வியாழன், 7 டிசம்பர், 2023

உசிதம் சொல் தரவு

 இச்சொல்லை ஆய்ந்து இன்று வருவழி கண்டறிவோம்,

உய்தல் என்ற சொல் ஓரளவு பயன்பாடு கண்டுள்ள சொற்களில் ஒன்று. இந்த வினையிலிருந்து உசிதம் என்பதை அடைவுசெய்வோம். உய்தல் என்பதன் பொருளாவன: 1. உயிர்வாழ இயலுதல் 2 காப்பாற்றப் படுதல்  3  இடரின் அல்லது துன்பத்தின் நீங்குதல்  என்பது நாம் இயல்பாய் அறிபொருளாம்.  உசிதம் என்பது உய்தல் சொல்லடி வரவினது ஆயின்,  இடர் அல்லது துன்பமின்றி முடித்தல் (3) என்பது மிகப் பொருந்திய சொல்லாக்கப் பொருளாகும்.

இதன் அமைப்பு இவ்வாறு:

உய் + (இ )+ து + அம் எனின் உயிதம் என்றாகும் (அல்லது உய்தம்.)

இ = இங்கு

து =  உடையது  ( உரிய)

அம் -  அமைப்பு.

இதை வாக்கியப்படுத்தினால்:  இந்தச் ( சூழ்நிலையில் )  துன்பம் நீங்கிவிட உரிய அமைப்பு  என்று பொருள் கிட்டுகிறது.

உயிதம் என்ற மூலவடிவு இல்லாதொழிந்தது.  தமிழன் தன் நூல்களனைத்தையும் பாதுகாத்து வைத்திருக்க இயன்றவனாகில்  இருந்திருக்கும். ஆனால் சிறிது காலத்தின் முன் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகமே எரிந்து சாம்பலானதாகச் செய்தித்தாள்களில் வந்ததே!  என்னென்ன சொற்கள் அழிந்தன என்று  இப்போது சொல்லமுடியுமோ? இவ்வாறு தமிழன் என்ற இவனுக்கு ஏற்பட்ட வரலாற்று இடர்களுக்கெல்லாம் விளக்கம் எவ்வாறு காண்பது.  தென்னாட்டுப் போர்க்களங்க ளெல்லாம்  அளவற்றவை ஆயினவே.  ஆதலின் "உயிதம்" என்பதே மீட்டுருவாக்கம். யகர வருக்கம் சகர வருக்கமாகும் என்பதை முன் இடுகைகளில் கொடுத்துள்ளோம்.

உயிதம் -  உசிதம்  ஆகும்.  உய்தம் > உசிதம் எனினும் ஏற்புடைத்து என்க.

இனி, மிக்க உயரத்தில் வைத்துப் போற்றக்கூடியது என்ற பொருளில்:

உச்சி  > உச்சி + து + அம் >  உச்சிதம் , பின் சகர மெய் இடைக்குறைந்து உசிதம் எனினும் சரிதான்.

உ(ச்)சி >  உசி து  அம் > உசிதம் எனினுமாம்.

இங்கு இது அமையும் என்பது இங்கு+ இது + அம் > இங்கிதம் ஆனது நினைவுக்கு வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின். 

சில திருத்தங்கள்: 07122023 2037

Please refrain from making any changes.

கருத்துகள் இல்லை: