அதி என்பது ஒரு முன்னொட்டு ( prefix) என்று வகைப்படுத்தப் பட்டது எனினும் முழுச்சொல் அன்று. அதிகம் என்ற சொல்லின் முன்பாதி என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் பொருள் :"மிகு" என்பதுதான், அதிமதுரா என்ற சொல்லின் அதி என்பது முன்னொட்டாக வருகிறதைக் கண்டிருப்பீர்கள். அதிவேகம் என்ற சொல்லிலும் அது ஒரு முன்னொட்டாக வருதலை அறியலாம்.
அதிகுணன், அதிகாரம், அதிகாலை, அதிகோரம், அதிகோலம்,அதிசங்கை என்பவற்றிலும் அதி முன்னொட்டு வருதல் காணலாம்.
இதனை ஒன்றின் மேற்பட்ட எண்ணிகையில் விளக்குவதற்கு வழியுள்ளன என்பதை அறிக. அதி என்பது ஒரு சமஸ்கிருத ( சமத்கிருத என்று எழுதுவதுண்டு) ஒட்டுமுன்னி [PREFIX] என்று சொல்லலாம். இதற்குக் காரணம் அதி என்பது ஒட்டிய சொற்கள் பல ஆங்குள்ளன. இதனை உபசர்க்கம் என்றும் கூறுவர்.
கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமிழ் என்ற சொல்லுக்கு ஒரு சொற்பொழிவில் நூறு பொருள்கள் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது போல, பெரும்புலவர்க்கு யாவும் எளிதாகும். ஐயப்பன் என்ற சாமி, பிரம்மன், விட்ணு, சிவபெருமான், வினாயகப் பெருமான், திருவுடைய முருகன் ஆகிய ஐந்து ஒன்றான கடவுள், காரணம் ஐ என்றால் ஐந்து என்று ஒரு பற்றாண்மைசால் புலவர் கூறியது போலவே திறனுடையார் பல்வேறு வகைகளில் கேட்போரைக் கவர்ந்துசெல்ல முடியும். சீவக சிந்தாமணியார் ஒரு வரிக்கு ஒருபொருள் போதருமாமாறு எதுகைகளை அடுக்கியவாறு போல, புலவர்தம் திறம்தான் என்னே என்போம்.
சிங்கப்பூர் என்பது சிங்கம் என்ற இந்தியச்சொல் வருவதால் இந்தியர்களால் அமைக்கப்பட்ட சொல் என்று ஒருவர்கூற, அது உண்மையில் சின்-ஜா-போ என்ற சீனமொழிச் சொல்லின் திரிபு என்று இன்னொருவர் கூற, கேட்பவர் ஒரு முடிவுக்கும் வரவியலாத நிலை வரக்கூடும்.
அதிகம் என்பதை நாம் முன்னர் விரிவரிவனப்புச் செய்துள்ளோம் . ஆயினும் இங்கு ஒரு சுட்டடிச்சொல்லமைப்பாக விளக்குவோம்.
அது - இஃது அஃறிணை ஒருமைச் சொல்.
இ - இங்கு என்று பொருள்தரும் சுட்டடிச் சொல்.
கம் - கடக்கும் அல்லது வரும் என்னும் பொருளிய இடைக்குறை. இதில் "டக்கு" என்ற எழுத்துக்கள் மறைந்தன. இதுவும் தமிழிலக்கணப்படியான சிறந்த விளக்கமே ஆகும். கடந்து இங்கு வந்துள்ளபொருள் இங்கு மிகுதியை உண்டாக்கும். ஆதலின் அதிகம் ஆகிறது.
கடக்கும் என்ற சொல் குறைந்து வரும் இன்னொன்று "வேங்கடம்" என்பது ஆகும். வேம் - இது வேகும் என்ற சொல்லின் குறை. ஆகும் என்பது ஆம் என்று குறைவுற்றது போலுமே ஆம். கடக்கும் என்பது கடம் என்று குறுக்கிப் பயன்பாடு கண்டது. வேக்காளம் மிக்கதான கடக்கும் இடம், வேங்கடம் என்று பெயர் பெற்றது. காரணப் பெயர்.
அவகடம் அல்லது அபகடம்: இங்கும் கடம் என்பது கடத்தற்கரியதொன்றையே குறித்தது. அவம் ஆனதும் கடக்கவேண்டிய அரிய நிலையை உண்டாக்குவதுமாகிய செயல். வ- ப போலி.
மற்ற இடத்தினது இங்கு வருமேல் மிகுதிப்படுதல்.
இன்னும் பல எழுதலாம். உங்களுக்கும் ஓய்வு தேவை.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக