின் தொகுதி வேண்டுமென்று முயற்சி செய்யும்போது, இதை எல்லாம் நுணுகி  ஆய்தலினால் பயன் இல்லை. 

''நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 

பயனில  சொல்லாமை நன்று''

என்ற பொய்யாமொழிப் புலவரின் வாக்கினை சிரமேற் கொள்க.

சண்+தை,  சண்+டை என்ற இரண்டு சொற்களிலும், ஒரே அடியிலிருந்து இரண்டு சொற்களைப் படைத்தளித்தல்  திறனே என்று கொள்க.  விகுதிகள்தாம் மாறின.   அடுத்துச்செல்லாமல் சந்தையு மில்லை,  சண்டையும் இல்லை.

பண்டைக் காலத்தில்,  அடுத்துச் சென்றுதான் பணம் கட்டினர்,  சந்தா என்பதற்கு அதுவே பொருள்.  வாய்தா என்பதற்கும் அதுவே பொருள்.  இடம் என்றால் அதற்கு இன்னொரு சொல்: வாய்.  இச்சொல் பலபொருள் உள்ள சொல். இடத்திற்குத் தந்தது  வாய்-தா.   தா என்பது முதனிலைப் பெயராய்த் தருபொருள் குறித்தது.

வாய்தா என்பது  :  வாய் - இடம்;  தா-  தருவது. முதனிலைத் தொழிற்பெயராய், இங்குச் சொல்லின் பகவாய் வந்தது.  நிலவரிக்கு இது பெயராய் வந்து,  இங்கு வாய் - என்பது இடம் என்று பொருள்படும் தமிழ்.   அப்புறம் வாய் என்பது வாயென்னும் முக உறுப்பையும் குறிப்பதால்,  வாயினால் கேட்டுப்பெறுவது என்றும் பொருள்பட்டது. இது அரபுக்களினுடன் ஏற்பட்ட தொடர்பினால்  அங்கும் சென்று வழங்கி,  அரபுச் சொல் என்றும் நினைத்தனர்.

பல தமிழ்மூலங்களை அரபு மொழியிலும் காணலாம்.  அல் காதிப்  என்போர் முன் காலத்தில் தமிழரிடை இருந்த காப்பியக் குடியினர் போல,  நூல்கள் ஓதும் வகுப்பினர்.   ஸ்க்ரைப்  (scribes)  என்று ஒரு குடியினர் இஸ்ரவேலரிடம இருந்தமை போலும் இது. பழைய யூத புராணத்தையும் படித்து இதை அறிந்துகொள்ளலாம்.  பாரிசிகள்,  சாதுசிகள் என்றவர்களும் இருந்தனர்.  Dead Sea Scrolls என்ற நூலையும் படியுங்கள். C J Buckle SJ  எழுதியவையும் படிக்கலாம்.

Sadusee என்ற சொல்லுக்கும்  சதை என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஏதும் நீங்கள் தொடர்பு அறிகிறீர்களா என்பதை எமக்குச் சொல்லுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை

திங்கள், 2 பிப்ரவரி, 2026

விளக்கமார் என்னும் பேச்சுச் சொல்

 விளக்கமார் என்னும் பேச்சுச்சொல் .

இந்த ''விளக்க-மார்''  என்னும் சொல்  நாம் தமிழ் பேசுகின்ற போது நாம் வழங்கும் சொல்லாகும்.  இந்தச் சொல் பிடிக்கவில்லை என்றால், இதே போன்ற பாணியில் அமைந்த ''கூட்டுமார்''  என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலா9ம். செவிக்கினிய சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்ற  கொள்கை உடையவர்களும் உள்ளனர். மனிதன் பேசும் அனைத்துச் சொற்களும் நாவிலிருந்து அல்லது அஃது இயங்கும் வாயிலிருந்து வரும் சொற்கள்தாம். அதாவது இவை நாவொலிச் சொற்கள். இவற்றை ஒலிவடிவச் சொற்கள் என்று இலக்கண நூலார் கூறுவர்.

இந்தச் சொல்லில் வரும் மார் என்ற வடிவம், மலார் என்று அகரவரிசை யுடையாரால் பதிவு செய்யப்பட்டுளது.  மாறு என்பதும் காணப்படுகிறது.  ஆகவே கூட்டுமாறு, கூட்டுமார், விளக்கமார்,  விளக்கமாறு என்று பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. மாறு என்பதும் துடைப்பத்துக்கு வழக்கில் இருந்துள்ளது. 

மலார், மலாறு, மிலாறு என்பவற்றோடு மார் என்பதையும் கூட்டியுரைக்கத் தோன்றுகிறது. மிலார் என்ற வடிவமும் உண்டு.  ''மிலார்கள் தம்மில் பொலிந்தன பவளக்காய்கள்'' என்று பாரதிதாசனார் கவிதையில் வருகிறது. இந்த வடிவமும் அகரவரிசையில் இருந்திருக்கக் கூடும்.  மாறு என்றால் துடைப்பம் என்ற பதிவும் காணப்படுகிறது. எல்லா அகரவரிசைகளையும் பார்க்குமளவுக்கு நூல்கள் கிட்டவில்லை.

மலார் என்பது சிறு கிளைகளை அல்லது குச்சிகளைக் குறிக்கும் சொல். இது மிலார் என்றும் திரியும் என்பது கூறப்பட்டது. மலார் என்றது   பேச்சில் மார் என்று திரிந்துள்ளது. பாத்திரங்களை விளக்குவதற்கு அல்லது துடைத்து அழுக்ககற்றி  வைப்பதற்கு மலார்கள் பயன்பட்டன.  இந்தச் சிறிய இணுக்குகள் மென்மையானவை.  மெல் என்ற அடிச்சொல்லினின்றே  மலார் என்ற சொல்லின் தொடர்பினதான  மில் வருகிறது.  மெல்-மல்- மலார் என்ற திரிபு காணக்கிடக்கின்றது.   அர் என்பது அரு என்பதன் திரிபு.  அரு>அர்.  அரு என்பது சிறு வடிவினவாயவற்றையும் குறிக்கும். மெல்>மில்>மிலார்.   அர் இங்கு ஆர் ஆனது.  அர்> ஆர்: வந்தனர் (அர்> ஆர்) என்பதால் வந்தார். ஆர் என்பது, பன்மையும் ஆகும்.  வந்தார் என்பது பண்டைத் தமிழில் பன்மை, இன்று ஒருமையையும் குறிப்பது  வழுவமைதி என்றனர். மிலார்கள் அருகருகில் இருப்பவை,  அதனால் பொருந்துகின்றன. மிலாறு என்பது மலார் என்றும் வந்துள்ளது.

பழைய இடுகைகளில் பல திரிபுகள் காட்டப்பெற்றுள்ளன.  மெல்>மில்>மிலார்>மிலாறு என்பவற்றோடு கூறப்பட்ட பிறவும் தெளிவாம்,

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை